அமிர்தசரஸ் விபத்து: அனுமதி பெற்று நடந்ததா தசரா விழா? - வெளிவரும் உண்மைகள்

பட மூலாதாரம், Hindustan Times
- எழுதியவர், ரவீந்தர் சிங் ராபின்
- பதவி, அமிர்தசரஸ்
அமிர்தசரஸ் விபத்து ஏற்பட்டதையடுத்து, தோபி காட் பகுதியில் தசரா நிகழ்ச்சி கொண்டாட அந்த ஒருங்கிணைப்பாளர்கள், காவல்துறை மற்றும் நகராட்சியிடம் உரிய அனுமதி பெற்றார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த சம்பவம் நடைபெற்றவுடன், தோபி காட்டில் தசரா நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து அமிர்தசரஸ் காவல்துறையினர் தெளிவான பதில் கொடுப்பதை தவிர்த்து வருகின்றனர்.
எனினும், அந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க தனது அலுவலகம் அனுமதி வழங்கியதாக இணை ஆணையர் அம்ரிக் சிங் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், நகராட்சி அலுவலகத்தில் இருந்து நிகழ்ச்சி நடத்த அனுமதி பெறாத பட்சத்தில் காவல்துறையின் அனுமதி செல்லாமல் போய்விடும்.
இந்நிலையில், "நிகழ்ச்சி நடத்த எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை" என அமிர்தசரஸ் நகராட்சி ஆணையம் சொனாலி கிரி உறுதிபடுத்தியுள்ளார். மேலும் பிபிசியிடம் பேசிய அமிர்தசரஸின் மேயர் கர்ம்ஜித் சிங் ரின்டு, ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சிக்கான அனுமதி கோரி விண்ணப்பிக்கவே இல்லை என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், NARINDER NANU
இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த தீயணைப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையின் அனுமதியையும் பெற வேண்டும். அதனையும் அவர்கள் பெறவில்லை.
கடந்த அக்டோபர் 15ஆம் தேதியன்று தசரா கமிட்டியின் தலைவர் சௌரப் மதன் மிது, காவல்துறை இணை ஆணையருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில் தசரா நிகழ்ச்சியில் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அவரது மனைவி நவ்ஜோத் கௌர் சித்து கலந்து கொள்ளக்கூடும் என்பதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மக்களின் பாதுகாப்புக்காகவும் இது கோரப்பட்டது.
இது தொடர்பாக பேச தசரா கமிட்டி தலைவர் மிதுவை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது மொபைல் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மொகம்புரா காவல் நிலைய மூத்த அதிகாரி அக்டோபர் 17ஆம் தேதி வழங்கியுள்ள அறிக்கையில், தசரா நிகழ்ச்சியில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த அனுமதிக்கக் கோரி அஞ்சல் அனுப்பப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அங்கு 20 ஆயிரம் மக்கள் கூடலாம் என்பதால், குறிப்பிட்ட அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த மட்டும் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Hindustan Times
ஒரு ஏக்கருக்கும் குறைவான பகுதி என்பதால் தோபி காட்டில் 20 ஆயிரம் மக்களுக்கு இடமில்லாமல் இருக்கும். அந்த இடத்திற்கு உள் நுழைவதற்கும் வெளியே வருவதற்கும் ஒரே கேட்தான். அதுவும் 10 அடி அகலம்தான். அந்த மைதானத்தின் மற்றொரு முனையில், மேடை அமைக்கப்பட்டு, வி ஐ பி நுழைவும் மேடைக்கு பின்புறம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ரயில்வே பாதைக்கு எதிராக, மக்களுக்கு எல் இ டி திரையும் ஒருங்கிணைப்பாளர்களால் பொறுத்தப்பட்டிருந்தது. ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த மக்கள், எல் இ டி திரையில் மேடை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


தசரா நிகழ்ச்சிக்கு உள்ளூர் எம் எல் ஏ மற்றும் அமைச்சர் ஆகியவர்கள் சிறப்பு விருந்தினர்கள் என்பதால், தோபி காட்டில் நிகழ்ச்சி நடப்பதற்கு முன் அவ்விடத்தை மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் நேரில் சென்று ஆய்வு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பிபிசியிடம் பேசிய டிஜிபி சுரேஷ் அரோரா, "ரயில்வே துறையின் கூடுதல் டிஜிபி இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். முதல்வர் அமரிந்தர் சிங்கின் உத்தரவுபடி, ஜலந்தர் பிரிவு ஆணையர் பல்டியோ புருஷத்ராவிற்கு பஞ்சாப் உள்துறை அறிவிப்பானை அனுப்பியுள்ளது. அதில் அமிர்தசரஸ் சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












