You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரோகித் சர்மா, ராயுடுவின் அசத்தல் சதங்களும், இந்தியாவின் மெகா வெற்றியும்
மும்பையில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 224 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பெரும் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்தது.
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவருமே தொடக்கம் முதலே பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்டினர்.
40 பந்துகளில் 38 ரன்களை எடுத்த தவான் ஆட்டமிழந்தவுடன், ரசிகர்களின் அதீத கரகோஷ வரவேற்புடன் களத்தில் நுழைந்த அணித்தலைவர் விராட் கோலி இம்முறை 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இத்தொடரில் முதல் முறையாக சதமடிக்காமல் விராட் கோலி ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
ரோகித், ராயுடு அதிரடி
பின்னர், ரோகித்துடன் இணைந்து விளையாடிய அம்பத்தி ராயுடு, இந்திய அணியின் மிடில் ஆர்டர் தேடலுக்கு பதில்கூறும் வகையில் விளையாடினார்.
தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை இந்த போட்டியில் பதிவு செய்த அம்பத்தி ராயுடு 81 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
கடந்த 2015 ஒருநாள் உலககோப்பைக்கு பின்னர் இந்திய அணியில் நான்காவது பேட்ஸ்மேனாக களமிறங்கி சதமடித்த மூன்றாவது நபரானார் அம்பத்தி ராயுடு.
முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் மனிஷ் பாண்டே 104 ரன்களும், யுவராஜ் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2017-ல் கட்டாக் ஒருநாள் போட்டியும் 150 ரன்களும் அடித்திருந்தனர்.
அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா, 137 பந்துகளில் 162 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸர்கள் மற்றும் 20 பவுண்டரிகள் உள்ளடங்கும்.
இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர் பட்டியலில் டெண்டுல்கரின் சாதனையை விஞ்சியுள்ளார் ரோகித் சர்மா. இதுவரை தோனி 211 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அதற்கு அடுத்தபடியாக 196 சிக்ஸர்கள் விளாசியுள்ளார் ரோகித்.
ஒரு தின போட்டிகளில் தனது 21-வது சதத்தினை தனது 186-வது போட்டியில் கடந்துள்ளார் ரோகித் சர்மா. டெண்டுல்கர் 200 போட்டிகளிலும், டி வில்லியர்ஸ் 183 போட்டிகளிலும், விராட் கோலி 138 போட்டிகளிலும் ஹாஷிம் ஆம்லா 116 போட்டிகளிலும் கடந்துள்ளனர்.
மேலும் 2013 ஜனவரியில் இருந்து ரோகித் சர்மா 19 சதமும், விராட் கோலியும் 25 சதமும் அடித்துள்ளனர்.
மேலும் தொடர்ச்சியாக ஒன்பது ஒருநாள் தொடர்களில் சதமடித்து சாதனை படைத்துள்ளார் ரோகித் சர்மா.
இந்த வெற்றியின் சிறப்பு என்ன?
378 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய மேற்கிந்திய தீவுகள் 153 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்திய அணி சொந்த மண்ணில் ஒருதின போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற போட்டியாக இப்போட்டி அமைந்தது. மேலும் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் 3-வது இமாலய வெற்றி இது.
2007-ல் பெர்முடா அணிக்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்திலும், ஹாங்காங் அணிக்கு எதிராக 2008-ல் நடந்த ஒருநாள் போட்டியில் 256 ரன்கள் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றிருந்தது.
முன்னதாக 2016-ம் ஆண்டு நியூசிலாந்து அணியை உள்ளூரில் 190 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே இந்திய மண்ணில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.
இப்போட்டியில் ரோகித் சர்மா அடித்த 162 ரன்களை விட ஒன்பது ரன்கள் குறைவாகவே அடித்துள்ளது மேற்கிந்திய தீவுகள்.
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும் வெல்ல, இரண்டாவது ஒருநாள் போட்டி 'டை'-யில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இதுதொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :