You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் கூகுள் பணியாளர்கள் - காரணம் என்ன?
- எழுதியவர், டேவ் லீ
- பதவி, பிபிசி
பாலியல் குற்றச்சாட்டுகளை கையாளும் கூகுள் நிறுவனத்தின் அணுகுமுறையை கண்டித்து உலகம் முழுவதுமுள்ள அந்நிறுவன பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகம் சார்ந்த குற்றச்சாட்டுகளை கூகுள் நிறுவனம் கையாளும் விதத்தில் பல்வேறு மாற்றங்களை செய்யக்கோரி அந்நிறுவனத்தின் பணியாளர்கள் போராட்டத்தில் மேற்கொண்டுள்ளனர்.
"உங்களில் பலரும் கொண்டுள்ள கோபத்தையும், ஏமாற்றத்தையும் என்னால் உணர முடிகிறது" என்று கூகுள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
"நமது சமூகத்தில் நீண்ட காலமாகவும், தற்போது கூகுள் நிறுவனத்திலும் நிலவி வரும் இப்பிரச்சனையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நான் முழு உறுதிகொண்டுள்ளேன்" என்று அந்த மின்னஞ்சலில் அவர் மேலும் கூறியுள்ளார்.
போராட்டத்திற்கான காரணம் என்ன?
பாலியல் குற்றச்சாட்டுகளை கையாளும் கூகுள் நிறுவனத்தின் அணுகுமுறையில் அந்நிறுவன பணியாளர்களுக்கு நீண்டகாலமாக அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில், சென்ற வாரம் அந்நிறுவனத்தின் உயர் பதவியிலிருக்கும் ஒருவர் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து அவர் பதவி விலகினார். மேலும், அவருக்கு கூகுள் நிறுவனம் சுமார் 90 மில்லியன் டாலர்கள் வழங்கியிருந்தது. இதைத்தொடர்ந்து, எதன் அடிப்படையில் அந்த உயரதிகாரியின் மீதான புகார் விசாரிக்கப்பட்டது என்ற கேள்வியை அந்நிறுவனத்தின் பணியாளர்கள் எழுப்பியதால் தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
இந்நிலையில், பணி நேர்காணல் நடத்தியபோது பெண்ணொருவரிடம் தவறாக நடந்துகொண்டதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாக கூகுள் நிறுவனத்தின் மற்றொரு உயரதிகாரியான ரிச்சர்ட் தேவால் என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை பாலியல் குற்றச்சாட்டுகளின் காரணமாக குறைந்தது 48க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் அவர்களுக்கு எவ்வித பணமும் வழங்கப்படவில்லை என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
பணியாளர்களின் கோரிக்கை என்ன?
இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ள கூகுள் பணியாளர்களின் மேசையில் ஒட்டப்பட்டுள்ள தாளில், "பாலியல் துஷ்பிரயோகம், தவறான நடத்தை, வெளிப்படைத்தன்மை அற்ற நிலை, வலுவற்ற பணிச்சூழல் போன்றவற்றை எதிர்த்து சக பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் போராடுவதற்காக நான் சென்றுள்ளேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கூகுள் பணியாளர்கள் அந்நிறுவனத்துக்கு வைத்துள்ள கோரிக்கைகளில் சில:
- ஊதியம் மற்றும் பணிவாய்ப்பில் சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டுவருவதை உறுதிசெய்வது
- பாலியல் துஷ்பிரயோகம் சார்ந்த குற்றச்சாட்டுகளை கையாளும் அணுகுமுறை பற்றிய அறிக்கையை வெளியிடல்
- பாலியல் துஷ்பிரயோகத்தை பாதுகாப்பாகவும், யாருக்கும் தெரியாமலும் பதிவு செய்ய ஒரு தெளிவான, சீரான, உலகளாவிய உள்ளடக்கிய செயல்முறையை உருவாக்குவது
- பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி நேரடியாக தலைமை செயலதிகாரியிடமும், இயக்குனர்கள் குழுவிடமும் பதிலளிப்பதற்கு அனுமதித்தல்
- பாலியல் துஷ்பிரயோகம், பாகுபாடு சார்ந்த குற்றச்சாட்டுகளை நிறுவனத்துக்குள்ளேயே விசாரணை நடத்தி தீர்த்து வைக்கும் நடைமுறையை முடிவுக்கு கொண்டுவரல்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :