You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகர் விஜயை கண்டு அ.தி.மு.க. அஞ்சுகிறதா? - விளக்கும் அமைச்சர் ஜெயக்குமார்
நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி: "நடிகர் விஜயை கண்டு அ.தி.மு.க. பயப்படுகிறதா?"
'மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஜெயலலிதா குறித்து கட்டுரை எழுதும்போது அவரை கோமளவள்ளி என குறிப்பிட்டுதான் எழுதுவார். அதனால் அந்த பெயர் மக்கள் மனதில் பதிந்து விட்டது. அந்த பெயரை வேண்டுமென்றே சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்திற்கு சூட்டி இருப்பது திட்டமிட்ட சதி' என்று ஹலோ எப்.எம். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.
"ஒருவர் மறைந்த பிறகு அவரைப்பற்றி விமர்சிப்பது அநாகரிகம் என குறிப்பிட்ட ஜெயக்குமார் ஜெயலலிதாவின் மறைவால் திரைத்துறையினருக்கு குளிர் விட்டு போய்விட்டது என்றார். இப்போது இருக்கும் தமிழக அரசு நடிகர் விஜயை கண்டு பயப்படுகிறதா? அவரை எதிர்க்க அரசுக்கு தைரியம் இல்லையா? என கேள்வி எழுப்பியபோது, தலைவா படம் வெளியானபோது விஜய் எவ்வளவு பணிவாக பேசினார் என்பதற்கான வீடியோ காட்சிகள் இப்போதும் உள்ளன. இந்த படத்தில் ஜெயலலிதாவை இழிவுபடுத்துவது போல் செய்தல் கூடாது என்றார்" என்கிறது அந்நாளிதழ் செய்தி.
தினமணி: 'பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் பின்னடைவு'
பண மதிப்பிழப்பு மற்றும் சரக்கு-சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) ஆகிய இரு நடவடிக்கைகளே, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் கடந்த ஆண்டு (2017) பின்னடைவு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.
மேலும், தற்போது 7 சதவீதமாக இருக்கும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது, தேசத்தின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியதாக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார் என்கிறது அந்நாளிதழ்.
அமெரிக்காவின் பெர்க்லே நகரில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், "இந்தியாவின் எதிர்காலம்' என்ற தலைப்பில் அவர் உரையாற்றியதாவது, "கடந்த 2012 முதல் 2016 வரையிலான 4 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வேகமான வளர்ச்சியைக் கண்டது. ஆனால், அதன் பிறகு அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட "பண மதிப்பிழப்பு' மற்றும் "சரக்கு-சேவை வரி விதிப்பு' ஆகிய இரு நடவடிக்கைகள் இந்தியாவின் வளர்ச்சியில் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தின.
உலக பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக உள்ள இந்தியா, திறந்த நிலை பொருளாதாரத்தை கொண்டுள்ளது. அதனால், உலக பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால், இந்திய பொருளாதாரமும் அதிகமாக வளரும்.
ஆனால், 2017-ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளாதாரம் வளர்ந்து வந்த நிலையில், ஆச்சரியப்படும் வகையில் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கையால் இந்தியா அந்த பின்னடைவைச் சந்தித்தது.
அவற்றின் தாக்கங்களில் இருந்து மீண்டு தற்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்திய பொருளாதாரம் திரும்பியுள்ளது. எனினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வானது, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு நெருக்கடி ஏற்படுத்துவதாக உள்ளது. ஏனெனில், இந்தியா தனது எரிசக்தி தேவைகளுக்காக அதிகளவு எண்ணெயை இறக்குமதி செய்கிறது என்று உரையாற்றினார் என தினமணி நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
இந்து தமிழ்: "ஆடம்பரமான வசதி கொண்ட 'ரயில் சலூன் கோச்'"
ஓடும் ரயிலில் பிறந்த நாள் விழா, திருமண தம்பதிகள், குடும்பத்தினர் சுற்றுலா செல்ல ஆடம்பரமான வசதி கொண்ட 'ரயில் சலூன் கோச்' மக்களின் பயன்பாட்டுக்கு, தெற்கு ரயில்வேயில் விரைவில் இணைத்து இயக்கப்பட உள்ளது.
விரைவு ரயில்களில் ரயில்வே உயர் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்தி வந்த 'சலூன் கோச்' எனப்படும் ஆடம்பரமான ரயில் பெட்டிகளில் இனி பொதுமக்களும் பயணம் செய்யலாம் என மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த ஆண்டு அறிவித்தது.
ஏற்கெனவே, ரயில்வே வாரியத் தலைவர், பொது மேலாளர், கோட்ட மேலாளர் ஆகிய உயர் அதிகாரிகள் ஆய்வுக்குச் செல்லும்போது இந்த 'சலூன் கோச்'-ஐ பயன்படுத்துவார்கள்.
ஏ.சி வசதி கொண்ட குளிரூட்டப்பட்ட இந்தப் பெட்டிகளில் வரவேற்பறை, 2 படுக்கையறைகள், கழிவறை, சமையலறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்திய ரயில்வேயில் மொத்தம் 336 'சலூன் கோச்'கள் உள்ளன. அவற்றுள் 62 'சலூன் கோச்'களில் ஏசி வசதியுள்ளது.
இவை தற்போது படிப் படியாக ஐஆர்சிடிசியிடம் ஒப்ப டைக்கப்பட்டு, அதன்பிறகு மக்களின் பயன்பாட்டுக்கு கொண் டுவரப்படுகிறது. இதுவரையில் 8 சலூன் கோச்.கள் ஜெய்ப்பூர், கோவா, ஹவுரா உட்பட பல்வேறு இடங்களுக்கு இயக்கப்படு கின்றன.
அடுத்தகட்டமாக தெற்கு ரயில் வேயில் சென்னையில் இருந்து இயக்கப்படும் ரயிலில் சுற்றுலாவுக் காக 'சலூன் கோச்' இணைத்து இயக்கப்பட உள்ளது." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது
இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள், "வழக்கமாக ரயில்களில் பயணம் செய்வதைக் காட்டிலும் இந்தப் பெட்டிகளில் மக்கள் பயணம் செய்யும்போது புதிய அனுபவத்தைப் பெற முடியும். படுக்கை அறைகள், ஓய்வறைகள், உணவகங்கள், கழிப்பறைகள் என பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்தப் பெட்டிகளில் சுற்றுலா பயணத்துக்கு ஏற்றவாறு சில மாற்றங்களையும்செய்துள் ளோம்.உள்ளே பயணம் செய்யும்போது வெளிப்புற அழகைப் பார்க்கும் வகையில் பின்புறம் கண்ணாடி யால் ஆன ஜன்னல்கள் அமைக் கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 6 பேர் பயணம் செய்யலாம். இவர்களுடன் குழந்தைகளையும் அழைத்துச் செல்லலாம். இந்த 'சலூன் கோச்'ஐ முன்பதிவு செய்து பயணம் செய்ய ரூ.2 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது." என்று கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது இந்து தமிழ் நாளிதழ்.
"பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு"
தருமபுரி மாவட்டம் சிட்லிங் மலைக் கிராமத்தில் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவி உயிரிழந்ததால் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழின் மற்றொரு செய்தி.
"தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் கோட்டப்பட்டி அடுத்த சிட்லிங் மலைக் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலா ளியின் 16 வயது மகள் பாப்பிரெட்டி பட்டியில் தங்கி அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த மாணவி, கடந்த 5-ம் தேதி இயற்கை உபாதைக்காக வீட்டின் அருகே மறைவான பகுதிக்கு சென்ற போது, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சதீஷ், ரமேஷ் ஆகி யோர் மாணவியை பின் தொடர்ந்து சென் றனர். பின்னர் அவரை பலவந்தமாக ஆற்றோடை பகுதிக்கு தூக்கிச் சென்று வாயில் துணியை அடைத்து மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அப்பகுதியில் ஆள் நடமாட்டம் தெரிந்ததால் இருவரும் மாணவியை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். மயங்கிக் கிடந்த மாணவியை கிராம மக்கள் மீட்டு வீட்டில் சேர்த்தனர். வெளியில் சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பிய பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மாணவி கூறினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கோட்டப்பட்டி போலீஸில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தால் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவிக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி மாணவி நேற்று இறந்தார்.
இதையடுத்து, மாணவி உயிரிழப் புக்கு காரணமானவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக் கோரி மாணவியின் உறவினர்கள் நேற்று சிட்லிங் கிராமத் தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோட்டப்பட்டி போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர்." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "உண்மை தொண்டன் கோபப்படுவான்: எடப்பாடி பழனிசாமி"
இலங்கை நாடாளுமன்ற கலைப்பை, ஜனநாயக படுகொலை என விமர்சித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சர்கார் சர்ச்சை குறித்து, " நலத்திட்டங்களை விமர்சித்தால், உண்மை தொண்டன் கோபப்படதான் செய்வான்" என்று கூறினார் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.
அதேநேரம், திரையரங்களில் வன்முறையில் ஈடுபடுவோர் எங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :