You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜமால் கஷோக்ஜி: 'சௌதி செய்தது மிகப் பெரிய மூடிமறைப்பு' - டிரம்ப்
சௌதி அரேபியாவை சேர்ந்த அதிருப்தி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி அரேபியா நடந்துகொண்ட விதம் மிக மோசமான மூடிமறைப்பாக இருந்ததாக குறிப்பிட்டார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
"இந்த கொலையை திட்டமிட்டவர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாக வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.
"இந்த கொலைக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செளதி அரேபியாவின் முக்கிய கூட்டாளியான அமெரிக்கா, செளதிக்கு அதிக அழுத்தங்கள் தரவேண்டும் என்று கூறப்பட்டது.
வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், "இந்த கொலை மிக மோசமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. இதை மோசமாக மறைத்துள்ளனர்" என தெரிவித்தார்.
"கொலை செய்ய யோசித்தவர்கள், பெரும் சிக்கலில் உள்ளனர். நிச்சயம் அவர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாக வேண்டும்," என்றும் அவர் தெரிவித்தார்.
ஜமால் கஷோக்ஜி காணாமல் போனது குறித்து செளதி அரசு பல்வேறு முரண்பட்ட தகவல்களை கூறிவந்தது.
பல வாரங்களாக அவர் உயிருடன் உள்ளார் என்று கூறிவந்த செளதி, கடந்த வாரம் அவர் துருக்கியில் உள்ள செளதி தூதரகத்துக்கு சென்றபோது ஒரு மோசமான நடவடிக்கையால் கொலை செய்யப்பட்டார் என தெரிவித்தது.
"வாஷிங்கடனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தானும் அதிபர் டிரம்பும் நடந்த சம்பவங்கள் குறித்து மகிழ்ச்சியாக இல்லை," என அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
"பத்திரிகையாளர் ஜமாலை வன்முறை மூலம் அமைதிபடுத்த நினைத்த இந்த இரக்கமற்ற நடத்தையை அமெரிக்கா சகித்துக் கொள்ளாது என நாங்கள் தெளிவாக கூற விரும்புகிறோம்" என அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் செளதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மானின் விளக்கத்தை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளுமா என கேட்டதற்கு, "அமெரிக்கா எதை கண்டறிகிறதோ அதையே ஒப்புக்கொள்ளும்" என தெரிவித்தார்.
"எங்களுக்கு கிடைத்த தகவல்களை கொண்டு நடந்தவற்றை அறிய எங்களின் ஆட்கள் உலக முழுவதும் பணியாற்றி வருகின்றனர். எங்களுக்கு தெரிந்த தகவல்களை கொண்டு நாங்கள் உண்மையை அறிந்து கொள்வோம்" என அவர் தெரிவித்தார்.
"இந்த கொலை பல தினங்களுக்கு முன்னதாக திட்டமிடப்பட்ட ஒன்று" என தனது ஆளுங்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார் துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான்.
இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் அக்டோபர் 2ஆம் தேதியன்று, ஜமால் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கான "வலுவான" ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கஷோக்ஜியின் உடல் எங்கே? அவரை கொலை செய்ய யார் உத்தரவிட்டது? போன்ற கேள்விகளுக்கு சௌதி அரேபியா பதிலளிக்க வேண்டும் என்றும் அதிபர் எர்துவான் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் சந்தேக நபர்கள் துருக்கியில் விசாரிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செளதி தலைநகர் ரியாதில் முதலீடுகள் குறித்த மாநாடு தொடங்கும் நாளில் எர்துவான் இவ்வாறு தெரிவித்தார்.
ஜமால் கஷோக்ஜி மாயாமான சம்பவத்தால் மாநாட்டின் முக்கியத்துவம் குறைந்தது. மேலும் டஜன் கணக்கான அரசுகள் மற்றும் தொழிலதிபர்கள் மாநாட்டிலிருந்து விலகுவதாக தெரிவித்தனர் இருப்பினும் முகமத் பின் சல்மான் மாநாட்டில் கலந்து கொண்டார்.
உலகின் பல தலைவர்கள் முக்கிய பத்திரிகையாளரும் செளதியின் விமர்சகருமான ஜமால் கொலை செய்யப்பட்டது குறித்து கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து முழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தனது கண்டனங்களை தெரிவித்த போதிலும் செளதி-அமெரிக்க கூட்டின் முக்கியத்துவம் குறித்தும் டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும் சி.ஐ.ஏ இயக்குநரை சம்பவம் தொடர்பாக ஆராய துருக்கிக்கு அனுப்பியுள்ளார்.
என்ன சொல்கிறது செளதி?
செவ்வாய்க்கிழமையன்று அரசர் சல்மான் அமைச்சரவையை கூட்டினார். அதன்பின் இந்த கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் செளதியின் பொறுப்பு என தெரிவித்தார்.
கஷோக்ஜியின் மகன் சலா பின் ஜமால் மற்றும் அவரின் உறவினரை அரசர் மற்றும் முடியரசர் ரியாதில் சந்தித்ததாக செளதி அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதலில் கஷோக்ஜி தூதரகத்துக்கு வந்த நாளிலே திரும்பி சென்றுவிட்டார் என செளதி கூறி வந்தது பின் கடந்த வெள்ளியன்று முதன்முறையாக கஷோக்ஜி இறந்துவிட்டார் என்றும், சண்டை ஒன்றில் அவர் கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்தது.
''தங்களின் அதிகார வரம்புக்கு வெளியே இந்த கொலையை சிலர் நடத்தியுள்ளனர். இது நிச்சயம் ஒரு மிகப்பெரிய தவறு ஆகும். இந்த தவறை மூடிமறைக்க அவர்கள் செய்த முயற்சிகள் மேலும் இதனை சிக்கலாகவும், பெரிதாகவும் ஆக்கியுள்ளது'' என செளதியின் வெளியுறவுத் துறை அமைச்சர் அடேல் அல்-ஜுபேர் தெரிவித்துள்ளார்.
செளதி அரேபியாவுக்கு திரும்ப போகவிடாமல் கழுத்து நெறிக்கப்பட்டு ஜமால் கொல்லப்பட்டார் என செளதி அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பெயர் வெளியிடாத செளதி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை இந்த கொலை தொடர்பாக 18 பேரை கைது செய்ததாகவும், முகமது பின் சல்மானின் உதவியாளர்கள் இருவரை பணிநீக்கம் செய்ததாகவும், சல்மானின் தலையமையில் உளவுத்துறை முகமையை மறுசீரமைக்க குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் செளதி தெரிவித்துள்ளது.
ஸ்கைப்பில் சாட்சியங்கள்?
துருக்கி மற்றும் அரேபிய உளவு செய்தி வட்டாரங்களின் கூற்றுப்படி, கஷோக்ஜி குறித்த ஸ்கைப் விசாரணையில், பணிநீக்கம் செய்யப்பட்ட உதவியாளர்களில் ஒருவரான செளத் அல் கதானி "அந்த நாயின் தலையை கொண்டுவா" என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த உரையாடலில் பங்கேற்ற இருவருமே வசைகளைப் பொழிந்தனர்.
அந்த ஸ்கைப் ஆடியோ பதிவு துருக்கி அதிபர் எர்துவானிடம் உள்ளது என்றும் ஆனால் அதை அமெரிக்காவிடம் கொடுக்க அவர் மறுத்து வருகிறார் என்றும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :