இலங்கை அரசியல் குழப்பம்: மஹிந்த அமைச்சரவையில் மேலும் இருவர் சேர்ப்பு

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இலங்கை நாடாளுமன்றம் வரும் விரைவில் கூட்டப்பட இருப்பதாக கூறப்படும் நிலையில், மேலும் இரண்டு புதிய அமைச்சர்களை தனது அமைச்சரவையில் இணைத்துக்கொண்டுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி. நவின்ன கலாச்சார அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள், பிராந்திய அபிவிருத்தி அமைச்சராகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த எஸ். வியாழேந்திரன் பிராந்திய அபிவிருத்திக்கான பிரதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலையில் நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி ஆகிய கட்சிகள் கூடி சபாநாயகரை சந்தித்தபோது, ஐக்கிய தேசியக் கட்சியின் எஸ்.பி. நவின்னவும் அதுரலிய ரதனவும் அந்தக் கூட்டத்திற்கு வரவில்லை.

இந்த நிலையில்தான் எஸ்.பி. நவின்ன மஹிந்த ராஜபக்ஷேவின் அமைச்சரவையில் இணைந்திருக்கிறார். நவின்னவோடு இதுவரை ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஆறு பேர் இதுவரை மஹிந்த தரப்பிற்கு மாறியுள்ளனர்.

பிரதியமைச்சராக பதவியேற்றிருக்கும் சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்கிளப்பு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்.

முன்னதாக, தயாசிறி ஜெயசேகர, துமிந்த திஸாநாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன, மனுச நாணயக்கார, பியசேன கமகே, ஸ்ரீயானி விஜயவிக்ரம, அங்கஜன் ராமநாதன் உள்ளிட்ட 13 பேர் வியாழக்கிழமையன்று அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஜனாதிபதி சிறிசேன தரப்பைச் சேர்ந்தவர்கள்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, அக்டோபர் 26ஆம் தேதி மாலையில், ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய ஐக்கிய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை விலக்கிக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய முன்னாள் எதிரியும் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவை புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

ஆனால், அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே தானே தொடர்ந்து பிரதமராக இருப்பதாக அறிவித்ததும் பாராளுமன்றம் உடனடியாக முடக்கப்பட்டு நவம்பர் 16ஆம் தேதிவரை ஒத்திவைக்கப்பட்டதும் நாட்டை பெரும் அரசியல் புயலுக்குள் தள்ளியது.

ஜனாதிபதி சிறிசேனவின் இந்த நடவடிக்கைக்கு பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்ததோடு, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டும்படியும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நவம்பர் 5ஆம் தேதி நாடாளுமன்றம் கூட்டப்படவிருப்பதாக வியாழக்கிழமையன்று காலையில் செய்திகள் பரவின. உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய ராஜபக்சேவும் திங்கட்கிழமையன்று நாடாளுமன்றம் கூட்டப்படலாம் எனக் கூறினார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் இதனை வரவேற்றார். ஆனால், இதுவரை நாடாளுமன்றம் கூட்டப்படுவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் திங்கட்கிழமையன்று மஹிந்த ஆதரவு அமைப்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மிகப் பெரிய பேரணி ஒன்றுக்கு ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.

225 இடங்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும். இதில் ஆறு இடங்களை வைத்துள்ள ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) வியாழக்கிழமையன்று பிற்பகலில் கொழும்புவின் நெககொட பகுதியில் மிகப் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியது. அந்தக் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் ரணில், மஹிந்த ஆகிய இருவரில், எந்தத் தரப்புக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை என்ற முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திப் பேசினர்.

"இரு தரப்புமே ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியிருக்கிறார்கள். எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கும்வகையில் இருவருக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை. நாங்கள் எடுத்த முடிவு, ரணிலுக்கு ஆதரவாக இருக்கிறது அல்லது மஹிந்தவுக்கு ஆதரவாக இருக்கிறது என சொல்லலாம். யாருக்கு ஆதரவாக இருப்பதற்காகவும் இந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை. மக்கள் நலன் சார்ந்து எடுத்திருக்கிறோம்." என பபிசியிடம் பேசிய ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துநேதி தெரிவித்தார்.

இப்போது மஹிந்த - ரணில் ஆகிய இரு தரப்பிடமும் தலா சுமார் 100 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகச் சொல்லலாம். இலங்கையில் கட்சித் தாவல் தடைச் சட்டம் இல்லாத நிலையில், அறுதிப் பெரும்பான்மையை பெறுவதற்காக இரு தரப்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஈர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.

மஹிந்த அமைச்சரவையில் மீள்குடியேற்றம், புனர் நிர்மாணம், வடக்கு அபிவிருத்தி, இந்து சமய அலுவல்கள் ஆகிய துறைகளின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது புதிய அலுவலகத்தில் பரபரப்பாக இருக்கிறார். பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பு நடந்தால் மஹிந்த தரப்பு வெற்றிபெற்று தான் அமைச்சராகத் தொடர்வோம் என்ற நம்பிக்கை அவர் குரலில் தென்படுகிறது.

"சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது ரணில் வசம் வெறும் 40 இடங்களே இருந்தன. அவர் பிரதமராகவில்லையா? அவர் எப்படி பெரும்பான்மையை நிரூபித்தார்? அதுபோல மஹிந்தவும் நிரூபிப்பார்" என்கிறார் டக்ளஸ் தேவானந்தா.

ரணிலின் அரசு நாடு முழுவதுமே மக்கள் ஆதரவை இழந்துவிட்டதாகச் சொல்லும் தேவானந்தா, அவரது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கும் பல கட்சிகள் விரைவில் மஹிந்தவுக்கு ஆதரவளிக்கும் என்கிறார். ரஷீத் பத்யுதீன் தலைமையிலான ஆல் சிலோன் மக்கள் காங்கிரசும் ரவூஃப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் தற்போது ரணிலுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்தாலும் விரைவில் அவர்கள் மஹிந்தவுக்கு ஆதரவாக மாறக்கூடும் என்றும் கோடிட்டுக்காட்டுகிறார் அவர்.

ரஷீத் பத்யுதீனும் ரவூஃப் ஹக்கீமும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முன்வராவிட்டாலும்கூட, அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் மஹிந்தவுக்கு ஆதரவளிக்கும் சாத்தியங்களும் இருக்கின்றன.

இந்த பின்னணியில் 16 உறுப்பினர்களை தன் வசம் வைத்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பது மிக முக்கியமான கேள்வி. "பொதுவாகப் பார்த்தால் கூட்டமைப்பின் ஆதரவு ரணிலுக்குதான். ஆனால், கடந்த மூன்றாண்டு காலத்தில் தேசிய ஐக்கிய அரசு எதையுமே செய்யவில்லை என்ற விமர்சனமும் இருக்கிறது. ஆகவே, தொடர்ந்து ரணிலுக்கு ஆதரவளிப்பது குறித்து கூட்டமைப்பிற்குள் முரண்பாடுகள் உண்டு. ஆனால், முடிவில் சம்பந்தனும் சுமந்திரனுமே முடிவுசெய்வார்கள்" என்கிறார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரன்.

தன் தரப்புக்கு ஆதரவாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை மஹிந்த ஈர்த்துவிட்டதாகவே சுரேஷ் கருதுகிறார். "தொண்டமான், டக்ளஸ் போன்றவர்களும் மஹிந்தவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மஹிந்த போதுமான உறுப்பினர்களைத் திரட்டிவிட்டால், ஜேவிபியும் கூட்டமைப்பும் யாருக்கு ஆதரவளிக்கப்போகிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும்" என்கிறார் அவர்.

இருந்தாலும் கூட்டமைப்பின் ஆதரவைத் தரவேண்டுமென இரா. சம்பந்தனிடம் மஹிந்த கோரியிருக்கிறார். இது தொடர்பாக கூட்டமைப்பு தன் கருத்தைத் தெரிவிக்கவில்லை. தமிழர்களின் கவலைகள் குறித்த வாக்குறுதிகள் ஏதுமின்றி கூட்டமைப்பு தன் ஆதரவை மஹிந்தவுக்குத் தராது என்கின்றன கூட்டமைப்பிற்குள் இருந்து வரும் தகவல்கள்.

"கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழர்களின் கோரிக்கை எதுவுமே நிறைவேறவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சட்டம் நிறைவேற மூன்று ஆண்டுகள் ஆயின. ராணுவத்தின் வசம் உள்ள நிலங்கள் திரும்ப அளிக்கப்பட வேண்டும், புதிதாக நிலத்தை கையகப்படுத்தக்கூடாது, அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளில் எந்த முன்னேற்றமும் நடக்கவில்லை" என்கிறார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

தமிழர்களைப் பொறுத்தவரை, தாங்கள் இருதரப்பாலும் கைவிடப்பட்டதாக நினைக்கிறார்கள். ஆனால், சிங்கள மக்கள் ரணிலைவிட மஹிந்த ராஜபக்ஷ பரவாயில்லையென நினைக்கிறார்கள் என்கிறார் அவர். தற்போது விவாதிக்கப்பட்டுவரும் புதிய அரசியல் யாப்பில் தமிழர்களுக்கு ஆதரவாக எதுவுமே இனி இருக்காது என்கிறார் அவர்.

இந்த நிலையில், நாடாளுமன்றம் எவ்வளவு சீக்கிரத்தில் கூட்டப்படுகிறதோ அந்த அளவுக்கு நிலைமை ரணிலுக்கு சாதகமாக இருக்கும். ஆனால், அந்த நிகழ்வு தாமதப்படுவது, ரணிலின் வாய்ப்புகளை குறைப்பதோடு, இலங்கையில் அரசியல் நிலையற்ற தன்மையையும் தொடர்ந்து நீடிக்கச் செய்யும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :