You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கூட்டைவிட்டு வெளியே வா பெருங்காடு காத்திருக்கிறது: தனியொரு பெண்ணின் பயண அனுபவங்கள் #beingme
பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் எட்டாவது கட்டுரை இது.
எப்படி உங்க வீட்ல உன்ன தனியா வெளியவிடறாங்கனு தொடங்கி உனக்கு பயமா இல்லையா? ஏதாவது தப்பா நடந்தா என்ன பண்ணுவ? கூட யாரையாவது கூட்டிட்டு போனா நல்லா இருக்குமே? கல்யாணம் பண்ணிட்டு புருஷனோட வெளிய சுத்த வேண்டியது தானே-னு ஏகப்பட்ட கேள்விகள்; இதுக்கெல்லாம் பதில் சொல்லி எனக்கு அலுத்து போயிடுச்சு.
இது எனக்கு மட்டுமல்ல தனியா பயணம் செய்யணும்னு நினைக்கிற அத்தனை பெண்களும் சந்திக்கின்ற கேள்விகள்தான் இவை என்று எனக்கு தெரியும்.
எல்லாத்துக்குமே ஒரு ஆரம்பம் வேணும். நான் முதல்முறையா வெளிய தனியா போனது தேனி, என் கூட வேல பாக்குற பொண்ணோட கல்யாணத்துக்கு. வீட்ல பொய் சொல்லிட்டுதான் போனேன்.
ஆரம்பத்துல ரொம்ப பயமாதான் இருந்துச்சு. நைட் நேரம் பஸ் ஏறுனதும் தூக்கம் வரல. முதல் முறை புதுசா ஒண்ணு செய்யும் போது எல்லாருக்கும் வர்ற அதே எண்ணங்கள் தான் எனக்கும் வந்தது.
ஆனா நாம பயப்படும் அளவுக்கு உலகம் அவ்ளோ மோசம் இல்ல. நான் கடந்த 3 வருஷமா வெளிநாடு, இந்தியானு பல இடங்கள் தனியா பயணம் பண்ணிட்டு இருக்கேன். இது வரைக்கும் நான் போன இடங்கள், சந்தித்த நபர்கள் என அத்தனை பேரும் நல்லவங்க தான்.
எப்பவுமே நாம் ஒரு குழுவோட போனா நம்ம யார் கூட பயணம் செய்றோமோ அவங்ககூட மட்டும்தான் இருப்போம், ஆனா தனியா பயணம் செஞ்சா நாம பாக்குற அத்தனை பேரும் நமக்கு தெரிஞ்சவங்க தான். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க அவங்க கிட்ட இருந்து நம்ம கத்துக்குறதுக்கு ஏதோ ஒண்ணு இருக்கும். நமக்கு இன்ஸ்பிரஷன் எங்க இருந்து வேணா வரும், ஒவ்வொரு இடமும் ஏதோ ஒண்ணு நமக்கு சொல்லி கொடுக்கும்.
உடலின் வலிமை மனதில்
இதுவரை இமய மலைக்கு மூன்று முறை ட்ரெக்கிங் போயிருக்கேன். முதல் முறை போகும் போது என்னால ஏறவே முடியல. முதல் கேம்ப் சைட்டுக்கு க கூட போய் சேருவேன்னு எனக்கு தோணல. அப்போ என் கூட இருந்த 'ட்ரெக்கிங் லீட்' என் கிட்ட, மனசு சொன்னா உடம்பு கேட்கும், உன் மனச திடப்படுத்திக்கோனு சொன்னாரு. அந்த ட்ரெக்கிங் மட்டும் இல்ல, என் வாழ்க்கைக்கே அது ஒரு பெரிய பாடமா தான் அமைஞ்சது.
எல்லாருமே பயப்புடற ஒரு விஷயம், பொண்ணு தனியா தெரியாத ஊருக்கு போனா யாரவது ஏதாவது பண்ணிடுவாங்கனு தான். ஆனால் உண்மை அது இல்லை. உலகத்துல என்னென்னவோ நடக்குது தான், தனியா போனா நமக்கும் அப்படி ஆகிடும்னு இல்ல. தனியா ஒரு பொண்ணுவர்றாங்கனாலே சுத்தி இருக்க அத்தனை பேரும் அவங்கள பாதுகாக்க தான் முயற்சி பண்ணுவாங்க. ஆனா நாமும் ஒண்ணு புரிஞ்சிக்கணும், நமக்குஉதவி வேணும்னா கேட்கணும், கேட்டா தான் கிடைக்கும், உதவி கூட. இதுவும் எனக்கு பயணங்கள் தந்த பாடம்தான்.
இரண்டாவது முறை இமயமலைக்கு போகும் போது, டெல்லியில் இருந்து டெஹராடூனுக்கு போக வேண்டிய பிளைட் கேன்சல் ஆகிடுச்சு. நான் மறு நாள் காலை 6 மணிக்கு ஹரித்வாரில் இருந்தே ஆகணும், இல்லைன்னா ட்ரெக்கிங் போக முடியாம போய்டும். அதே பிளைட்ல போக வேண்டிய ஒருத்தர் அந்த நேரத்துல எப்படி போகலாம், எங்க பஸ் கிடைக்கும், பஸ்ல போனா ஹரித்வார் போய் சேர எவ்வளவு நேரம் ஆகும், எந்த நேரத்துல போனாலும் பயம் இல்லாம போகலாமானு சகலமும் சொன்னார். அந்த நாள் நான் ஹரித்வாருக்கு நடுநிசில தான் போய் சேர்ந்தேன் ஆனா அந்த நேரத்துலயும் அவ்வளவு பாதுகாப்பா தான் நான் உணர்ந்தேன்.
இங்க ஒரு விஷயம் நாம் புரிஞ்சிக்கணும் எந்த இடத்துக்கு போனாலும் தைரியமா இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அதே சமயம் அசட்டு தைரியம் கூடாது. நம்ம உள்மனசு சொல்றது எப்பவுமே சரியாகதான் இருக்கும் இங்கே ஏதோ சரியில்லைனு நமக்குப்பட்டா உடனே துரிதமாகவும் சமயோஜிதமாகவும் செயல்படணும் இதுவும் பயணங்கள் எனக்கு சொல்லி தந்த பாடம்தான்.
உண்மை உரையாடுதல்
இது எல்லாம் இந்தியாவுக்கு மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் பொருந்தும் . என் பிறந்தநாளுக்கு வெளி நாட்டுக்கு போயிடுவேன். ஒரு முறை நியூஸிலாந்துக்கு போகும் போது சென்னை ஏர்போர்ட்லே என் மொபைல் உடைஞ்சிடுச்சு.15 நாள் ஃபோன், இன்டர்நெட்னு எதுவுமே இல்லாமதான் சுத்தினேன், மக்களை மட்டுமே நம்பி. இதுல உச்சக்கட்டமே நமக்கு முன்பின் பழக்கம் இல்லாதவங்க நம்ம பிறந்தநாளுக்கு, நம்ம எதிர்பார்க்காத விதமா வாழ்த்துறதுதான். புது இடங்களுக்கு பயணம் செய்யும்போது நாம மனசுல வெச்சுக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் நாம் தேவையில்லாமல் வீணான கவனத்தை ஈர்க்காமல், பதட்ட படாமல் இருக்க வேண்டும் என்பதுதான் அது.
புது மனிதர்களை சந்திக்கும் போது தான் நம்ம யாருன்னே நமக்கு தெரியும். மறுபடியும் பார்க்க மாட்டோம்னு நினைக்கிறவங்ககிட்டதான் நாம் அநியாயத்துக்கு உண்மையை பேசுவோம்.
ஆரம்பத்துல எங்க தங்கணும் எங்கெல்லாம் போகணும் எல்லாமே பிளான் பண்ணிட்டு தான் போவேன். ஆனா நாளடைவில் எதுவுமே ஏற்பாடுசெய்யாம போவது பழகிடுச்சு. பைய மட்டும் மாட்டிகிட்டு கிளம்பிடுவேன் எதுவா இருந்தாலும் அங்க போய் பார்த்துக்கலாம்னு.
கங்கை கரைல இருந்து சூரிய அஸ்தமனம் பார்த்த காட்சி எனக்கு இன்னும் நியாபகம் இருக்கு. இப்படி காடு,மலைனு மட்டும் இல்லாமல் ஒரு இடத்தோட உணவு, கலாசாரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ளவும் பயணம் செய்வேன்.
பொன்னியின் செல்வன் காதல்
எனக்கு பொன்னியின் செல்வன் புத்தகத்து மேல அவ்வளவு பிரியம். அந்த புத்தகத்தை படிச்ச எல்லாருக்குமே காவிரி மேல காதல் வந்திருக்கும். சமீபத்துல காவிரி கரைபுரண்டு ஓடுனதை பார்த்தே ஆகணும்னு அவ்வளவு ஆசை. அதுவும் சரியா ஆடிப்பெருக்கு, காவிரி கரையில் இருந்துபொன்னியின் செல்வன் முதல் பாகம், முதல் 50 பக்கம் படிச்சி ஆகணும்னு புத்தகத்தோடு கிளம்பிட்டேன். திருச்சியில்காவிரி பாலத்துல இருந்து, அதிகாலை, காவிரி காற்று கமழ அந்த பக்கங்களை புரட்டினது அப்படிஒரு ஆனந்தம். இந்த மாதிரி நிறைய அனுபவங்கள் எனக்கு பயணங்கள் மூலமா கிடைச்சிருக்கு.
எப்படி உங்க வீட்ல உன்ன வெளிய விடறாங்கன்னு கேட்பவர்கள் கிட்ட நான் ஒன்னே ஒண்ணுதான் சொல்லுவேன் பெற்றோர்களை விட நம்மை வேறு யாரும் நல்லா புரிஞ்சிக்க மாட்டாங்க. நம்ம ஆசை நம்ம கனவு எல்லாத்துலயும் அவங்களுக்கு இருக்குற அக்கறையைவிட வேறு யாருக்கு இருந்திட முடியும். எனவே என்னோட பயணத்துக்கு எப்பவுமே அவங்க ஆதரவாதான் இருப்பாங்க.
நாம் உலகத்தை எப்படி பார்க்கிறோமோ அது அப்படியாகத்தான் தெரியும். நம்ம எப்படி பார்க்கணும்னு நாம் தான்முடிவு எடுக்கணும்.
இப்படி பயணம் செய்றதுனால உனக்கு என்ன கிடைச்சிருக்குனும் பலர் கேட்பாங்க உண்மைய சொல்லணும்னா என் வாழ்க்கை எந்த விதத்துலயும் மாறல. அதே வீடு, அதே வேலை, அதே இடம், ஆனா இதையெல்லாம் நான் எதிர்கொள்ளும் விதம் தான் மாறி இருக்கு. என்னால் என்னுடைய தினசரி வேலைகளையும்அனுபவிச்சு செய்ய முடியும், என்னுடைய கூட்டை விட்டுவெளியே காடு, மலை, கிராமம்னு பறந்தாலும் சந்தோஷமா இருக்க முடியும். புதிய மனிதர்கள் புதிய உணவு, புதிய கலாசாரம்ன்னு நாம் பழகும்போது ஒவ்வொரு மனிதரையும் நேசிக்கும் பழக்கம் நமக்கு வரும். எல்லாத்துக்கும் மேல நாம சந்தோஷமா இருக்குறது நம்ம கைல தான் இருக்குன்னு என்னோட பயணங்கள் எனக்கு புரியவைச்சிருக்கு.
(தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பாகீரதி ரமேஷ் என்கிற பெண்ணின் பயண அனுபவங்களே இந்தக் கட்டுரை. பெண்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் குறித்து பேசப்படும் இந்த #beingme தொடர் பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியா ராஜசேகரால் தயாரிக்கப்பட்டது.)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :