அமிர்தசரஸ் விபத்து: "தசரா குறித்து உரையாடியதே நான் என் அக்காவுடன் பேசிய கடைசி பேச்சு"

ராகுல் டோக்ரா

பட மூலாதாரம், GURPREET SINGH CHAWLA / BBC

படக்குறிப்பு, ராகுல் டோக்ரா

அமிர்தசரஸில் 59 உயிர்களை பலிவாங்கிய சம்பவம் குறித்து அப்பகுதியில் வசிக்கும் ராகுல் டோக்ரா அதிர்ச்சியில் மூழ்கியுள்ளார்.

சம்பவம் நடந்த இடமான ஜோரா ரயில் தண்டவாள பாதையில் தசரா விழாவை காணச் சென்ற தனது அக்கா மற்றும் அவரது குடும்பத்தினரை இரவு முழுவதும் தேடியுள்ளார் ராகுல். இன்று காலை சிவில் மருத்துவமனையில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்தியில் தனது மாமா, 7 வயதுடைய தனது அக்கா மகள் மற்றும் 12 வயதுடைய அக்கா மகன் ஆகியோரின் உடலை அடையாளம் கண்டுள்ளார். இருப்பினும் அவரது அக்காவை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

"வெள்ளிக்கிழமை மாலை, நான் எனது சகோதரியின் வீட்டிற்கு சென்றேன். அவர்கள் தசாரா விழாவை காண தயாராகிக் கொண்டிருந்தனர். அதுகுறித்த எனது பேச்சுதான் அவர்களுடன் நான் கடைசியாக பேசப்போவது என்பது எனக்கு தெரியாது" என மருத்துவமனையில் உடல்களை அடையாளம் கண்ட ராகுல் தெரிவிக்கிறார்.

"இந்த ரயில் விபத்து குறித்து கேள்விபட்டவுடன், பதற்றத்துடன் நான் எனது அக்கா மற்றும் அவரது குடும்பத்தாரை தேடினேன்" என்று கூறும் ராகுல் சம்பவ இடத்துக்கு சென்று அதன்பின் பல மருத்துவமனைகளுக்கும் சென்று தேடியுள்ளார்.

"நான் சிவில் மருத்துவமனைக்கு வந்தவுடன் போலிஸார் உடல்களுக்கு மத்தியில் எனது உறவினர்களை அடையாளம் காணும்படி கூறினர். நான் எனது மாமா மற்றும் அவரின் குழந்தைகளின் உடல்களை கண்டேன். ஆனால் அக்காவை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை" என்கிறார் ராகுல்

அமிர்தசரஸில் உள்ள சிவில் மருத்துவனையில் வைக்கப்பட்டிருந்த 39 உடல்களில் மூன்று உடல்கள் அடையாளம் காணப்படவில்லை.

பஞ்சாப்

பட மூலாதாரம், NARINDER NANU

இந்த விபத்தில் தனது 18 வயது மகனை இழந்துள்ளார் அமிர்தசரஸில் வசிக்கும் விஜய் குமார்.

"இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் எனது குடும்பத்தார் அந்த இரவு முழுவதும் முனிஷை தேடினர் இருப்பினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை."

"இன்று காலை போலிஸார் சம்பவத்தில் உயிரிழந்த உடல்களை காண்பித்தனர். அதில் நாங்கள் முனிஷின் உடலை கண்டறிந்தோம்" என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :