அலோக் வர்மா வழக்கில் தீர்ப்பு: மீண்டும் சிபிஐ இயக்குநராக்கியது இந்திய உச்ச நீதிமன்றம்

அலோக் வர்மா

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட முன்னாள் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குநராக்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

அலோக் வர்மா தற்போது அலுவலகம் சென்று பணியில் ஈடுபடலாம். ஆனால், தற்போதைக்கு மிகப்பெரிய கொள்கை முடிவுகளை எடுக்கமுடியாது. சிபிஐ இயக்குநரை மாற்றுவதோ, அவரை பணியில் ஈடுபடாமல் முடக்கி வைப்பதோ தேர்நதெடுக்கப்பட்ட உயர் மட்ட குழுவின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக அரசு முடிவெடுக்க சட்டப்படி எந்த அதிகாரமும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் உச்சபட்ச புலனாய்வு அமைப்பான சிபிஐ-இன் மூத்த பொறுப்புகளில் இருந்த இரு அதிகாரிகள் இடையே உண்டான அதிகாரப் போட்டியால், அதன் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருமே கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டிருந்தனர்.

சி.பி.ஐ-இன் பொறுப்பு இயக்குநராக, இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தார்.

சிபிஐ, அதாவது மத்தியப் புலனாய்வு முகமை, ஊழல் பற்றி விசாரணை செய்யும் இந்திய அரசின் முக்கியமான நிறுவனமாகும்.

முன்னதாக, சிபிஐ இயக்குநருக்கான பணிகளில் இருந்து தன்னை விடுவித்தும், கட்டாய விடுப்பில் அனுப்பியும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கு எதிராக அலோக் வர்மா இந்திய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். முக்கியமான வழக்குகளை விசாரிக்கும்போது, அதற்கு தனது ஜூனியரான ராகேஷ் அஸ்தானா லஞ்சம் பெற்றார் என்ற புகாரின் மீது நடவடிக்கை எடுத்த தன்னை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியதற்கு நியாயம் கேட்டு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.

இந்நிலையில் இன்று தனது தீர்ப்பை வழங்கியுள்ளது உச்நீதிமன்றம்.

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் அதன் சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு இடையேயான பிரச்சனையால், நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசுக்கும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியே- முன்னாள் சிபிஐ தலைவர் கார்த்திகேயன் பிபிசி தமிழுக்கு பேட்டி

"நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சரியானது. சிபிஐ தலைமை அதிகாரியை தேர்வு செய்வது, ஒரு கமிட்டியாகும். அதில், பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் பரிந்துரைக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி இருப்பார். இந்த மூவர் குழு அவரை தேர்வு செய்கிறது. அப்படியிருக்க, அலோக் வர்மாவை அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது சரியல்ல. அந்த நடவடிக்கை குறித்தும், அதே குழுதான் முடிவு செய்ய வேண்டும், அரசு அல்ல. ஆகவே, இந்த தீர்ப்பு சரியே. அவர் தனது பணிகளை தொடர்ந்து செய்யலாம். ஆனால், நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளபடி எந்த பெரிய முடிவுகளையும் அவர் எடுக்க முடியாது என்பது குறித்து, அவரே நீதிமன்றத்தை நாடி தகவலை பெற்றுக்கொள்ளலாம்" என்று கார்த்திகேயன் தெரிவித்தார்.

சிபிஐக்குள் நடைபெறும் மோதலில் சம்பந்தப்பட்ட இரண்டு அதிகாரிகள் யார்?

சிபிஐ

பட மூலாதாரம், PTI

சிபிஐயின் இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிபிஐயின் அடுத்த உயரதிகாரி ராகேஷ் ஆஸ்தானாவும்தான் சிபிஐக்குள் எழுந்திருக்கும் இந்த மோதலில் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த வழக்கைத் தவிர இவர்கள் இருவருமே வேறு எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்கள். இவர்களில் வர்மா, 22 வயதிலேயே ஐ.பி.எஸ் அதிகாரி ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடன் பணியில் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் வர்மா தான் அனைவரைவிட வயது குறைந்தவர். சிபிஐ இயக்குநராக பதவி ஏற்பதற்கு முன்னர், டெல்லி காவல் ஆணையர், டெல்லி சிறைச்சாலைகள் டி.ஜி.பி., மிசோரம் மாநிலத்தின் டி.ஜி.பி., புதுச்சேரியின் டி.ஜி.பி., அந்தமான்-நிகோபாரின் ஐ.ஜி. என பல இடங்களில் அலோக் வர்மா பணியாற்றியிருக்கிறார். புலனாய்வு நிறுவனத்தில் எந்தவித அனுபவமும் இல்லாத ஒருவர் இதுவரை சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டது இல்லை என்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது.

1984ஆம் ஆண்டு குஜராத் மாநில பிரிவைச் சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா, பல முக்கிய வழக்குகளை கையாண்டவர். பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் சம்பந்தப்பட்ட கால்நடைத் தீவன மோசடி வழக்கை விசாரித்த குழுவில் வர்மாவும் ஒருவர். குஜராத், கோத்ராவில் ரயில் தீ வைக்கப்பட்ட வழக்கை விசாரித்த குழுவில் இடம்பெற்றவர் ஆஸ்தானா என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அதாவது, பிரதமர் நரேந்திர மோதிக்கு அறிமுகமாகாத புதியவர் அல்ல அஸ்தானா. அதுமட்டுமல்ல, அவர் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது அஸ்தானாவுக்கு பல பொறுப்புகளை வழங்கியிருக்கிறார்.

அஸ்தானாவுக்கு எதிரான வழக்கு என்ன?

சிபிஐ சிறப்புக் குழுவின் விசாரணையில் இருந்து விடுவிக்க ஆஸ்தானா மூன்று கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக ஹைதராபாதை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் பாபு அளித்த புகாரின் பேரில் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அஸ்தானா மீது மோசடி மற்றும் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

துபாயில் வசிக்கும் மனோஜ் பிரசாத் என்பவரின் உதவியுடன் லஞ்சம் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக சதீஷ் பாபு கூறியதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: