சாதிக்கொரு மரபணு: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விளக்கமும், அறிவியல் உண்மையும்

பட மூலாதாரம், facebook
ஒவ்வொரு சாதிக்கும் ஒரு மரபணு உள்ளது என்பதற்கு அறிவியல் ஆதாரங்கள் உள்ளதாக தமிழக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சமீபமத்தில் சென்னையில் நாடார் சமூகத்தால் நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் ''ஒவ்வொரு சாதிக்கும் ஒரு விதமான டி.என்.ஏ உள்ளது'' என்றும் ''அந்த மரபணுவில் குறிப்பிட்ட சாதியின் அடையாளம் இருக்கும்,'' என்றும் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் அவரது இல்லத்தில் அவரை சந்தித்து பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.
ஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது என தான் குறிப்பிட்டதை தட்டையாக புரிந்துகொள்ளக்கூடாது என்று பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் உடனான உரையாடலில் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அறிவியல் உண்மை?
''பொதுவான பாரம்பரியம் மற்றும் வரலாறு ஆகியவற்றை கொண்டுள்ள ஒரு குழுவைச் சேர்ந்த நபர்களுக்கு ஒரே விதமான பண்புக்கூறுகள்(traits) இருக்கவாய்ப்புள்ளது என பல அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. நான் பேசிய கருத்தரங்கம் நாடார் சமூகத்தில் இளம் தொழில்முனைவோருக்கான ஒரு பயிற்சிக் கூட்டம். நாடார் சமூகத்தைச் சேர்ந்த மூத்த தொழிலதிபர்கள் பங்குபெற்ற கூட்டம். அதில் பேசியபோது, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் டிஎன்ஏ இருப்பதைப் போலவே, ஒவ்வொரு சாதிக்கும் டிஎன்ஏ உள்ளது.அதாவது அந்த சாதி குழுவைச் சேர்ந்த நபர்கள் பொதுவான சில பண்புகள், நடத்தைகளைக் கொண்டிருப்பார்கள் என்று கூறினேன்,'' என்றார்.

பட மூலாதாரம், Getty Images
அறிவியல் ஆதாரங்களின் விவரங்களை குறிப்பிட்டு கேட்டபோது, ''நாடார் சமூகத்தைப் பற்றி மட்டுமே கணக்கெடுத்து ஆராய்ச்சி எதுவும் இல்லை. சமீபத்தில் தாமோதரன் என்ற எழுத்தாளரின் 'இந்தியாவின் புதிய முதலாளித்துவவாதிகள்: நவீன தேசத்தில் சாதி, வர்த்தகம் மற்றும் தொழில்' (India's New Capitalists Caste, Business, and Industry in a Modern Nation)என்ற புத்தகத்தை படித்தேன். அதிலிருந்து சில குறிப்புகளை எடுத்தேன். அதேபோல என் வாழ்க்கையில் நான் சந்தித்த, எனக்கு கிடைத்த அனுபவங்களை வைத்து ஒவ்வொரு சாதிக்கும் ஒரு டிஎன்ஏ உள்ளது என்று கூறினேன்,'' என்றார்.
உறவின்முறை அதிகரித்துள்ளது
யூதர்கள் மற்றும் மார்வாரி சாதி மக்களைப் போல அதிக அளவில் இடம்பெயர்ந்துள்ள நாடார் சாதி மக்கள், உலகளவில் பல நாடுகளில் காணப்படுகிறார்கள் என்று கூறிய அமைச்சர், ''எங்கெல்லாம் நாடார் மக்கள் செல்கிறார்களோ, அங்கே அவரகள் சாதிக்கான கட்டமைப்புகளை உருவாக்கிக்கொள்கிறார்கள். உறவின்முறை, மகமை கொடுப்பது, பத்திரகாளியம்மன் கோயில் அமைப்பது என ஒரு கட்டமைப்பை பின்பற்றுகிறார்கள். இந்தியாவில் தற்போது சுமார் 1,800 உறவின்முறைகள் உள்ளன;அமெரிக்காவில்கூட உள்ளது. இந்த சமூதாயத்தைச் சேர்ந்தவர்கள், பெரும்பாலும் இடம்பெயர்ந்து வணிகர்களாக இருப்பவர்கள். உலக நாடுகளில் பல இடங்களில் வணிகம் மூலம் தனது தடங்களைப் பதித்துள்ள நகரத்தார் சமூகத்தைப் போல நாடார் சமூகத்தில் இருப்பவர்களும் பரவியிருக்கிறார்கள் என்று அந்தத் கூட்டத்தில் பேசினேன்,'' என்று கூறினார்.
சாதி பண்புகளை பற்றி பேசவேண்டியதற்கான தேவை தற்போது இருப்பதாக கூறிய அவர், ''ஒரு நாடார் இனத்தைச் சேர்ந்தவர் மளிகைக் கடை, நடத்தினால், அவரது மகன் மளிகைக்கடை தொழிலை துச்சமாக எண்ணி அமெரிக்காவில் உள்ள ஒரு ஐ.டி நிறுவனத்தில் வேலைசெய்யவேண்டும் என்பதை பெருமையாக எண்ணும் நிலைதான் தற்போது உள்ளது. ஆனால் நாடார் இனத்தைச் சேர்ந்த பலர், பல தொழில்நிறுவனங்களை தோற்றுவித்துள்ளனர். அதனால், நாடார் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு, தொழில்முனைவோருக்கான பண்புகள் அவர்களிடம் இருக்கும்போது, அதை மேலும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என குறிப்பிட்டேன். அதுவும் எனக்கு கொடுத்த தலைப்பு தொழில்முனைவோர் பற்றியது என்பதால் குறிப்பிட்டேன்,'' என்றார் பாண்டியராஜன்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சாதி பற்றுதவறில்லை
ஒவ்வொரு சாதியினரும் அவரது சாதிக்கு உரிய பண்புகளாக கருதப்படும் வேலைகளில் மட்டுமே ஈடுபட்டால், அது மீண்டும் குலத்தொழில் முறைக்கு வித்திடாதா என்று கேட்டபோது, ''சாதி பற்று இருப்பதில் தவறில்லை, சாதி வெறி இருக்கக்கூடாது. ஒரு சாதியின் தாழ்வுக்கு மற்றொருவர் காரணம், அவர்களை வேரோடு அழிக்கவேண்டும் என்று எண்ணுவது தவறு. மேலும் சாதி உணர்வு எவ்வளவு உறுதியாக உள்ளதோ அதேபோல தமிழன் என்ற அடையாளத்தில், இந்தியன் என்ற அடையாளத்தில் நாம் உறுதியாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டேன். ஒவ்வொரு சாதிக்கும் தனித்துவம் உள்ளது, அவர்கள் தங்களை உயர்த்திக்கொள்ளவேண்டும்,''என்றார் அவர்.
மேலும் நாடார் சமூக கூட்டங்களில் பங்குபெற்றதுபோலவே ஆதிதிராவிடர், நாயுடு, நகரத்தார், பிராமணர்கள் என பலவிதமான சமுதாய கூட்டங்களுக்கும் சென்றுள்ளதாக கூறிய பாண்டியராஜன், ''நான் ஒரு நாடார் என்பதை மறைத்து வைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் என்னிடம் கிடையாது. விருதுநகரில் சுமார் 40 சதவீதம் நாடார் மக்கள் உள்ளனர், ஆனால் நான் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஆவடி தொகுதியில் வெறும் ஆறு சதவீதிற்கு குறைவாகவே நாடார்கள் உள்ளனர். சாதி அடையாளத்தைவைத்து மட்டுமே நான் எனக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளவில்லை என்பதைதான் தெளிவுபடுத்தவிரும்புகிறேன்,'' என்றார்.
இல்லவே இல்லை

பட மூலாதாரம், Facebook
உண்மையில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு டி.எம்.ஏ இருக்கிறதா என்பதை அறிய மருத்துவர் எழிலனிடம் பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதன் கேட்டபோது, சாதி ரீதியாக மரபணுக்கள் இருப்பதில்லை என்பதோடு, சூழலே ஒரு மனிதனின் தன்மையை உருவாக்குகிறது என்று குறிப்பிட்டார் என்றார் அவர்.
"நிச்சயமாக ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு டி.என்.ஏவெல்லாம் இல்லை. டைஆக்ஸிக் ரிபோ நியூக்ளிக் ஆஸிட் என்பதுதான் சுருக்கமாக டி.என்.ஏ என்று அழைக்கப்படுகிறது. இதில் கிளைக்கோ புரொட்டீன்களும் சில மரபணு அம்சங்களும் மனிதன் உருவானதிலிருந்து உள்ள மூதாதையரின் சில அம்சங்களும் அதில் இருக்கும். மனிதர்களுக்கு 48 குரோமோசோம்கள் இருக்கும். இந்த குரோமோசம்களில், உங்களின் உடல் அம்சம், நோய் வரும் தன்மை, குணநலன்கள் ஆகியவை பதிவுசெய்யப்பட்டபடியே இருக்கும். இது சுற்றுச்சூழலுக்கு ஏற்ப ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்படும். இதில் சில மரபணுக்கள் திடீர் மாற்றங்களை அடையலாம், மாறலாம். அவ்வளவுதான். ஆனால், அமைச்சர் சொல்வதென்னவென்றால், 1,500 வருடங்களுக்கு முன்பு உருவாக்கப்பட்ட சமூகப் படிநிலை, தொழில் ஆகியவை மரபணுக்களில் பதியப்படுகின்றன என்பது முற்றிலும் அறிவியலுக்கு எதிரான விஷயம்," என்றார் மருத்துவர் எழிலன்.
மேலும் அவரிடம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களை தொகுத்து வழங்குகிறோம்.
தகவல் இல்லை
மேலதிக விவரங்களைக் காண Facebookவெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது.Facebook பதிவின் முடிவு
"ஒரு குறிப்பிட்ட சாதி தொடர்ந்து தொழில்சார்ந்து இயங்கும்போது, அதே சாதிக்குள் திருமணங்கள் நடக்கும்போது குறிப்பிட்ட குணநலன்கள் கடத்தப்படுகின்றன என்றுதான் அமைச்சர் சொல்லவருகிறார் எனப் புரிகிறது.. இது சரியா?"
"எந்த அடிப்படையில் அவர் அதைச் சொல்கிறார் எனத் தெரியவில்லை. ஏதாவது அறிவியல் ஆதாரத்தை அவர் சொல்லியிருக்க வேண்டும். சாதி அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மரபணு ரீதியான ஆய்வுகள் இப்படி ஏதாவது முடிவுகளைச் சொல்லியிருக்கிறதா என்று கேட்டால் அப்படி ஏதும் கிடையாது. ஆனால் உண்மையில் அம்மாதிரியான ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்றால், பிறப்பிலேயே குறைபாடுடன் குழந்தைகள் பிறப்பதற்குக் காரணம் சாதிக்குள்ளேயே திருமணம் செய்வதுதான் என்கின்றன. இந்தியாவில் மட்டும் உடல்குறைபாடு, மனநல குறைபாட்டுடன் குழந்தை பிறப்பதற்கு முக்கியமான காரணம் சாதிக்குள்ளும் உட்பிரிவுக்குள்ளும் திருமணம் செய்வதுதான்.
ஒருவருடைய குணநலன்கள் எப்போதுமே மரபணு ரீதியாக நிர்ணயிக்கப்படுவதில்லை. குழந்தை எந்த சூழலில் வளர்கிறது, பெற்றோரின் வளர்ப்பு எப்படி, அந்தக் குழந்தைக்குக் கிடைக்கும் அனுபவங்கள் என்ன, சமூகச் சூழல் ஆகியவைதான் ஒரு மனிதனை வார்க்கிறது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தை அப்படியே பெயர்த்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்காவில் வசிக்கவைப்போம். சாதிய குணநலன்கள் மரபணுக்களில் பதியப் பட்டிருந்தால், அதே சாதி மனநிலையுடன் அமெரிக்காவிலும் மூன்று தலைமுறைக்கு மேல் வசிப்பார்களா என்று பாருங்கள். நான்கு தலைமுறையாக அமெரிக்காவில் வசித்தவர் இங்கே வந்தால், முற்றிலும் நமக்கு வேறாக இருப்பார். ஆக, சுற்றுச்சூழல்தான் மரபணுக்களில் பதியப்படுகிறதே தவிர, ஒரு சமூகத்தின் குணநலன்கள் அல்ல."
"ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து நோபல் பரிசை அதிகம் பெறுவது போன்றவை நடக்கத்தானே செய்கிறது?"
"நீங்கள் யூதர்களைச் சொல்வதாக நினைக்கிறேன். ஆனால், அவர்கள் சமூகம் எப்படி படிக்கிறது, முன்னேறுகிறது என்ற விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அவர்கள் செய்வதையெல்லாம் இன்னொரு சமூகம் செய்தால், அந்த சமூகமும் அதேபோல முன்னேறும். இப்போது சீனர்கள் பல விஞ்ஞான ஆய்வுகளில் ஈடுபடுகிறார்கள். விண்வெளித் திட்டங்களில் ஈடுபடுகிறார்கள். ஆகவே, ஒரு நாடோ, தனி மனிதனோ எப்படி வளர்க்கப்படுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். யூதர்கள் அரசியலிலும் சாதிக்கிறார்கள் என்றால் அவர்கள் நடந்துகொள்ளும்விதம், வளர்ப்பு, பார்வை ஆகியவைதான் முக்கியமே தவிர, பிறப்பு காரணமல்ல என்கிறேன்."

பட மூலாதாரம், Getty Images
"சில குறிப்பிட்ட சாதியினரை பார்த்தவுடன் சிலர் அடையாளம் காணமுடியும் என்கிறார்கள். அமைச்சரின் பேச்சு இம்மாதிரி எண்ணங்களை அடிப்படையாக கொண்டிருக்கலாம் அல்லவா?"
“ஒருவர் இம்மாதிரி சாதியாக இருக்கலாம் என்பதை அனுமானிக்கலாம். ஆனால், உறுதியாக சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் சாதிக்கலப்பு என்பது ஆழமாக நடந்துவிட்டது. மிக துல்லியமாக, ஒருவரை சாதிக் கலப்பே இல்லாதவர் எனச் சொல்ல முடியாது. மக்கள் தொகை பெருக்கம், பஞ்சம், இடப்பெயர்வு, படையெடுப்புகள் ஆகியவற்றால் மரபணுக்கள் பலவாறாக கலந்திருக்கின்றன. இதில் ஒரு குறிப்பிட்ட சாதியின் மரபணு என்று ஒன்றைப் பிரித்தெடுக்கவே முடி.யாது.
நீங்கள் ஒருவரது முக அடையாளம் குறித்துக் குறிப்பிடுகிறீர்கள் என்றால், அதற்கு சூழல்தான் காரணம். இங்கு சூரிய வெப்பம் அதிகமாக இருப்பதால் மெலனின் கருநிறமடைகிறது. ஆனால், நம்மில் ஒருவர் சில வருடங்கள் பனிபெய்யும் நாட்டில் இருந்தால் அவர் வெளுப்பாக இருப்பார்.
ஜப்பானில் அணுகுண்டு வீச்சு நடந்த பிறகு பிறந்த குழந்தைகள் வளர்ச்சி குன்றி,குட்டையாகப் பிறந்தனர். ஆனால், இப்போது பிறக்கும் குழந்தைகள் மிக உயரமாக வளர்கிறார்கள். ஆக, சூழல் தாக்கம் மிக முக்கியமானது.
கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் நகர்ப்புறத்தில் வேலைக்காக வந்து சேர்கிறார் என வைத்துக்கொள்வோம். நான்கு தலைமுறைகளுக்குப் பிறகு, அவரது சாதியைச் சேர்ந்த, அதே கிராமத்தில் வசிப்பவரோடு ஒப்பிட்டால் முற்றிலும் வேறுமாதிரி இருப்பார். ஒரு குடும்பம் அமெரிக்காவுக்குச் சென்று நான்கு தலைமுறை வசித்தால் அந்தக் குடும்பத்தில் பிறக்கும் குழந்தையும் அவரது சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு இங்கு பிறந்த குழந்தையும் வேறு மாதிரி இருக்கும். ஆக, சூழல், உணவு ஆகியவைதான் முக அமைப்பை, உடல் அமைப்பை மாற்றுகின்றன.
அம்பேத்கர் சொன்னதைப் போல, சாதி என்பது ஒரு மனநிலை. அது மரபணுக்களில் இருப்பதாக சொல்வது சாதி பார்ப்பவர்கள் சொல்லும் நியாயம்தான்.
இந்தியாவில் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி வராததற்குக் காரணம், சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு பெரிய வளர்ச்சி வராததற்குக் காரணம், சாதிதான் அடிப்படையான காரணம். அப்படியிருக்கும்போது ஒரு அமைச்சர் தன் படிப்பை மீறி இப்படி சொல்லலாமா?” என்றார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












