வீட்டு வாடகை கொடுக்க இயலாத நிலையில் அமெரிக்க காங்கிரஸ் இளம் பிரதிநிதி

கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.

வீட்டு வாடகை தர இயலாது

அமெரிக்க காங்கிரஸ் வரலாற்றில் முதல் இளம் பெண் காங்கிரஸ் பிரதிநிதி ஒருவர், வாஷிங்டனின் வீட்டுவாடகை தாங்கும் அளவுக்கு என் பொருளாதாரம் இல்லை, முதல்மாத ஊதியத்திற்கு காத்திருக்கிறேன் என கூறி உள்ளார். அவரது பெயர் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ.

இந்நிலையில், இந்த 29 வயது அரசியல்வாதி பொய் கூறுகிறார் என்றும் பல்லாயிரம் டாலர் மதிப்புடைய ஆடைகளை அணிந்து பத்திரிகைகளில் காட்சி அளித்துள்ளார் என்றும் ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் ஹென்றி கூறினார். அதற்கு ட்விட்டரில் பதிலளித்த அலெக்ஸாண்ட்ரியா, அந்த ஆடைகள் ஃபோட்டோ சூட்டிற்காக கடனாக தரப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

கலிஃபோர்னியா காட்டுத் தீ

கலிஃபோர்னியா வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியதில் குறைந்தது ஐந்து பேர் பலியாகி உள்ளனர். 1,50,000 பேர் அந்தப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வேறு பாதுகாப்பான பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் மேற்கு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் பரவிய தீ கடற்கரை பகுதிகளை நோக்கி பரவிக் கொண்டிருக்கிறது.

கண்டிக்கும் ட்ரம்ப்

ஃப்ளோரிடா மாகாண தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக கண்டித்துள்ளார். கள்ள வாக்குகள் மூலம் ஒரு செனட் சீட்டை ஜனநாயக கட்சியினர் வெல்ல முயற்சிப்பதாக அவர் கூறி உள்ளார். பத்திரிகையாளர்களிடம் பேசிய டிரம்ப், "நிறைய நேர்மையின்மை இருந்திருக்கிறது. ஆனால், முறைகேடு நடந்திருப்பதாக தெரியவில்லை" என்றுள்ளார். ப்ரவுன் கண்ட்ரியில் எண்ணப்பட்ட வாக்கில் குடியரசு கட்சி வேட்பாளருக்கும், ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்குமான வாக்கு வித்தியாசம் 0.2 சதவிகிதம்தான்.

தண்டனை

1973ஆம் ஆண்டு சிலியில் ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பை தொடர்ந்து 15 பேர் பலியாகினர். இந்த மரணத்தில் தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ராணுவ தலைவர் ஜெனரல் ஜுவான் எமிலியோவுக்கு சிறை தண்டனை விதித்து சிலி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராணுவத்தால் ஆட்சி கவிழ்ப்பு மேற்கொள்ளப்பட்டப் பின் அதனை எதிர்க்கும் செயற்பாட்டாளர்களை கொல்ல ஒரு 'மரண குழு' அனுப்பப்பட்டது. அவர்களுக்கு உடந்தையாக இருந்தார் என்பதும் எமிலியோ மீதான குற்றச்சாட்டு.

குண்டுவெடிப்பில் 20 பேர் பலி

சோமாலியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் பிரபல தொழிலதிபர் உட்பட 20 பேர் பலியாகி உள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான அல் ஷஹாப் பொறுப்பேற்றுள்ளதாக சோமாலிய அரசதிகாரிகள் கூறுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: