அமிர்தசரஸ் ரயில் விபத்து: காணாமல் போன குழந்தை தாயுடன் சேர்ந்த நெகிழ்ச்சி தருணம்

    • எழுதியவர், ரவீந்தர் சிங் ராபின்
    • பதவி, அமிர்தசரஸ்

தன் 10 மாத மகனை மீண்டும் தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்ட ராதிகாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அக்டோபர் 19ம் தேதியன்று நடைபெற்ற தசரா நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட ரயில் விபத்தில் தன் குழந்தையை தொலைத்திருந்தார் ராதிகா. அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அமன்தீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தாயையும், குழந்தையையும் சேர்த்து வைத்தது அங்குள்ள மாவட்ட சட்ட சேவை மையம். அது மட்டுமல்லாமல், அவர்கள் அமிர்தசரஸ் ரயில் விபத்தில் காணாமல் போய் நின்று கொண்டிருந்த மற்ற 3 குடும்பங்களையும் சேர்த்து வைத்துள்ளனர்.

ராதிகாவின் குடும்பமும், அவரது சகோதரியான ப்ரீத்தியின் குடும்பமும் தசரா விழாவை காண சென்றிருந்தபோது, அவர்களின் குடும்ப நபர்கள் ரயிலால் தூக்கி அடிக்கப்பட்டனர். தற்போது சிகிச்சைக்கு பிறகு ராதிகாவால் பேச முடிகிறது. ஆனால், அவரது மகன் விஷால் விளையாடுவதை பார்க்கும்போது அவ்வளவு மகிழ்ச்சி கொள்கிறார்.

காவல்துறையும், சிவில் நிர்வாகமும், பாதிக்கப்பட்டவர்களை மீட்பது, மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தருவது, சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவது என அயராது உழைத்துக் கொண்டிருக்க, ஒருபுறம் சட்ட சேவை மையம் காணாமல் போன நபர்களுடன் அவர்களது குடும்பத்தினரை சேர்த்து வைத்துக் கொண்டிருந்தது.

தலைமை நீதிமன்ற மாஜிஸ்திரேட் மற்றும் மாவட்ட சட்ட சேவை மையத்தின் பொதுச் செயலாளரான சுமித் மக்கர் பிபிசியிடம் பேசுகையில், "நாங்களும், பஞ்சாப் மாநில சட்ட சேவை மையத்தின் உறுப்பினர் செயலாளரான ஹர்பிரீத் கவுர் ஜீவனும் இணைந்து இரண்டு உதவி மையங்களை உருவாக்கினோம். ஒன்று குருநானக் தேவ் மருத்துவமனையிலும் மற்றொன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிவில் மருத்துவமனையிலும் உள்ளன" என்றார்.

"குருநானக் மருத்துவமனைக்கு நாங்கள் சென்றபோது ப்ரீத்தி என்ற பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்தோம். அவர் தலையில் காயம் இருந்தது. பின்னர் அமன்தீப் மருத்துவமனை சென்றபோது அங்கு மூன்றரை வயது குழந்தை ஆருஷை பார்த்தோம். ஆருஷின் பெற்றோர் இறந்துவிட்டதாகவும், அவரை சிலர் கூட்டிக் கொண்டுபோக தயாராக இருப்பதாகவும் கேள்விப்பட்டோம். அதனை நிறுத்தி விசாரணை செய்ததில் அந்தக் குழந்தையின் தாய் பெயர் ப்ரீத்தி என்பது தெரியவந்தது" என்கிறார் மக்கர்.

உடனே ஆருஷை புகைப்படம் எடுத்து, வேறு சில புகைப்படங்களோடு ப்ரீத்தியிடம் அதை காண்பித்தோம். அவர் சரியான குழந்தையை தேர்ந்தெடுக்கிறாரா என்பதை உறுதி செய்தோம். அவர் சரியாக அடையாளம் காண்பிக்க குழந்தையை அவரிடம் ஒப்படைத்தோம்.

இதே போல பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சிவில் மருத்துவமனைக்கு சென்றபோது, 10 மாத குழந்தையான விஷால் பற்றி தெரிய வந்தது. விஷாலின் பெற்றோர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. விஷாலை ரயில் தடத்தில் கண்டுபிடித்த மீனா தேவி என்பவர் சிகிச்சைக்காக அக்குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்.

"அந்தப் பெண் மீது சந்தேகம் கொண்ட உறுப்பினர் செயலாளர், அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அக்குழந்தையை ரயில்வே தடத்தில் கண்டெடுத்ததாக அப்பெண் கூறினார்" என்று கூறும் மக்கர், குழந்தையை பாதுகாப்பாக காவலில் வைத்தார்.

"இந்நிலையில் அமன்தீப் மருத்துவமனையில் உள்ள ராதிகாவை கண்டுபிடித்து அவரிடம் பல புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. பின்னர் அவரது குழந்தை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது"

ராதிகா தனது 10 மாத குழந்தையை பார்த்துக் கொள்ள அவருடன் மாவட்ட சேவை மைய பெண் அதிகாரிகள் போடப்பட்டுள்ளனர். குழந்தைகள் நல அதிகாரியான கவல்ஜித் கவுர் கூறுகையில், "குழந்தை விஷாலுக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. நாங்கள் அவர்களை பார்த்துக் கொள்வோம்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :