பெரிய அளவில் குறைந்துள்ள பெண் பிறப்புறுப்பு சிதைப்பு சடங்கு: தொடரும் பழமைவாதம்

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

பெண் பிறப்புறப்பு சிதைப்பு

பெண் பிறப்புறுப்பு சிதைப்பு செயலானது ஆப்ரிக்காவில் பெரிய அளவில் குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த சடங்கு இன்னும் தொடர்வதாகவும் ஆய்வு கூறுகிறது. இது ஒரு வழக்கமாக அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது 'மனித தன்மையற்ற செயல்' என்று கூறி செயற்பாட்டாளர்கள் போராடி வந்தனர். சிறுமிகளின் பெண் உறுப்பின் வெளிப்புறம் வெட்டப்படுவது அல்லது வெளித்தோல் அகற்றப்படுவதுதான் இந்த பழமையான சடங்கு. இதை ஒரு மனித உரிமை மீறல் என்று ஐ.நா கூறுகிறது. இதனால் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படும்.

ஆப்ரிக்காவில் சீனா பாலம்

சீன முதலீட்டில் கட்டப்பட்ட 750 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய பாலத்தை மொசாம்பீக் பிரதமர் ஃபிலிப்பி நியூஸி திறந்து வைத்தார். 150 மீட்டர் உயரம் கொண்ட இந்த பாலத்திற்கான கட்டுமான பணிகள் 2014ஆம் ஆண்டு தொடங்கியது. வடக்கு மற்றும் தெற்கு மப்புட்டோ வரிகுடாவை இணைக்கும் வண்ணம் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. இதுநாள் வரை படகு போக்குவரத்தே இந்த இரு இடங்களையும் இணைத்தது.

பழமையான கல்லறைகளில் பூனை மம்மிகள்

எகிப்தில் பழமையான கல்லறைகளில் நன்கு பதப்படுத்தப்பட்ட பழமையான மம்மிகளை தொல்லியல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை 4000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாமென இவர்கள் கணிக்கிறார்கள்.

கலிஃபோர்னியா காட்டுத் தீ

வடக்கு மற்றும் தெற்கு கலிஃபோர்னியாவை சூழ்ந்துள்ள காட்டுத் தீயின் காரணமாக இதுவரை குறைந்தது 11 பேர் பலியாகி இருப்பர் என கூறப்படுகிறது. 2,50,000க்கும் அதிகமான மக்கள் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுக்காப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மறு வாக்கு எண்ணிக்கை

அமெரிக்கா இடைக்கால தேர்தலில் ஃப்ளோரிடாவில் இரு வேட்பாளர்கள் இடையே இழுபறி இருந்ததை அடுத்து மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத முடிவுகளில் ஜனநாயக மற்றும் குடியரசு வேட்பாளர்கள் இடையே வாக்கு வித்தியாசம் 0.5 சதவீதம் மட்டுமே இருப்பதாக ஃப்ளோரிடா உள்துறை செயலாளர் கென் தெரிவிக்கிறார். இந்தத் தேர்தலை ஜனநாயக கட்சியினர் திருட முயற்சிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :