You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவிற்குள் நுழைய முயற்சிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் - என்ன நடக்கிறது அங்கே?
கடந்தசில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
எங்கும் வறுமை, வன்முறை
மெக்சிகோ உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்க நாட்டிற்குள் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாக நுழைய நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக இவர்களை மெக்சிகோ அதிகாரிகள் மெக்சிகோ, கெளதாமாலா இடையே உள்ள எல்லை பாலம் அருகே தடுத்து நிறுத்த முயற்சித்தனர். ஆனால் சிலர் சட்டத்திற்கு புறம்பாக படகுகள் மூலம் தப்பித்தனர்.
இவர்களில் பெரும்பாலானவர்கள் மத்திய அமெரிக்க நாடான ஹோண்டியுரஸ் நாட்டை சேர்ந்தவர்கள். வறுமை, வன்முறை காரணமாக, அவற்றிலிருந்து தப்பிக்க அமெரிக்காவிற்குள் செல்ல முயல்வதாக அவர்கள் கூறுகிறார்கள். ஏறத்தாழ 2000 குடியேறிகள் இந்த பயணத்தில் இருப்பதாக அசோஸியேடட் பிரஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.
மன்னியுங்கள்
ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்கார் மோரிஸன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிய குழந்தைகளிடம் தேசிய மன்னிப்பு கேட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான பேர், குழந்தை பருவத்தில் பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாகியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக விசாரணையை முடுக்கிவிட்ட போது ஏறத்தாழ 8000 பேர் பள்ளி, விளையாட்டு மன்றம் மற்றும் தேவாலயம் ஆகிய இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியது தொடர்பாக சாட்சியம் அளித்தனர்.
ஐந்து ஆண்டுகளாக நடந்த விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. ஆஸ்திரேலிய நேரப்படி திங்கட்கிழமை அவர் ஆற்றிய நாடாளுமன்ற உரையை கேட்க நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர். அந்த உரையில்தான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகளிடம் தேசிய மன்னிப்பு கோரினார் ஆஸ்திரேலிய பிரதமர்.
நல்லதற்கல்ல
ரஷ்யா உடனான வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து விலகும் அமெரிக்காவின் முடிவு குறித்து தமது எச்சரிக்கையை வெளிப்படுத்தி உள்ளார் முன்னாள் ரஷ்ய அதிபர் மிக்கேல் கோர்பட்சாஃப். இது ஆணு ஆயுதகளைவு தொடர்பாக எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிரானது என அவர் கூறி உள்ளார். அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே கையெழுத்தான நடுத்தர தூர அணு ஆயுதங்கள் உடன்படிக்கை 1987 ஆம் ஆண்டு கோர்பட்சாஃப் காலத்தில் கையெழுத்தான ஒன்று.
'கசோஜி கொலைக்கு பின்னணி என்ன?'
சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களை பெற்ற மாயமான பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொலைக்கு பின்னணியில் மோசமான கூலிப்படை உள்ளதாக செளதி அரேபியா தெரிவித்துள்ளது. இது குறித்து ஃபாக்ஸ் நியூஸ் ஊடகத்திடம் பேசிய செளதி வெளியுறவுதுறை அமைச்சர் அடேல் அல்-ஜுபேர், ஜமால் கசோஜயை கொன்ற செயல் மிக பெரிய தவறு என்று குறிப்பிட்டார். செளதி இளவரசர் இந்த கொலைக்கு உத்தரவிட்டதாக கூறப்படுவதை அவர் மறுத்தார். செளதியின் முடியாட்சியை தொடர்ந்து விமர்சித்து வந்த ஜமால் கசோஜி, அக்டோபர் 2ஆம் தேதி துருக்கியில் உள்ள செளதி தூதரகத்திற்கு சென்றார். அதன்பின் அவரைக் காணவில்லை.
8 ஆண்டுகளாக உடன் வாழ்ந்த இணையை கொன்ற பெண் சிங்கம்
அமெரிக்காவில் உள்ள ஓர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் உறைவிடத்தில் தனது 3 குட்டிகளின் தந்தையை ஒரு பெண் சிங்கம் கொன்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியானாபோலிஸ் உயிரியல் பூங்காவில்10 வயதான யாக் என்ற அந்த ஆண் சிங்கத்தை, 12 வயதான ஜுரி என்ற பெண் சிங்கம் தாக்கியது. பூங்கா ஊழியர்களால் மோதலில் ஈடுபட்ட விலங்குகளை பிரிக்க முடியவில்லை. மூச்சுத்திணறலால் யாக் இறந்துவிட்டது.
எட்டு ஆண்டுகளாக இந்த ஜோடி சிங்கங்கள் ஒரே உறைவிடத்தில் வாழ்ந்து வந்துள்ளன. கடந்த 2015இல், தங்களின் மூன்று குட்டிகளை ஜுரி ஈன்றெடுத்தது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்