You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கஷோக்ஜி கொலை: ஆடியோ பதிவுகளை அமெரிக்காவிடம் வழங்கியது துருக்கி
செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பான ஆடியோ பதிவுகளை அமெரிக்கா, பிரட்டன் மற்றும் செளதி அரேபியாவிடம் கொடுத்துள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது.
கஷோக்ஜியை கொன்றவர்கள் யார் என்பது செளதி அரேபியாவுக்கு தெரியும் என்ற தனது கூற்றை மீண்டும் உறுதி செய்துள்ளார் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான்.
கஷோக்ஜி கொலை செய்யப்பட்டதை ஒப்புக் கொண்ட செளதி அரேபியா அதில் செளதி அரச குடும்பத்திற்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.
ஆனால் முதலில் தூதரகத்தை விட்டு கஷோக்ஜி உயிருடன் எந்த பாதிப்பும் இல்லாமல் சென்றதாக செளதி அரேபியா தெரிவித்தது.
இதுவரை நடந்தது என்ன?
இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில், அக்டோபர் 2ஆம் தேதி கஷோக்ஜி கொலை செய்யப்பட்டார்.
கஷோக்ஜி தனது திருமணத்துக்கான ஆவணங்கள் விஷயமாக தூதரகத்துக்கு சென்ற போது, அங்கு கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டார் என துருக்கி விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கஷோக்ஜி கொலை செய்யப்பட்டதை ஒப்புக் கொண்ட செளதி, அவரின் உடலுக்கு என்ன ஆனது என்பது தங்களுக்கு தெரியாது என கூறி வருகிறது.
"வாஷிங்டன் போஸ்டில் துருக்கி அதிபர் எர்துவான் எழுதிய செய்தியில் செளதி அரசாங்கத்தில் உயர்மட்ட நிலையில் இருப்பவர்களிடமிருந்து கஷோக்ஜியை கொல்ல ஆணை வந்ததாக எங்களுக்கு தெரியும்" என்று தெரிவித்திருந்தார்.
"முன்னரே திட்டமிடப்பட்டு, தூதரகத்தில் நுழைந்தவுடன் பத்திரிகையாளர் கஷோக்ஜி கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டார்" என துருக்கி விசாரணையாளர் ஒருவர் தெரிவித்தார்.
அதேபோல், திட்டமிட்டப்படி அவரின் உடல் அழிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த கொலையில் தொடர்புடையதாக சந்தேகித்து இதுவரை 18 பேரை செளதி அரசு கைது செய்துள்ளது. அவர்கள் செளதியில்தான் தண்டிக்கப்படுவர் ஆனால் அவர்களை துருக்கி தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோருகிறது.
யார் இந்த ஜமால் கஷோக்ஜி?
ஒரு காலத்தில் செளதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்தவர், பின் செளதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார். அதற்கு பிறகு அவர் செளதியிலிருந்து வெளியேறினார்.
இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினாவில் 1958 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜமால். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பயின்றவர்.
பின் செளதி அரேபியா திரும்பியவர், பத்திரிகையாளராக தம் பணியை தொடங்கினார். ஆப்கனில் சோவியத் ஊடுருவியபோது அது தொடர்பான செய்திகளை உள்ளூர் ஊடகத்தின் சார்பாக சேகரித்தார்.
ஒசாமா பின் லேடனின் எழுச்சியை நேரில் கண்டவர் ஜமால். 1980 - 90 ஆகிய காலகட்டங்களில் பல முறை ஒசாமாவை நேர்காணல் கண்டிருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :