You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தோனீசிய விமான விபத்து: கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு
விபத்துக்குள்ளான இந்தோனீசியா விமானத்தின் கருப்புப் பெட்டி முக்குளிப்பு வீரர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
ஜெடி-610 என்ற எண்ணுடைய இந்த லயன் ஏர் விமானம் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்கால் பினாங் நகரத்துக்கு சென்று கொண்டிருந்த போது உள்ளூர் நேரப்படி கடந்த திங்கள்கிழமை அதிகாலை கடலில் விழுந்து நொறுங்கியது.
இதன் காரணமாக அந்த விமானத்தில் பயணித்த 189 பேரும் பலியாகினர்.
விமானத்தின் கருவிகளில் ஏற்பட்ட கோளாறே இந்த விபத்துக்குக் காரணம் என்று பிபிசிக்கு கிடைத்த விமானத்தின் தொழில்நுட்பம் மற்றும் இயங்குமுறை குறித்த ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
நீருக்கடியில் இயங்கும் டிரோன் மற்றும் பிங்கர் லொகேட்டர் போன்ற கருவிகளைக் கொண்டு விமானத்தின் கருப்புப் பெட்டியைத் தேடும் பணி நடக்கிறது.
இதுகுறித்து புதன்கிழமை பேசிய இந்தோனீசிய ராணுவத் தலைவர் ஹாதி ஜஹஜன்டோ, இந்த நவீனக் கருவிகள் கண்டுபிடித்த ஒரு சிக்னல் கருப்புப் பெட்டியில் இருந்து வந்ததாக மீட்புப் பணியாளர்கள் நம்புவதாகவும், முக்குளிப்பு வீரர்கள் அந்த் பெட்டியை கண்டுபிடிக்க முயற்சி செய்ததாகவும், மீண்டும் அவர்கள் விரைவில் அடுத்த முயற்சியை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் முதன்மையான பாகத்தில் இருந்து வெகு தொலைவில் அந்த கருப்புப் பெட்டி இருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
பணி நீக்கம்
லயன் ஏர் நிறுவனம் தமது தொழில்நுட்ப இயக்குநர் முஹம்மது ஆசிஃபை பணி நீக்கம் செய்துள்ளது.
போக்குவரத்து அமைச்சகத்திலிருந்து வந்த உத்தரவை தொடர்ந்து தொழில்நுட்ப இயக்குநர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறது லயன் ஏர் நிறுவனம்.
விசாரணையின் ஒரு பகுதியாக இந்தோனீசிய அதிகாரிகளை போயிங் நிறுவனத்தின் பிரதிநிதிகள் சந்திக்கின்றனர்.
விபத்துக்குள்ளான இந்த லயன் ஏர் விமானம் குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் நிறுவனமாகும்.
விமானத்தில் என்ன கோளாறு?
விமானி இயக்கும் வேகத்தை காட்டும் கருவி நம்பமுடியாத நிலையில் இருந்ததாகவும், உயரத்தை அளக்கும் கருவியில் தகவல்கள் விமானி மற்றும் இணை விமானிக்கு வெவ்வேறாக இருந்ததாகவும் பிபிசிக்கு கிடைத்த விமானத்தின் தொழில்நுட்பம் மற்றும் இயங்குமுறை குறித்த ஆரம்பகட்டத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னதாக லயன் ஏர் முதன்மை நிர்வாக அதிகாரியான எட்வேர்ட் சிராய்ட், விமானம் பாலியின் டென்பசாரிலிருந்து ஜகார்த்தா பறக்கும் போது விமானத்தில் குறிப்பிடப்படாத தொழில்நுட்ப கோளாறு இருந்ததாகவும், ஆனால் அது சரி செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் இருந்திருந்தால் டென்பசாரிலிருந்து பறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்க மாட்டாது என அவர் தெரிவித்தார். விமானக் குழுவின் புகாரை நாங்கள் பெற்றவுடன் அது உடனடியாக சரி செய்யப்பட்டுவிட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
போயிங் 738 மேக் 8 ரக விமாங்களில் 11 விமானங்களை லயன் ஏர் விமான சேவை இயக்கி வருகிறது. பிற விமானங்களில் இம்மாதிரியான தொழில்நுட்ப கோளாறுகள் ஏதும் ஏற்படவில்லை என அவர் தெரிவித்தார்.
விமானத்துக்கு என ஆனாது?
பங்கல் பினாங்கில் உள்ள டெபாட்டி அமிர் விமானநிலையத்தில் ஒரு மணி நேரத்தில் தரையிறங்குவதாக இருந்தது. ஆனால் புறப்பட்ட 13 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடன் விமானத்தின் தொடர்பு அறுந்துபோனது.
இந்தோனீசியாவின் பேரழிவு மீட்பு முகமையின் தலைவர் கடலில் கண்டெடுக்கப்பட்ட உடமைகளின் படத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
விமானியும் இணை விமானியும் இதற்கு முன்பாக 11,000 மணி நேரங்கள் ஒன்றாக பயணித்துள்ளனர்.
விமானக் குழுவில் மூன்றுபேர் பயிற்சி ஊழியர்கள் ஒருவர் தொழில்நுட்ப வல்லுநர்.
இந்தோனீசியாவின் நிதித்துறை அமைச்சகத்தின் ஊழியர்கள் இருபது பேர் விமானத்தில் இருந்ததாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது.
போயிங் 737 மேக்ஸ்
போயிங் 737 வரிசை விமானங்கள் அதிகமாக விற்பனையாகக்கூடிய ஒன்று இதில் மேக்ஸ் வரிசையில் 7,8,9,10 வரை உள்ளன.
விபத்துள்ளான போயிங் 737 மேக்ஸ் 8 வகையை சேர்ந்தது. இது 2016ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் உள்ளது.
விசாரணையில் விபத்து குறித்த காரணம் தெரியும் வரை இந்த விமான சேவையை பயன்படுத்த வேண்டாம் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
மோசமான வான் பயண பாதுகாப்பு
தீவுகள் நிறைந்த நாடான இந்தோனீசியா விமான பயணங்களை பெரிதும் நம்பியுள்ளது. ஆனால் அதன் விமான சேவை நிறுவனங்களின் பாதுகாப்பு மோசமான நிலையிலே இருந்து வந்துள்ளது.
லயன் ஏர் விமான சேவை 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உள்ளூர் விமான சேவை மற்றும் தெற்காசியா, ஆஸ்திரேலியா மற்றும் மத்திய கிழக்குக்கு விமானங்களை இயக்கி வருகிறது.
கடந்த காலங்களில் மோசமான நிர்வாகம் மற்றும் பராமரிப்பால் 2016ஆம் ஆண்டு வரை ஐரோப்பிய வான் வெளியில் பறப்பதற்கு தடை செய்யப்பட்டிருந்தது.
2013 ஆண்டு லயன் ஏர் விமானம் ஒன்று பாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் போது கடலில் விழுந்து விபத்துள்ளானது. இருப்பினும் அதிலிருந்த 108 பேரும் உயிர் தப்பினர்.
2004ஆம் ஆண்டு ஜகார்த்தாவிலிருந்து வந்த விமானம் ஒன்று சோலோ சிட்டியில் தரையிறங்கும்போது விபத்துள்ளானதில் 25 பேர் பலியாகினர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்