You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போல்சனாரூ பிரேசில் தேர்தலில் வெற்றி: இனவெறி, வன்புணர்வுக் கருத்துகளை பேசியவர்
பிரேசில் அதிபர் தேர்தலில் தீவிர வலதுசாரி வேட்பாளரான சயீர் பொல்சனாரூ மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
தீவிர வலதுசாரியின் எழுச்சி
ஏறத்தாழ அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட சூழ்நிலையில் பொல்சனாரூ 55 சதவீத வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட ஃபெர்னாண்டோ 45 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர். ஃபெர்னாண்டோ இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்.
"ஊழலை ஒழிப்பேன், பிரேசிலில் நிலவிவரும் அதிகப்படியான குற்றங்களை குறைக்க பாடுபடுவேன்" என்ற வாக்குறுதிகளை தேர்தல் பிரசாரத்தின் போது முன் வைத்தார்.
பிரிவினை பிரசாரம்
தேர்தல் பிரசாரமே தீவிரமாக பிரிவினையை தூண்டும் விதமாக இருந்தது.
எதிர்தரப்பு வென்றால் பிரேசில் நாசமாகுமென இரு தரப்புமே பிரசாரம் செய்தது.
சயீர் பொல்சனாரூவை சுற்றி எப்போதுமே முன்னாள் ரனுவத்தினர் இருந்தனர். பொல்சனாரூவும் தேர்தல் பிரசாரத்தின் போது பிரேசில் ராணுவ ஆட்சியில் இருந்த காலக்கட்டத்தை நினைவு கூர்ந்தார். இதனை முன் வைத்து, எதிரணியினர் பொல்சனாரூ வென்றால் நாட்டின் ஜனநாயகமே கேள்விக் குறியாகும் என்று வாதிட்டனர்.
ஆனால் பொல்சனாரூ, தேர்தல் வெற்றி கூட்டத்தில், "அரசமைப்புச்சட்டம், ஜனநாயகம், மற்றும் சுதந்திரம்" ஆகியவற்றை பாதுகாப்பேன் என்றார்.
மேலும் அவர், "இது ஒரு கட்சியின் வாக்குறுதி அல்ல, ஒரு மனிதனின் வார்த்தை அல்ல. இது கடவுள் முன் எடுத்துக் கொள்ளப்படும் வாக்குறுதி" என்றார்.
பாதுகாப்பு
பொல்சனாரூ தேர்தல் பிரசாரத்தில் மையமாக இருந்தது, பிரேசில் மக்களின் பாதுகாப்புதான். தன்னை கடும்போக்காளராக காட்டிக் கொண்ட அவர், பிரேசில் வீதிகளை பாதுகாப்பேன் என்றார்.
அதுபோல, எனது அரசாங்கம் துப்பாக்கிகள் எடுத்து செல்வது தொடர்பான சட்டங்களை இலகுவாக்கும் என்றார்.
பொருளாதாரத்தில் அரசின் தலையீட்டை குறைப்பேன் என்றவர், பருவநிலை தொடர்பான பாரீஸ் ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவேன் என்றும் பிரசாரத்தின் போது கூறி இருந்தார். அமேசான் பகுதியில் பிரேசிலின் இறையாண்மையை இந்த ஒப்பந்தம் சமரசம் செய்கிறது என்று இதற்கு அவர் காரணமும் கூறி இருந்தார்.
ஊழல்
இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சி மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டிருந்தது. பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இதன் காரணமாக லுலா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அதனால்தான், ஃபெர்னாண்டோ களம் கண்டார்.
அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாமல் இருந்தாலும், அவர் கட்சியை அதிரவைத்த ஊழல் புகார்கள் தேர்தலில் எதிரொலித்தன.
ஜனவரி 1ஆம் தேதி பொல்சனாரூ அதிபராக பொறுப்பேற்பார்.
பொல்சனாரூ கடந்து வந்த பாதை
பொல்சனாரூ தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், தேர்தல் பிரசாரத்தின் போது அவருக்கு தீவிரமான எதிர்ப்புகள் எழுந்ததன. கத்தியால் அவர் குத்தப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது. அவருக்கு எதிராக பல லட்சம் பெண்கள் ஒரு "அவர் வேண்டாம்" என்று பொருள் தரும் ஹேஷ்டேக் பிரசாரம் செய்தனர்.
இடதுசாரி கட்சியான தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மரியா டோ ரொசாரியோ-வை பார்த்து "உன்னை வன்புணர்வு செய்யமாட்டேன். ஏனென்றால் நீ அதற்குத் தகுதியானவர் இல்லை" என்று ஒரு முறை கூறியவர் போல்சனாரூ.
அவருக்கு எதிராக பெண்கள் மேற்கொண்ட பிரசாரம் குறித்துப் படிக்க: பிரேசில் ஜனாதிபதி வேட்பாளரின் அதிர்ச்சியூட்டும் 'வன்புணர்வு' கருத்து
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :