மதச் சடங்கு விவகாரத்தில் நீதிமன்றம் சுயக் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்: உயர் நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
நாளிதழ்களில் இன்று வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை தொகுத்து வழங்குகின்றோம்.
தினமணி: 'நீதிமன்றம் சுயக் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும்'
மதச் சடங்குகள் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளது என்கிறது தினமணி நாளிதழ்.
"ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதியாக ஸ்ரீ யமுனாச்சாரியார் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரது நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரியும் வெங்கடநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்த நீதிபதி, மதச் சடங்குகள் தொடர்பான வழக்குகளில், நீதிமன்றங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கருத்துக் கூறினார்.
மேலும், பீடாதிபதி நியமனத்துக்கு தடை விதிக்கவும் மறுத்துவிட்டார்." என்று மேலும் அந்நாளிதழ் விவரிக்கிறது.

இந்து தமிழ்: 'தஞ்சை பெரியகோயிலில் போலி சிலைகளா?'
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீ ஸார் மற்றும் இந்திய தொல்லியல் துறையினர் இணைந்து சிலைகளின் தொன்மை குறித்து நேற்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டனர் என்கிறது இந்து தமிழ் நாளிதழ்.

பட மூலாதாரம், Getty Images
"தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து மாயமான மாமன்னன் ராஜராஜ சோழன், பட்டத்தரசி உலகமாதேவி ஐம்பொன் சிலைகள் குஜராத்திலிருந்து மீட்டு கொண்டு வரப்பட்டன. மேலும், இங்கிருந்த பழமையான நடராஜர் சிலை உள்ளிட்ட 10 சிலைகள் களவு போனதாகவும், அவற்றுக்குப் பதிலாக போலி சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, கோயிலில் உள்ள 41 ஐம்பொன் சிலை களையும் ஆய்வு செய்வதென தொல்லியல் துறை, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் முடிவு செய்தனர்.
இதையடுத்து, சிலைகள் மாற்றப்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், 4-வது முறையாக நேற்று தொல்லியல் துறை தென்மண்டல இயக்குநர் நம்பிராஜன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஎஸ்பி ராஜாராமன் தலைமையிலான குழுவினர் சிலைகளின் தொன்மை குறித்து நானோ தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன கருவிகளின் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். காலை 8.30 மணிக்கு கோயிலுக்கு வந்த அவர்கள் மதியம் 2 மணி வரை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் உள்ள 20 சிலைகளையும் ஆய்வு செய்தனர்." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.



பட மூலாதாரம், இந்து தமிழ்

தினத்தந்தி: ''கோவில் ஐதீகங்களில் யாரும் தலையிடக்கூடாது''
சபரிமலை விவகாரம் பற்றி கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், கோவில் ஐதீகங்களில் யாரும் தலையிடக்கூடாது என்று கூறினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
"பெண்களுக்கு எல்லாவற்றிலும் சமஉரிமை இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. இருந்தாலும் ஒரு கோவில் என்று சொல்லும்போது, ஒவ்வொன்றுக்கும் ஒரு சடங்கு இருக்கும். காலம், காலமாக வரும் ஐதீகம் இருக்கும். அதில் யாரும் தலையிடக்கூடாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதிக்க வேண்டும். ஆனால் கொஞ்சம் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்கள், சில சடங்குகள், விஷயங்களில் பார்த்து செய்தால் நன்றாக இருக்கும்." என்று அவர் கூறியதாக விவரிக்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"இது பெண்களுக்கு ஒரு சாதகமான நடவடிக்கை. ஆனால் அதை அவர்கள் தவறாக பயன்படுத்தக்கூடாது. சரியாக பயன்படுத்த வேண்டும். வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் தெரிவித்து இருந்தாலும், அப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை என்று அதை வைரமுத்து நிராகரித்து இருக்கிறாரே? வழக்கு கூட போடணும் என்று சொல்லி இருக்கிறார்கள்."என்று #MeToo விவகாரம் தொடர்பாக ரஜினிகாந்த் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'சென்னையில் நடந்த நூதன திருட்டு'
சென்னையில் நூதன முறையில் விலையுயர்ந்த பைக் ஒன்று திருடப்பட்டுள்ளது என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.
"சென்னை ஏழு கிணறு பகுதியை சேர்ந்த முகமது ஆஃப்ரீன் இரண்டு ஆண்டுகளுக்கு மின் 4.5 லட்சம் ரூபாய்க்கு இரு சக்கர வாகனம் வாங்கி உள்ளார். அதனை விற்க முடிவு செய்து ஓ.எல்.எக்ஸ் தளத்தில் இரு சக்கர வாகனம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் அந்த தளத்தில் தகவல் பகிர்ந்த சில நிமிடங்களில் முகமதுக்கு ஓர் அழைப்பு வந்திருக்கிறது. எதிர்முனையில் பேசியவர் பைக்கை வாங்க விருப்புவதாக கூறி உள்ளார். பின், நேரில் வந்த அந்த நபர் டெஸ்ட் டிரைவிங் செல்ல வேண்டுமென கூறி பைக்குடன் தப்பி சென்றுள்ளார்." என்று போலீஸ் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












