விராட் கோலி அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள் குவித்து சச்சின் சாதனையை முறியடித்தார்

விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று (புதன்கிழமை) நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோலி 10 ஆயிரம் ரன்களை விரைவாக கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த சச்சின் டெண்டுல்கர், 259 இன்னிங்ஸ்களில் அந்த சாதனையை படைத்தார். விராட் கோலி 205 இன்னிங்ஸ்களில் அந்த சாதனையை படைத்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, ரோகித் சர்மாவின் விக்கெட்டை சொற்ப ரன்களில் இழந்தது.

பின்னர் களமிறங்கிய கோலி தனது தனது ஒருநாள் போட்டி வரலாற்றில் 10,000 ரன்களை கடந்தார். 100 ரன்களை கடந்து அவர் தொடர்ந்து களத்தில் உள்ளார்.

இதுவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் தரப்பில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் தோனி ஆகியோர் 10,000 ரன்கள் எடுத்துள்ளனர்.

இதேபோல் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.

இதுவரை ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் மொத்தம் 1573 ரன்கள் குவித்திருந்தார்.

இன்றைய போட்டியில் கோலி அந்த சாதனையை முறியடித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :