You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கஷோக்ஜி அபாயகரமான இஸ்லாமியவாதி என அமெரிக்காவிடம் சொன்னாரா சௌதி இளவரசர் முகமது பின் சல்மான்
கொலை செய்யப்பட்ட சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி ஓர் அபாயகரமான இஸ்லாமியவாதி என அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் அமெரிக்காவிடம் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கஷோக்ஜி காணாமல் போனதற்கும் அவரை கொலை செய்ததாக சௌதி ஒப்புக் கொண்டதற்கும் இடைப்பட்ட காலத்தில் வெள்ளை மாளிகைக்கு இளவரசர் சல்மான் பேசியபோது அவர் இப்படிக் கூறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் போஸ்ட் மற்றும் நியூயார்க் டைம்ஸ் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திகளை சௌதி அரேபியா மறுத்துள்ளது.
அமெரிக்க ஊடகத்திற்கு பணியாற்றி வந்த கஷோக்ஜி, சௌதி அரசினை விமர்சித்துவந்தவர்.
கஷோக்ஜியின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அவர் அக்டோபர் 2ஆம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் கொல்லப்பட்டார் என்று துருக்கி, அமெரிக்கா மற்றும் சௌதி அரேபியா நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.
இந்தக்கொலையில் அரச குடும்பத்திற்கு பங்கில்லை என்று மறுத்துள்ள சௌதி, இது குறித்த "உண்மைகளை கண்டுபிடிக்க உறுதியாக இருப்பதாக" கூறியுள்ளது.
தொலைபேசியில் என்ன பேசப்பட்டது?
இளவரசர் சல்மான் அமெரிக்க அதிபர் டிரம்பின் மருமகன் ஜேர்ட் குஷ்னர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஆகியோரிடம் தொலைபேசியில் பேசும்போது, கஷோக்ஜி முஸ்லிம் ப்ரதர்ஹுட் என்ற சர்வதேச இஸ்லாமிய அமைப்பின் உறுப்பினர் என்று கூறியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
கஷோக்ஜி காணாமல் போன ஒரு வாரம் கழித்து அதாவது அக்டோபர் 9-ம் தேதி இந்த தொலைப்பேசி அழைப்பு நடந்துள்ளது.
அப்போது அமெரிக்க - சௌதி கூட்டணியை பாதுகாக்க வேண்டும் என்று இளவரசர் சல்மான் வலியுறுத்தியுள்ளார்.
இதனை மறுத்துள்ள கஷோக்ஜியின் குடும்பம், அவர் அந்த அமைப்பை சேர்ந்தவர் அல்ல என்று கூறியுள்ளது.
"ஜமால் கஷோக்ஜி எந்த வகையிலும் ஆபத்தானவர் அல்ல" என்று அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதுவரை என்ன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
கஷோக்ஜி எப்படி இறந்தார் என்று இதுவரை தெரியவில்லை.
அவர் துருக்கியை சேர்ந்த ஹெடிஸ் சென்சிஸை திருமணம் செய்து கொள்ள, சில ஆவணங்களை சரிசெய்ய கஷோக்ஜி தூதரகத்திற்கு சென்றார்.
கொலை செய்ததற்கு முன்பாக அவர் துன்புறுத்தப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.
முதலில் உயிருடன் கஷோக்ஜி வெளியே சென்றதாக கூறிய சௌதி, பின்னர் அவர் கொலை செய்யப்பட்டதாக ஒப்புக் கொண்டது.
இது தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :