ஜமால் கசோஜி: காணாமல் போன பின்லேடனை பேட்டி எடுத்த பத்திரிகையாளர்

செளதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோஜி இஸ்தான்புலில் உள்ள தமது நாட்டு தூதரகத்திற்கு திருமண ஆவணமொன்றை வாங்குவதற்காக சென்றார். ஆனால், அவர் அங்கிருந்து திரும்ப வரவே இல்லை என்கிறது துருக்கி காவல்துறை.

இஸ்தான்புல் அதிகாரிகள் ஜமால் தூதரகத்திலேயே கொல்லப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்கள். ஆனால், அவர் தூதரகத்திலிருந்து கிளம்பிவிட்டார் என்கிறது செளதி.

இந்த இந்த விவகாரத்தை பிரிட்டன் மிகவும் தீவிரமான ஒன்றாக கருதி அதற்கேற்ப அணுகும் என பிரிட்டன் வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான அலுவலகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜமால் கசோஜி விவகாரத்தில் புலனாய்வுக்கு ஒத்துழைக்க முன்பு மறுத்த செளதி, உலக நாடுகளின் அழுத்தங்களுக்குப் பின், புலனாய்வுக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக சௌதி அரேபியா கூறியுள்ளது.

துருக்கி வெளியுறவு அமைச்சகம், புலனாய்வின் ஒரு பகுதியாக தூதரக கட்டடத்திற்குள் அவர்களிடம் கேட்டு தேடுதல் நடத்தப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

யார் இந்த ஜமால்?

சரி யார் இந்த ஜமால். ஒரு ஊடகவியலாளர் காணாமல் போனது உலக அளவில் தலைப்பு செய்தியாக மாற என்ன காரணம்?

ஒரு காலத்தில் செளதி அரச குடும்பத்தின் ஆலோசகராக இருந்தவர், பின் செளதி அரசாங்கத்திற்கு எதிராக திரும்பினார். அதற்கு பிறகு அவர் செளதியிலிருந்து வெளியேறினார்.

இஸ்லாமியர்களின் புனித நகரமான மதினாவில் 1958 ஆம் ஆண்டு பிறந்தவர் ஜமால். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மை பயின்றவர்.

பின் செளதி அரேபியா திரும்பியவர், பத்திரிகையாளராக தம் பணியை தொடங்கினார். ஆப்கனில் சோவியத் ஊடுருவியபோது அது தொடர்பான செய்திகளை உள்ளூர் ஊடகத்தின் சார்பாக சேகரித்தார்.

ஒசாமா பின் லேடனின் எழுச்சியை நேரில் கண்டவர் ஜமால். 1980 - 90 ஆகிய காலகட்டங்களில் பல முறை ஒசாமாவை நேர்காணல் கண்டிருக்கிறார்.

வியத்தகு பத்திரிகையாளர்

அங்கிருந்து பல முக்கிய நிகழ்வுகள் குறித்து எழுதி இருக்கிறார் ஜமால். குறிப்பாக முதல் வளைகுடா யுத்தம் குறித்து பல செய்திகளை அங்கிருந்து வழங்கி இருக்கிறார்.

1990 ஆம் ஆண்டு செளதி அரேபியாவுக்கு திரும்பினார். 1999 ஆம் ஆண்டு அரப் நியூஸ் எனும் ஆங்கில செய்திதாளில் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார்.

2003 ஆம் ஆண்டு அல் வாடன் நாளிதழுக்கு ஆசிரியராக பொறுப்பேற்றார். ஆனால், செளதி அரசின் ஒரு அலுவல் திட்டத்தை விமர்சித்ததற்காக அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார்.

பின் அங்கிருந்து லண்டன் சென்றார். சில காலம் அங்கே வசித்தவர் வாஷிங்டன் சென்று செளதி அரேபியா முன்னாள் உளவுத்துறை தலைவருக்கு ஊடக ஆலோசகராக பணியாற்றினார்.

மீண்டும் 2007 ஆம் ஆண்டு, 'அல் வாடன்' நாளிதழலில் பணிக்கு சேர்ந்தவர், சில சர்ச்சைகளால் மீண்டும் அங்கிருந்து வெளியேறினார்.

அரபு வசந்த எழுச்சிப் பின் 2011 ஆம் ஆண்டு, பல நாடுகளில் இஸ்லாமிய குழுக்கள் அதிகாரம் அடைந்தன. அவர்களுக்கு தன் ஆதரவை வழங்கினார் ஜமால்.

கத்தார் அரசின் ஆதரவில் இயங்கும் 'அல் ஜசீரா'வுக்கு எதிராக செளதி ஆதரவில் அல் அரப் தொலைக்காட்சி 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது அதன் தலைமை பொறுப்பை ஏற்றார் இவர்.

ஆனால், 2015 ஆம் ஆண்டு பஹ்ரைனில் ஒளிப்பரப்பை தொடங்கிய 24 மணி நேரத்திலேயே தன் ஒளிப்பரப்பை நிறுத்தியது அந்த தொலைக்காட்சி. அதற்கு பஹ்ரைனின் எதிர்க்கட்சி தலைவரை பேச அழைத்ததுதான் காரணம்.

செளதியின் விவகாரங்கள் குறித்து காத்திரமாக எழுதும் செய்தியாளராக பார்க்கப்பட்டார் ஜமால்.

செளதியைவிட்டு வெளியேறினார்

ஜமால் 2017 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் செளதியைவிட்டு வெளியேறி அமெரிக்கா சென்றார்.

கைது செய்யப்படுவோம் என்ற பயத்தில் பலர் செளைதியைவிட்டு வெளியேறுவதாக வாஷிங்டன் போஸ்டில் செப்டம்பர் மாதம் எழுதிய முதல் பத்தியில் குறிப்பிட்டு இருந்தார்.

தனது பத்தியை வெளியிட கூடாது என்று செளதி அரசு 'அல் ஹயாட்' பத்திரிகையின் வெளியீட்டாளருக்கு அழுத்தம் தருவதாக குற்றஞ்சாட்டி இருந்தார்.

ட்விட்டரில் 1.8 மில்லியன் பேர் ஜமாலை பின் தொடர்கிறார்கள்.

அவர் செளதியை கடுமையாக விமர்சித்தார். அதன் முடி இளவரசரை ரஷ்ய அதிபர் புதினுடன் ஒப்பிட்டர்.

அவர் காணாமல் போனதை குறிப்பிடுவதற்காக, வழக்கமாக பத்தி எழுதும் இடத்தில் ஜமால் பெயரை மட்டும் போட்டு வெற்றிடம் விட்டது வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :