You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எல்லையில் ராணுவ வீரர்கள்: அமெரிக்காவை நோக்கி முன்னேறும் குடியேறிகள்
கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்
எல்லையில் ராணுவ வீரர்கள்
ஆயிரக்கணக்கான மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்த குடியேறிகள் வடக்கு திசையில் மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவை நோக்கி வருவதால் 5200க்கும் மேற்பட்ட தமது வீரர்களை மெக்ஸிகோ எல்லைக்கு அனுப்பி உள்ளது அமெரிக்கா. தங்கள் நாடுகளில் தங்களுக்கென எந்த பொருளாதார வாய்ப்பும் இல்லை. எப்படியாவது அமெரிக்கா சென்று விட்டால் வாழ்வு மாறும், வசந்தம் வரும், இதுவெல்லாம் நிகழாவிட்டாலும் தங்கள் குழந்தைகள் வன்முறையிலிருந்து தள்ளி இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அமெரிக்கா நோக்கி மத்திய அமெரிக்க நாட்டு மக்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களை அமெரிக்காவிற்குள் அனுமதிக்க முடியாதென அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதியாக கூறி உள்ளார்.
முறைகேடாக கடவுச் சீட்டு
பல்கேரியா போலீஸ் பாஸ்போர்ட் முறைகேடு ஒன்றை விசாரித்து வருவதாக கூறுகின்றனர். முறைகேடாக பல்கேரிய குடியுரிமை பெற்று, அதன் மூலமாக பாஸ்போர்ட் வாங்கி, ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் பயணித்து, அவர்கள் பணி செய்து வருவதாக தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக இதுவரை 20 பேரை கைது செய்துள்ளதாக கூறுகிறது பல்கேரியா.
ஐ.எஸ் உறவு
இஸ்லாமிய அரசு என தம்மை அழைத்துக் கொள்ளும் ஐ.எஸ் அமைப்புடன் கூட்டு வைத்திருந்ததாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு எந்த விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த அமெரிக்க மற்றும் செளதி குடியுரிமை வைத்திருந்த நபர் 13 மாதங்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். அமெரிக்க மக்கள் சிவில் உரிமை கழகமும் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. குர்து படையால் இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிரியாவில் கைது செய்யப்பட்டார். பின் இராக்கில் உள்ள அமெரிக்க முகாமுக்கு அனுப்பப்பட்டார்.
மனித வெடிகுண்டு தாக்குதல்
முப்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மனித வெடிகுண்டாக வந்து தாக்கியதில் குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்தனர். இந்த சம்பவமானது துனிஷியா தலைநகரில் நடைபெற்றுள்ளது. இதனை அந்நாட்டு உள்துறை அமைச்சகமும் உறுதிப்படுத்தி உள்ளது. இதனை பயங்கரவாத தாக்குதல் என்று விவரித்துள்ள அந்நாட்டு உள்துறை அமைச்சர், அந்த பெண்ணிற்கு இதற்கு முன்பு எந்த பயங்கரவாத தொடர்பும் இருந்ததாக தெரியவில்லை என்று கூறி உள்ளார்.
"நம்பமுடியாத நிலையில்"
விமானத்தில் பறப்பதற்கு சில நேரங்களுக்கு முன்பாக விபத்தில் சிக்கிய இந்தோனீசிய விமானத்தின் கருவிகளில் கோளாறு ஏற்பட்டிருந்ததாக பிபிசிக்கு கிடைத்த விமானத்தின் தொழில்நுட்பம் மற்றும் இயங்குமுறை குறித்த முதன்மை தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
விமானத்தின் தொழில்நுட்பம் குறித்த அந்த தகவலில் கருவி ஒன்று "நம்பமுடியாத நிலையில்" இருப்பதாகவும், விமானி அதனை இணை விமானியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போயிங் 737 மேக்ஸ் 8' வகையைச் சேர்ந்த அந்த விமானம் 189 பேருடன் கடலில் விழுந்தது. ஜகார்தாவிலிருந்து புறப்பட்டு விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் உயிர் பிழைத்திருக்கும் அறிகுறிகள் தெரியவில்லை.
விபத்துக்குள்ளான விமானம் குறைந்த விலை விமான சேவை வழங்கும் லயன் ஏர்-க்கு சொந்தமானது. விமான சேவை நிறுவனத்திடம் பிபிசியால் இந்த விபத்து குறித்து கருத்து பெற முடியவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :