You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கலிஃபோர்னியா காட்டுத்தீ: நாசமான வீடுகள்; 9 பேர் பலி
தென் கலிஃபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, மலிபுவில் உள்ள கடற்கரை விடுதி ஒன்றினை மொத்தமாக அடித்துச் சென்றுள்ளது. இந்த விடுதிக்கு ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலரின் வீடுகள் இங்குள்ளன.
இந்தத் தீயினால் கட்டடங்கள் எரிக்கப்பட்டு, குடியிருப்பு வாசிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இப்பகுதிக்கு சற்று வடக்கே ஏற்பட்டுள்ள மற்றொரு காட்டுத்தீயானது, பேரடைஸ் நகரை மொத்தமாக அழித்துள்ளது. இதில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 35 பேரை காணவில்லை.
கலிஃபோர்னியாவில் மொத்தம் 3 பெரிய தீ பற்றிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
வடக்கில் கேம்ப் தீ, தெற்கில் வூஸ்லி தீ மற்றும் ஹில் தீ ஆகியவை கடுமையான காற்று வீசுவதால் வேகமாக பரவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதிகளில் இருந்து இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
"இந்த தீ ஏற்படுத்தியுள்ள சேதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு உள்ளது" என கலிஃபோர்னியா கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வூஸ்லி தீ எங்கு பரவுகிறது?
மத்திய லாஸ் ஏஞ்சல்ஸின் வட-மேற்கில் இருந்து 40 மைல்கள் தொலைவில் உள்ள ஆயிரம் ஓக் பகுதியில் இத்தீப்பிழம்பு கடந்த வியாழனன்று தொடங்கியது. மற்றொரு தீப்பிழம்பான ஹில் தீயும் இதே பகுதிக்கு அருகில் அதே நேரத்தில் ஆரம்பித்தது.
வெள்ளிக்கிழமையன்று நெடுஞ்சாலை 101ஐ தாண்டி கடற்கரையை நோக்கி இத்தீ பரவத் தொடங்கியது. தற்போது 35,000 ஏக்கர் நிலப்பரப்பில் தீ பரவியுள்ளது.
"கட்டுக்கடங்காத தீ, மலிபுவின் குடியிருப்பு பகுதிகளை நோக்கி செல்கிறது" என அங்குள்ள அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
"பொதுமக்கள் அனைவரும் நகரத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மலிபு மற்றும் அதன் அருகில் உள்ள கலஸ்பஸில் பல்வேறு திரை நட்சத்திரங்களின் வீடுகள் உள்ளன.
கேம்ப் தீ எங்குள்ளது?
ப்ளுமஸ் காட்டில் தொடங்கிய தீ 20,000 ஏக்கர் நிலப்பரப்பை எரித்து, பேரடைஸ் நகரையும் விட்டுவைக்கவில்லை. 6,700க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் தொழில்கள் நாசமாக்கப்பட்டுள்ளதோடு, உயிருக்கு அஞ்சி அங்கிருந்த மக்கள் தப்பியோடினர். தீ மிக வேகமாக பரவிய காரணத்தினால், சிலர் தங்கள் கார்களை விட்டுவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
எரிந்த கார்களில் 5 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக கவுண்டி ஷெரிஃப் கொரி ஹொனியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் 3 பேரின் உடல்கள் வீடுகளுக்கு வெளியேவும், ஒரு உடல் வீட்டினுள்ளும் கண்டுபிடிக்கப்பட்டது.
35 பேரை காணவில்லை என்றும் 3 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
"நிலைமை மோசமாக உள்ளது. இவ்வாறு நடக்கும் என்று நீண்ட காலமாக அஞ்சி வந்தோம்"
மூன்று தீப்பிழம்புகளில் மொத்தம் 16 இடங்களில் தீ எரிந்து வருகிறது. வட கலிஃபோர்னியாவுக்கு சிவப்பு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :