You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜமால் கசோஜி: கொலை செய்யப்பட்டது யாரால்? - செளதி விளக்கம்
சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களை பெற்ற மாயமான பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொலைக்கு பின்னணியில் மோசமான கூலிப்படை உள்ளதாக செளதி அரேபியா தெரிவித்துள்ளது.
இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திடம் பேசிய செளதி வெளியுறவுதுறை அமைச்சர் அடேல் அல்-ஜுபேர், ஜமால் கசோஜயை கொன்ற செயல் மிக பெரிய தவறு என்று குறிப்பிட்டார். செளதி இளவரசர் இந்த கொலைக்கு உத்தரவிட்டதாக கூறப்படுவதை அவர் மறுத்தார்.
கசோஜிக்கு என்ன ஆனது என்பதை விளக்க கடுமையான சர்வதேச அழுத்தங்களை சந்தித்த செளதி அரேபியா, ஆரம்பத்தில் கசோஜி உயிரோடு இருப்பதாக கூறிவந்தது.
செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால் கசோஜி, அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை.
என்ன சொல்கிறது செளதி?
கசோஜியின் மரணத்தை கொலை என்று செளதி வெளியுறவுதுறை அமைச்சர் அடேல் அல்-ஜுபேர் குறிப்பிட்டார்.
''இது தொடர்பான உண்மைகளை கண்டறிய நாங்கள் உறுதியாக உள்ளோம். அதேபோல், இந்த கொலைக்கு காரணமானவர்களை தண்டிப்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்'' என்று அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், ''தங்களின் அதிகார வரம்புக்கு வெளியே இந்த கொலையை சிலர் நடத்தியுள்ளனர். இது நிச்சயம் ஒரு மிகப்பெரிய தவறு ஆகும். இந்த தவறை மூடிமறைக்க அவர்கள் செய்த முயற்சிகள் மேலும் இதனை சிக்கலாகவும், பெரிதாகவும் ஆக்கியுள்ளது''
''எங்கள் நாட்டின் உளவு அமைப்பின் மூத்த உறுப்பினர்களுக்குக்கூட இது குறித்து தெரியாது'' என்று அவர் மேலும் கூறினார்.
ஜமால் கசோஜி இறந்ததை ஒப்புக்கொண்டது சௌதி அரேபியா
கடந்த இரு தினங்களுக்கு முன்பு, முதல்முறையாக காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக சௌதி அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக புலனாய்வுத் துறையின் துணைத் தலைவர் அஹ்மத் அல்-அஸ்ஸிரி மற்றும் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மானின் மூத்த ஆலோசகர் சௌத் அல்-கத்தானி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள வெள்ளை மாளிகை, விசாரணைகளை நெருக்கமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளது.
துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் உடன் இந்த விவகாரம் தொடர்பாக சல்மான் நிகழ்த்திய தொலைக்காட்சி உரையாடலுக்கு பிறகு அவர் இறந்ததாக செய்தி வெளியிடப்பட்டது.
மற்ற நாடுகள் கூறுவது என்ன?
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், கசோஜியின் கொலை தொடர்பாக செளதி அரேபியா அளித்த விளக்கத்தில் ஏமாற்று வித்தை மற்றும் பொய் ஆகியவை உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
செளதியின் கூற்று குறித்து அமெரிக்க அதிகாரிகள் பலர் சந்தேகங்களை எழுப்பியுள்ள நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ விளக்கம் "நம்பகத்தன்மை" வாய்ந்ததாக டிரம்ப் முன்னதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனின் வெளியுறவுத் துறை அலுவலகம், இது ஒரு "மோசமான சம்பவம்" என்றும் இதற்கு காரணமானவர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த கொலை குறித்து அனைத்து தகவல்களையும், வெளியிடப்போவதாக துருக்கியின் ஆளுங்கட்சி செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக செய்தி முகமை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :