You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வழக்கு தொடர முடிவு
இலங்கை நாடாளுமன்றத்தை வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் கலைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டார்.
இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமென்று வர்த்தமானி அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வர்த்தமானி அறிவிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு முரணாக ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகியுள்ளதாக பல தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
"19வது திருத்த சட்டத்திற்கு அமைவாக ஜனாதிபதியால் இப்போது நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. இதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும். உடனடியாக யாரும் நீதிமன்றத்தை நாடக்கூடாது என்பதற்காகவே வெள்ளிக்கிழமை நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைக்கும் அறிவிப்பை மைத்திரிபால சிறிசேன வெளியிட்டார்."
இதனால் இரண்டு நாட்கள் தாமதப்படுத்தப்படுகிறது எனவும் நான் மட்டுமல்ல இன்னும் பல சட்டத்தரணிகளும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர். நாளை மறுநாள் திங்கள்கிழமை உயர்நீதிமன்றத்தை நாடுவேன் என சுமந்திரன் தெரவித்தார்.
கடந்த 26ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தையும் நவம்பர் 14ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 113 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் போதிய எம்.பிக்களின் ஆதரவை பெற மஹிந்த தரப்பினர் மும்முரமாக முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவை மஹிந்த தரப்புக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தன.
அரசியலில் நேரெதிர் துருவங்களான தமிழ் தேசிய கூட்டணி, ஜனதா விமுக்தி பெரமுன ஆகியவற்றின் தலைவர்கள் சந்தித்து பேசியதுடன், ஜனநாயகத்தை காப்பாற்ற ஒத்துழைக்கப் போவதாகவும் அறிவித்தனர்.
புதிய அரசை உருவாக்க நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாததால் சிறிசேன-ராஜபக்ஷ கூட்டணி இவ்வாறு செய்வதாக பிபிசி சின்ஹலா செய்தியாளர் அசாம் அமீன் தெரிவிக்கிறார்.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி, பொதுத் தேர்தலுக்கு பதிலாக நாடாளுமன்ற ஓட்டெடுப்பையே விரும்பும் என அவர் மேலும் கூறுகிறார்.
எதிர்ப்பு
நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயல் சட்டவிரோதமானது, அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று ஐக்கிய தேசிய கட்சி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
நாட்டில் ஜனநாயகத்தின் மேன்மையை உறுதிசெய்யும் வகையில் இதை எதிர்த்து நாங்கள் போராடுவோம் என்றும் அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தான் உண்மையான ஜனநாயகத்தில் எப்போதும் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், மக்களின் விருப்பம் எப்போதும் மரியாதைக்குரியது, அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் கருத்து கேட்கப்படாமல் நாடாளுமன்ற தேர்தலை நடத்தமுடியாது என்று இலங்கை தேர்தல் ஆணையக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் சகோதரரும், மூத்த ஊடகவியலாளரான சுனந்தா தேசப்பிரிய ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்கா கவலை
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அமெரிக்காவின் மத்திய மற்றும் தெற்காசிய விவகாரத்துறை செயலகம் கவலை தெரிவித்துள்ளது. இதனால் அரசியல் நெருக்கடி அதிகாகும் என அதன் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்திரத்தன்மையை உறுதிபடுத்த ஜனநாயக அமைப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: