"உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்" இலங்கை அதிபருக்கு சபாநாயகர் கடிதம்

இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிசெய்வதற்காக உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

நாடாளுமன்றத்தை முடக்குவதானது மக்கள் வழங்கிய ஆணையை மீறும் வகையில் அமைந்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய எழுதியுள்ள கடிதத்தில், "நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும், சலுகைகளையும் காப்பதற்காக உங்களுக்கு அக்டோபர் 28ஆம் தேதியன்று கடிதமொன்றை எழுதியிருந்தேன்.

125 எம்.பிக்களுக்கும் அதிகமானவர்கள் அங்கத்துவம் பெறும் கட்சிகள், தமது உரிமைகளையும், சலுகைகளையும் பாதுகாத்துக் கொள்ளவும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கைத் தமிழரசுக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விடுத்துள்ள கோரிக்கையை செவிமடுப்பது சபாநாயகர் என்ற வகையில் எனது பொறுப்பாகும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்க வேண்டும். அவ்வாறு செய்ய மறுப்பது ஜனநாயக உரிமையைப் புறக்கணிப்பதற்கு ஒப்பானது.

18 நாட்கள் நாடாளுமன்றத்தை முடக்குவதன் மூலம், ஜனநாயகத்திற்கும், நல்லாட்சிக்கும் ஆணைப் பெற்ற உங்களினால் மேற்கொள்ளப்படுவதை நம்ப முடியாதிருக்கிறது. அத்துடன், சர்வதேச ரீதியாக தாங்கள் பெற்ற நற்பெயருக்கு களங்கம் ஏற்படும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலையினால் இதுவரை இரண்டு அப்பாவி உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. ஏராளமான இடங்களில் இயல்புவாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. ஊடக நிறுவனங்களுக்குள் பலவந்தமாக உள்நுழைந்து, அதன் நிர்வாகம் முடக்கப்பட்டுள்ளது. தொழில்நிறுவனங்களில் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நல்லாட்சிக்காக ஆணையைப் பெற்றது இதற்காக அல்ல.

நீங்கள் பிரதமர் ஒருவரையும், அமைச்சரவையும் நியமித்துள்ளீர்கள். எனவே, இரண்டு வாரங்களுக்கு நாடாளுமன்றத்தை முடக்காது உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு செய்யாவிட்டால் ஜனநாயக உரிமையைக் காத்துக் கொள்ள மாற்றுவழிகளை மக்கள் தேர்ந்தெடுப்பதைத் தடுக்க முடியாது போகும்.

மக்களின் நலன்கருதி, நாட்டை நெருக்கடிக்குள் தள்ளாது, ஜனநாயகத்தின் பேரில் காலம்தாழ்த்தாது நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்று சபாநாயகர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டம்

இலங்கை அதிபர் சிறிசேன நாடாளுமன்றத்தை கூட்ட வலியுறுத்தி பெரும் அளவில் போராட்டம் நடைபெறுகிறது. "மக்கள் பேசிவிட்டார்கள். நாடாளுமன்றத்தை கூட்டி ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டும்" என ரணில் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்றத்தை விரைவாக கூட்டி அரசியல் பிரச்சினைக்கு தீர்வைக்காணுமாறு சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் நேற்று மாலை ஜனாதிபதியை சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தி உள்ளார்.

அதிகார மாற்றம் இலங்கையில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதன் மூலம் மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கடமைகளை செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன் இதன்மூலம் வன்முறைகளை தடுக்கமுடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதியை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :