You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
’என் உடலின் விருப்பமும், உணர்வும் நீங்கள் விரும்புகிற மாதிரி ஏன் இருக்க வேண்டும்?’ #beingme
பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் ஐந்தாவது கட்டுரை இது.
உங்கள் கைகளில் ரத்தம் படிந்த கத்தியும், அரிவாளும் இருப்பதை அறிந்துகொண்டே, இந்த நொடி நான் உங்கள் முன் நிற்கிறேன். எந்தவித சலனமும் இல்லாமல் உங்களை உற்றுப் பார்க்கிறேன். சில கேள்விகளை முன்வைக்கிறேன். 'நான்' மாலினி ஜீவரத்தினம். இயக்குநர், மனித உரிமை செயற்பாட்டாளர்.
ஒரு ஆண் பெண்ணை நேசிப்பதைப்போல், ஒரு பெண்ணாய் சக பெண்ணை காதலிக்கும் ஒரு பாலின ஈர்ப்பாளர்.
நானும், நாமும்
நான் என்பது சுயநலமான சொல் என்றே நமக்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. 'நான்' என்பது சுயநலமான சொல் அல்ல. மிகவும் சுய மரியாதையான சொல்.
பிறரை ஒருபோதும் ஒடுக்காத 'நான்' எனும் சொல், கர்வமானதல்ல, அது கம்பீரமானது. பிறரை எல்லாச் சூழலிலும் ஒடுக்கும் குறிப்பிட்ட சமூகத்தின் "நாம்" என்ற சொல் பொதுநலமல்ல. ஒடுக்குமுறைக்கு அணிதிரட்டும் சொல்.
உங்கள் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் நான் அமர நீங்கள் முகம் சுளிக்கலாம். நான் உணவருந்தும் மேசையில் உங்கள் நண்பன் அமர்ந்தால் அவனின் நட்பை அன்றோடு நீங்கள் துண்டிக்கலாம். உங்கள் வாடகை வீட்டில் எனக்கு மட்டும் இடம் மறுக்கப்படலாம். என் அடையாளம் தெரிந்தபின் ஒரே அறையில் என்னுடன் விளையாடும் என் தங்கையை நீங்கள் எச்சரிக்கலாம். எப்பவும்போல் அதே அன்புடன் நான் உறங்கும் என் அம்மாவுடனான இரவை நீங்கள் சந்தேகிக்கலாம். என் சக தோழியுடன் தெருவில் நடக்கும் போது என் மீது நீங்கள் கல்லெறிந்து வசை மொழி பாடலாம். பொது சபையில் நான் நேசிக்கும் பெண்ணின் காதலை இன்னும் சத்தமாக சொன்னால் நீங்கள் என்னை கொடூரமாக வெட்டி கொல்லவும் செய்யலாம்.
விடுதலைக் காற்று
157 வருடங்களாக மறைக்கப்பட்டு ஒடுக்குமுறைக்குள்ளாகி இறந்த அத்தனை பேரின் விடுதலைக் குரல்களின் மிச்சமாய் எம் சமூகம் இன்று விடுதலையை சுவாசிக்க தொடங்கி இருக்கிறது.
புறக்கணிப்பு, நிராகரிப்பு, வெறுப்பு இது அத்தனையும் கடந்துகொண்டே மெல்லச் சிரிக்கிறேன் நான்.
என் சிரிப்பு உங்களுக்கு கோபத்தை உண்டாக்கலாம் எதிர்மறையாக உங்கள் கோபம் எனக்கு வாழ்க்கையை நேசிக்கவே கற்றுக் கொடுக்கிறது.
நீங்கள் என்னை ஒவ்வொருமுறை நிராகரிக்கும்போதும் நான் இரட்டிப்பாய் உயிர்பெறுகிறேன்.
சிரி... இப்போது சிரி
எனக்கு 8 வயது இருக்கும். உடல் ரீதியான மோசமான தாக்குதல் எனக்கு தொடுக்கப்பட்டது. கரண்டி கருப்பாகும் மட்டும் இறுக சூடு வச்சு என் தொடையில் அழுத்தின அந்த நொடி. "சிரி...இப்போ சிரி... இப்போ நீ மட்டும் சிரிக்கலேனா இந்த சூட்டை எடுக்க மாட்டேன். இன்னம் 2 மடங்கு அது உன் தொடையை பொசுக்கும். இப்போ சிரிக்கிறியா இல்ல சூடு வைக்கவானு என் சிறு உடல் வலியோடு சிரிக்க நிர்பந்திக்கப்பட்ட அந்த நொடி, வெடித்து அழ ஆசைப்பட்ட அந்த நிமிடம், திணறி திணறி தடுமாறி வலியோடு சிரிக்க பழகிய அந்த பொழுது, கண்களில் கண்ணீரும் கோபமும் மட்டுமல்ல, குடும்ப வன்முறைக்கு எதிரான அடக்குமுறைக்கெதிரான உரிமைச் சிரிப்பும் எனக்குள் பிறந்தது.
பதினைந்து வயதாகியும் வயதுக்கு வராத ஒரே காரணத்தால் கூட பிறந்தவங்களே இவ `9 டி`... இன்னும் வயசுக்கு வரல பாத்தியானு கிண்டல் செய்த தருணத்தில்தான் ’9’ என்கிற சொல்லின் அரசியல் அர்த்தம் தேட ஆரம்பித்தேன். இன்னைக்கு என்னை நீங்க ’9’ னு சொன்னா பெருமை தான் படுவேன், கோபப்படமாட்டேன்.
பெற்ற மகளை ஆணவக் கொலை செய்து சிரிக்கிற, குழந்தைகளை எந்த தயக்கமும் இல்லாமல் வன்புணர்வு செய்கிற, "ஆமாம் பொண்ணுன்னா வீட்டுல அடக்க ஒடுக்கமா இருக்கணும். இரவுல ஆண் நண்பரோட வந்தா அப்படிதான் பாலியல் வல்லுறவு செய்வோம்" என்கிற எண்ணற்ற மனிதர்கள் இருக்கும் இந்நாட்டில் '9' என்ற எண்ணாக அடையாளப்படுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.
இன்னும் சில வலிகளை உண்மைகளை எழுத 'மரத்து' 'மறுத்து' போனாலும் DOMESTIC VIOLENCE, ABUSE, UNTOUCHABILITY என என் வாழ்வில் எத்தனை துயர்களை நான் கடப்பினும், தனிமையில் தவிப்பினும், உணர்வற்று இருப்பினும், உயிரற்று வாழ்வினும், உரிமையற்று இறக்க மறுப்பேன்.
பெண் என் நேசத்திற்குரியவள். அவளை காதலிப்பதும் அந்த காதலை வழிபடுவதும் என் விருப்பம் சார்ந்தது என் உணர்வு சார்ந்தது அதுவே இயற்கை சார்ந்தது என்றே நான் கருதுகிறேன்.
என் உடலை அழிக்கலாம்...உரிமையை அழிக்க முடியாது
இயற்கையிலேயே மனித உடலோட விருப்பத்தேர்வு ஒருவருக்கு இருப்பது போல இன்னொருத்தருக்கு இருப்பது இல்லை. இது அறிவியல் சான்று. என் உடலின் விருப்பம், என் உணர்வின் விருப்பம், உங்களை போல இல்லை என்பதற்காக என்ன அடிச்சு கொல்வீர்களா இல்லை அன்போட புரிந்து கொள்வீர்களா. என்னை போல் ஒரு பிள்ளை உங்கள் வீட்டில் இருந்தால் அந்தப் பிள்ளையை உயிரோட எரித்து விடுவீர்களா? மழுப்பல் பதில் எதுவும் வேண்டாம்.
வரலாறு நெடுகிலும் தன்பால் ஈர்ப்பாளர்கள் மீது வன்முறையைத்தான் ஏவி இருக்கிறீர்கள்.
எரித்து இருக்கிறீர்கள். மண்ணோட மண்ணாக பொதைத்து இருக்கிறீர்கள். ஆவணமே இல்லாமல் அழித்து இருக்கிறீர்கள். இதை கேள்வி கேட்கும் நான் இந்த சமூகத்தில் மனநோயாளியாக அறிமுகப்படுத்தப்படுகிறேன்.
நான் நானாக இருப்பதால் இந்த சமூகம் என்னை மனநோயாளி என்கிறது. நான் நானாக இருப்பதால் இந்த சமூகம் என்னை எய்ட்ஸ் வந்தவர் என்கிறது. நான் நானாக இருப்பதால் இந்த சமூகம் உன் தாயுடனும் உறவு வைத்துக்கொள் அது மட்டுமே நீ என்கிறது. நான் நானாக இருப்பதால் நான் ஆணா? பெண்ணா? என கேள்வி கேட்கிறது. அப்பேற்பட்ட நான் யார்? இந்த சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பாலீர்ப்பை சேர்ந்த ஒடுக்க முடியாத ஒரு குரல்.
எனக்கெதிராக வசை பாடுபவர்கள், ஆசிட் அடிப்பதாக மிரட்டுபவர்கள், வன்புணர்வு செய்ய காத்திருப்பவர்கள் அத்தனை பேருக்கும் ஒரே பதில், "என் உடலை அழிக்கலாம்! என் உரிமைக்கான உணர்வை ஒடுக்குமுறைக்கெதிரான குரலை ஒடுக்க முடியாது".
உடல். அதன் அடிப்படை அறிவியல். அது பேசும் அரசியல். உங்கள் மதத்தை கேள்விக்குள்ளாக்குகிறதா? உங்கள் ஜாதியை உடைத்தெறிகிறதா? உங்கள் நிற பேதத்தை நிர்வாணமாக்குகிறதா? உங்கள் வர்க்கத்தை வதம் செய்கிறதா அப்படியென்றால் உங்கள் அத்தனை கொள்கைப்பிடிப்பினையும், ஆண்ட அதிகாரத்தையும் சந்தேகப்படுங்கள். மாறாக எது இயற்கையென, இயற்கையைச் சந்தேகிப்பது உங்கள் அறிவை நீங்களே கேள்விக்குட்படுத்துவதற்குச் சமம்.
பொது புத்தியின் படி உங்கள் கடவுளையோ உங்கள் மதத்தையோ நீங்கள் கேள்விகேட்காமல் இருப்பது தான் சரி என்று உங்கள் மதமும் கடவுளும் கலாசாரமும் சொல்கிறதென்றால் நீங்கள் உங்கள் கடவுளை நிராகரிப்பதில் தவறில்லை என்றே நான் கூறுவேன்.
(#beingme தொடர், பிபிசி தமிழ் செய்தியாளர் விஷ்ணுப்ரியா ராஜசேகரால் தயாரிக்கப்பட்டது)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :