ஐந்து மாநில தேர்தல்: வினோதமான வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் கட்சிகள்

மாட்டு சாண வறட்டி

பட மூலாதாரம், Pacific Press

    • எழுதியவர், விவேக் ஆனந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தற்போதைய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

தெலங்கானா, மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் காங்கிரஸ், பாஜக , டிஆர்எஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.

தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி நேற்றைய தினம் தமது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

ஒரு லட்சம் வரையிலான விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம்; வேலையில்லாத இளைஞர்கள் இளம்பெண்ணுக்கு மாத ஊக்கத்தொகையாக ரூ.3016 வழங்கப்படும்; நிலம் வைத்திருக்கும் ஏழைகளுக்கு வீடு கட்டிக்கொள்ள 5-6 லட்ச ரூபாய் பணம் வழங்கப்படும் என டிஆர்எஸ் தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப், ஏழு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி, இளநிலை அல்லது அதற்கு மேற்பட்ட படிப்பை பயிலும் மாணவிகளுக்கு 50 சதவீத மானியத்தில் ஸ்கூட்டி வழங்கப்படும் என பாஜக தெலங்கானாவில் அறிவித்துள்ளது.

2022க்குள் ஏழைகளுக்கு இலவச வீடு , வீடு கட்டித்தரப்படும் வரை மாதம் ஐந்தாயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ3116, ஏழை பெண்களுக்கு ஒரு 'துலா' தங்கம் மற்றும் ஒரு லட்சம் பணம், பண்டிகை நேரங்களில் ஏழைகளுக்கு ஒவ்வொரு வருடமும் இலவச பசுக்கள் வழங்கப்படும் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கரில் ஆட்சிக்கு வந்த பத்து நாள்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு மாதமும் ஒரு ரூபாய் விலையில் சுமார் 35 கிலோ அரிசி வழங்கப்படுமென்றும் மது விற்பனை தடை செய்யப்படுமென காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல்

பட மூலாதாரம், Hindustan Times

சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகள், 60 வயதுக்கு மேற்பட்ட நிலமற்ற விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பென்சன் வழங்கப்படும் என சத்தீஸ்கரில் பாஜக அறிவித்துள்ளது

ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக கட்சி வரும் தேர்தலில் வென்றால் மாநிலத்தின் 21 வயதுக்கு மேற்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் ஐந்தாயிரம் தரப்படும் என்கிறார் அம்மாநில முதலமைச்சர் வசுந்தர ராஜே.

காங்கிரஸ் கட்சி ''ராகுல் மாடல்'' அடிப்படையில் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளதாக கூறுகிறது. பாஜக அரசால் மூடப்பட்ட பல்கலைகழகங்கள் திறக்கப்படும்; உள்ளாட்சி தேர்தல்களில் குறைந்தபட்ச கல்வித் தகுதி வேண்டும் எனும் விதி நீக்கப்படும். பெண்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படும் என்கிறது காங்கிரஸ் கட்சியின் அறிக்கை.

மத்திய பிரதேசத்தில் பாஜகவிடம் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துவரும் காங்கிரஸ் இந்த முறை தனது தேர்தல் அறிக்கையில் சம்ஸ்கிருத மொழியை ஊக்குவிக்கும் திட்டம் , ராமர் பாதையை அமைக்கும் திட்டம் , ஆன்மீகத்துறை அமைக்கும் திட்டம், கோ மூத்திரம் மற்றும் மாட்டு சாண வறட்டி போன்றவற்றை வணிகநோக்கில் அதன் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவரித்திருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: