தெலங்கானா சட்டமன்றத் தேர்தல்: சந்திரசேகர ராவின் வெற்றிக்கான காரணங்கள்

தெலங்கானா சட்டமன்றத் தேர்தல்: சந்திரசேகர ராவின் வெற்றிக்கான காரணங்கள்

பட மூலாதாரம், TRSPARTYONLINE/FACEBOOK

    • எழுதியவர், பிரவீன் காசம்
    • பதவி, பிபிசி தெலுகு

கடந்த 7ஆம் தேதி நடைபெற்ற தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் 88 தொகுதிகளை கைப்பற்றிய தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கிறது.

தனது பதவிக்காலத்திற்கு முன்னதாகவே சட்டசபையை கலைத்து தேர்தலை எதிர்கொள்வதற்கு அந்த கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் எடுத்த முடிவு நல்ல பலன்களை அளித்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தின் விவசாயிகள், சமூகத்தின் மற்ற விளிம்புநிலை மக்களை முன்வைத்து டி.ஆர்.எஸ் கட்சியால் முன்னெடுக்கப்பட்ட நலத்திட்டங்கள் அக்கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

தெலங்கானாவின் ஊரகப் பகுதிகளில் பதிவாகியுள்ள வாக்கு சதவீதத்தை பார்க்கும்போது சந்திரசேகர ராவின் வெற்றியில் விவசாயிகள் மற்றும் ஊரகப் பகுதிகளை சேர்ந்த வாக்காளர்களின் பங்கு குறித்து அறிய முடிகிறது.

தெலங்கானா சட்டமன்றத் தேர்தல்: சந்திரசேகர ராவின் வெற்றிக்கான காரணங்கள்

பட மூலாதாரம், FACEBOOK/KCR

குறிப்பாக, டி.ஆர்.எஸ்-ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட 'ரைத்து பந்து', 'ரைத்து பீமா' ஆகிய அரசு நலத்திட்டங்கள் அம்மாநில விவசாயிகளிடையே சந்திரசேகர ராவுக்கு நற்பெயரை பெற்று தந்தன. அதுமட்டுமின்றி, விவசாய பயன்பாட்டிற்காக 24 மணிநேரமும் மின்சாரம் அளிக்கும் திட்டம், நீர்ப்பாசன திட்டங்களான மிஷன் காக்கடியா, காலேஸ்வரம் மூலம் தண்ணீர் வசதியை உறுதிப்படுத்துவது போன்றவை சந்திரசேகர ராவுக்கு விவசாய சமூகத்தினரின் வாக்குகளை பெற உதவி புரிந்தது.

விவசாயிகளுக்கு மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 'மிஷன் பகிரதா' என்னும் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டது.

மூத்த குடிமக்கள் மற்றும் விதவைகளுக்கான உதவித்தொகை திட்டங்களும் சந்திரசேகர ராவுக்கு மக்களிடையே நற்பெயரை ஏற்படுத்தி தந்தது.

டி.ஆர்.எஸ்-இன் சில சட்டமன்ற உறுப்பினர்கள் மீது மக்களிடையே எதிர்ப்பு நிலவினாலும், அதை பொருட்படுத்தாது இரண்டாவது முறையாக வாய்ப்பு வழங்கியது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தவில்லை.

தெலங்கானா சட்டமன்றத் தேர்தல்: சந்திரசேகர ராவின் வெற்றிக்கான காரணங்கள்

பட மூலாதாரம், Getty Images

மக்களிடையே எதிர்ப்பு காணப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள் இத்தேர்தலில் தோல்வி அடையாவிட்டாலும், சென்ற சட்டமன்றத் தேர்தலில் பெற்றதை விட குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசின் நலத்திட்டங்கள், வேட்பாளர்களின் பிரசாரம் போன்றவை மட்டும்மல்லாது சந்திரசேகர் ராவ் மீதான மக்களின் தனிப்பட்ட எண்ணமும் இந்த வெற்றிக்கு காரணமாக கருதப்படுகிறது.

ஆந்திரப்பிரதேசத்திலிருந்து பிரிந்து தெலங்கானா உருவாவதற்கு சந்திரசேகர் ராவ் மேற்கொண்ட தொடர் உண்ணாவிரத போராட்டம் டி.ஆர்.எஸ் இரண்டாவது முறையாக ஆட்சியமைப்பதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது.

சந்திரசேகர ராவ் மிகப் பெரிய கூட்டங்களில் மட்டும் பங்கேற்காமல் மாநிலம் முழுவதும் பயணம் செய்து 100க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் நேரடியாக பிரசாரத்தில் ஈடுபட்டது மக்களிடையே நல்லெண்ணத்தை உண்டாக்கியது.

ஆந்திராவிலிருந்து குடிபெயர்ந்து தெலங்கானாவில் வாழும் மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் காங்கிரஸ்-தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணியை தோற்கடித்து டி.ஆர்.எஸ் வெற்றிபெற்றுள்ளது முக்கியமானதாக கருதப்படுகிறது.

தெலங்கானா சட்டமன்றத் தேர்தல்: சந்திரசேகர ராவின் வெற்றிக்கான காரணங்கள்

டி.ஆர்.எஸ் தனது முதல் ஆட்சிக்காலத்தின்போது செய்த நலத்திட்டங்கள் மட்டுமல்லாது, இந்த தேர்தலில் நீர்ப்பாசனம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் அளித்த வாக்குறுதிகள் மீது மக்கள் வைத்த நம்பிக்கையையே இந்த முடிவுகள் பிரதிபலிப்பதாக கருதப்படுகிறது.

டி.ஆர்.எஸ் இரண்டாவது முறையாக ஆட்சியமைப்பது, அந்த கட்சி சரியான பாதையில் பயணிக்கிறது என்பதை மக்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்றே காட்டுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது டி.ஆர்.எஸ் அளித்து நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளான இலவச வீடு வழங்கும் திட்டம், ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, ஆரம்பப்பள்ளி முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி, தலித்துகளுக்கு மூன்று ஏக்கர் விவசாய நிலம் குறித்து மக்கள் அதிகம் கவலைகொள்ளவில்லை என்பதையும் இந்த முடிவுகள் காட்டுகின்றன.

கே.சி.ஆருக்கு நிகரான நிலையான தலைவர் எதிர்க்கட்சியில் இல்லாததும் மக்கள் இக்கட்சியை இரண்டாவது முறையாக தேர்தெடுத்ததற்கான காரணமாக கருதப்படுகிறது.

கடந்த காலத்தில் தனது பரம எதிரியாக விளங்கிய தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்த காங்கிரஸின் முடிவு தவறானது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: