பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு சமூகநீதிக்கு முரணானது: மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Facebook/M.K.Stalin

"முன்னேறிய வகுப்பில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு "வழங்க மத்திய அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பது சமூக நீதிக் கொள்கைக்கு முற்றிலும் முரணானது, அதை நாசப்படுத்தக்கூடிய செயல் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இன்று, (08-01-2019) தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய ஸ்டாலின்,

"மத்தியஅரசின் இந்த முடிவு நீதிமன்றப் பரிசீலனைக்கு முன் நிச்சயமாக நிற்காது.

அரசியல் சட்டத்தின் 15(4) மற்றும் 16(4) ஆகிய பிரிவுகளின்படி "சமூக நிலையிலும், கல்வியிலும் பின்தங்கியவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு"என்று தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. 'பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு' என்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று இதே அவையில்,12.5.1989 அன்று முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றி - அதன் அடிப்படையிலும், கலைஞர் கொடுத்த ஊக்கத்தின் அடிப்படையிலும், அன்று பிரதமராக இருந்த வி.பி.சிங் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி வரலாறு படைத்தார்.அதையடுத்து, திமுக பங்கேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சியில் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, அமைச்சர் அர்ஜுன்சிங் அவர்களின் முயற்சியினால் உயர் கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டோர்க்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

வேலை வாய்ப்புகளில், இட ஒதுக்கீடு மத்திய அரசு அலுவலகங்களில் இதுவரை முழுமையாகப் பின்பற்றப்படாமல், மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரை வஞ்சித்து வருகிறது. 25 வருடங்களுக்கு மேலாகியும் க்ரூப் 'ஏ' பிரிவில் 17 சதவீதமும், க்ரூப் 'பி' பிரிவில் 14 சதவீதமும், க்ரூப் 'சி' பிரிவில் 11 சதவீதமும், க்ரூப் 'டி'பிரிவில் 10 சதவீதமும் மட்டுமே பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு மண்டல் கமிஷன் அடிப்படையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Facebook/M.K.Stalin

"அதுமட்டுமல்ல - மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கிய பிறகு, பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு மத்திய அரசு பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு என்று கொண்டு வரப்பட்ட மத்திய அரசின் ஆணையை 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட பெஞ்ச் ரத்து செய்துள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த நீதியரசர் மறைந்த ரத்னவேல் பாண்டியன் அவர்கள், "பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு எதிரானது"என்று தீர்ப்பளித்துள்ளார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிபி.பி. ஜீவன்ரெட்டி அவர்கள், "சமூகத்திலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள மக்களுக்கும், அந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உதவிட கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு. ஆகவே ஒருவரின் வருமானம் அல்லது சொத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது"என்று தெளிவுபடக் கூறியிருக்கிறார்.

ஆகவே ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக, அரசியல் சட்டத்திற்கு மாறாக இப்படியொரு இட ஒதுக்கீட்டை, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காகக் கொண்டுவந்து மத்திய பாஜக அரசு, பணியில் சேரும் "உரிமை வழங்கப்பட்ட" பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலை வாழ் மக்களின் வாழ்வுடன் விபரீத விளையாட்டைத் துவக்கியிருக்கிறது.ஆகவே, 69 சதவீத இட ஒதுக்கீட்டை வெற்றிகரமாக அமல்படுத்தி வரும் தமிழகத்திலிருந்துமுதல் எதிர்ப்புக் குரல்ஆணித்தரமாக ஒலிக்க வேண்டும். தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - கர்மவீரர் காமராஜர் ஆகியோர் பண்படுத்தித் தந்த வழியில், சமூக நீதியின் நாற்றங்காலாகத் தொடர்ந்து இருந்துவரும் தமிழகத்தின் இந்த சட்டமன்றத்திலிருந்து சமூக நீதியின் கட்டமைப்பை அசைத்துப் பார்க்க எண்ணும் மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை இன்றே நிறைவேற்ற வேண்டும் என்று மிகவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதற்குப் பிறகு சட்டப்பேரவைக்கு வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், "ஒரு பணக்காரன் அவன் தொழில் சம்பந்தமாக ஒரு ஏழையாகப் போய்விட்டால் அதை எந்தக் கணக்கில் எடுத்துக்கொள்வது? பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் ஏதோ பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு - தாழ்த்தப்பட்ட மக்களுக்கு - மலைவாழ் மக்களுக்கு உதவி செய்வது போல ஒரு நாடகத்தை நடத்தி அவர்களைப் பழிவாங்கக்கூடிய வகையில் இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தி நிறைவேற்ற முயற்சிக்கிறார்" என்று குற்றம்சாட்டினார்.

முன்னதாக மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தை எழுப்பியபோது, பதிலளித்துப் பேசிய மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "இதுபோல அதிகாரப்பூர்வமாக எந்தச் செய்தியும் வரவில்லை. அதுபோல் ஒரு சூழ்நிலை வந்தால் அதை நிச்சயமாக நாங்கள் எதிர்ப்போம்" என்று தெரிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி

முன்னதாக, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். "இட ஒதுக்கீடு வழங்கப்படுவதன் அடிப்படை நோக்கம் ஆண்டாண்டு காலமாக சமூக அடிப்படையில் அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை கைத் தூக்கி விடுவது தான். இந்தியாவில் காலங்காலமாக சமூகப் படிநிலையின் அடிப்படையில் தான் மக்களுக்கு கொடுமைகளும், இழிவும் இழைக்கப்பட்டு வந்ததே தவிர, பொருளாதார அடிப்படையில் எந்த ஏற்றத்தாழ்வும் காட்டப்படவில்லை. பல நூற்றாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்த மக்களுக்கு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினருக்கு செய்யப்படும் பரிகாரம் தான் இட ஒதுக்கீடு" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசின் தற்போதைய அறிவிப்பு, சமூகநீதி மற்றும் அரசியலமைப்பு சட்டத்தின் அடித்தளத்தை தகர்க்கும் நோக்குடன் நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

திராவிடர் கழகமும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆனால், தமிழகத்தில் உள்ள பிற கட்சிகள் இது தொடர்பாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: