'இலங்கை உள்நாட்டு போருக்கு பிறகு அதிகரிக்கும் போதைப்பொருள் கடத்தல்'

கஞ்சா

பட மூலாதாரம், Getty Images

இலங்கையின் தலைநகரத்தில் மட்டுமே புழக்கத்திலிருந்த ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள், இப்போது, சிறிய கிராமங்களில் கூட விற்பனைக்கு வந்து விட்டன.

சமூக மற்றும் சமய ஒழுங்குகளையும் பேணுவதில் அதிக கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்த ஊர்களில் கூட, ஹெராயின் விற்கப்படுகிறது.

கைது நடவடிக்கை

சில நாட்களுக்கு முன்னர், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் ஹெராயின் வைத்திருந்த சிலர் கைது செய்யப்பட்டார்கள்.

மது வரி திணைக்கள தலைமை கண்காணிப்பாளர், என். சுஷாதரன் தலைமையிலான குழுவினர் இவர்களைக் கைது செய்தனர்.

இலங்கையின் மது வரித் திணைக்களத்தினுடைய வரலாற்றில், சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மது சாரம் மற்றும் 'கோடா' (மதுசாரத்தை தயாரிப்பதற்கான பொருட்களின் சேர்வை) ஆகியவற்றை ஒரே முறை அதிகளவு கைப்பற்றியவர் சுஷாதரன்.

அம்பாறை மாவட்ட அத்தியட்சகர் (காவல்துறை தலைமை கண்காணிப்பாளர்) என். சுஷாதரன்

ஹிங்குரான வடிசாலையில், கல்லோயா பிளான்டேசன் நிறுவனத்தினர் அனுமதியின்றி உற்பத்தி செய்த 95 ஆயிரம் லிட்டர் மது சாரம், 5 லட்சம் லிட்டர் 'கோடா' ஆகியவற்றை சுஷாதரன் தலைமையிலான குழுவினர் 2017ஆம் ஆண்டு கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையின்போது 13 பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் ஐந்து பேர் இந்தியர்கள். இந்த குற்றம் செய்த நிறுவனத்தினருக்கு நீதிமன்றம் 48 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

போருக்கு பின் போதைப்பொருட்கள் அதிகரிப்பு

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், போதைப் பொருட்களின் புழக்கமும், பயன்பாடும் அதிகரித்துள்ளதாக சுஷாதரன் கூறுகின்றார்.

"போர் காலத்தில் இலங்கைப் படையினரும், விடுதலைப் புலிகளும் தரையிலும் கடலிலும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

இலங்கை
இலங்கை

அதனால், போதைப் பொருட்களை கடத்துவதும், இடம் மாற்றுவதும் கஷ்டமாக இருந்தது. ஆனால், போருக்கு பின்னர் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைந்து விட்டன.

இதனால், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், தங்களது காரியங்களை இலகுவாக முடித்துவிடுகின்றனர்" என்று, பிபிசி தமிழிடம் சுஷாதரன் தெரிவித்தார்.

கடத்தலுக்கு உதவும் தொழில்நுட்பம்

"நவீன தொழில்நுட்பங்களை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஜி.பி.எஸ் தொழில்நுட்பம் மற்றும் ஈசி கேஷ் எனும் செல்பேசி மூலமான பணப்பரிமாற்ற வசதி போன்றவற்றினைப் பயன்படுத்தி, போதைப்பொருள் கடத்தல் மிகவும் எளிதாக நடத்தப்படுகின்றன".

"உதாரணமாக, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருளைக் கடத்துகின்றவர்கள், தமது போதைப் பொருள் அடங்கிய பொதியில் ஜி.பி.எஸ். கருவியை வைத்து கடலின் ஓரிடத்தில் போட்டு விட்டு, அது பற்றி இலங்கையில் அதனைப் பெற்றுக் கொள்ளும் தரப்பினருக்கு அறிவிக்கின்றனர்.

கிராமங்களிலும் கொடி கட்டி பறக்கும் போதைபொருள் விற்பனை

இதனையடுத்து, இலங்கைத் தரப்பினர் செல்பேசி மூலம், இந்தியாவிலுள்ள தரப்புக்கு பணத்தை அனுப்புகிறார்கள்.

அதன்பின்னர், இந்தியாவிலுள்ளவர்கள் கடலில் போட்டுள்ள பொதியின் ஜி.பி.எஸ். கருவியை அடையாளம் காண்பதற்கான குறியீட்டு இலக்கத்தை இலங்கை தரப்புக்கு வழங்குகின்றனர்.

அந்த ஜி.பி.எஸ். கருவி இருக்கும் இடத்தை கண்டு பிடித்து, அதனுடன் இருக்கும் போதைப்பொருளை இலங்கைத் தரப்பு கைப்பற்றிக் கொள்கிறது."

"இவ்வாறான கடத்தல்களை முறியறிப்பது பெரிய சவாலாகும். போதைப் பொருட்களை கொடுப்பவரும், பெற்றுக் கொள்கின்றவரும் சந்திக்காமலேயே, கடத்தல் வியாபாரம் முடிந்து விடுகிறது". என்கிறார் சுஷாதரன்.

இளம் வயதினருக்கு விற்பனை

இளவயதினரையும், மாணவர்களையும் இலக்கு வைத்து கணிசமான போதைப் பொருள் வியாபாரம் இடம்பெறுவதாகவும் சுஷாதரன் கூறுகிறார்.

கஞ்சா

பட மூலாதாரம், Getty Images

"நிந்தவூரில் போதைப் பொருள் வியாரத்தில் ஈடுபட்ட ஒருவரை அண்மையில் கைது செய்தோம். 'மாவோ' எனும் போதைப் பொருளை, பாடசாலைகளுக்கு அருகில் வைத்து, அவர் விற்பனை செய்து கொண்டிருந்தார்", என்று கூறும் சுஷாதரன், இப்படிபட்டோரை கைது செய்யும்போது ஏற்படும் இடையூறுகளையும் விவரித்தார்.

"குறித்த நபரைக் கைது செய்தபோது, அந்த நபர், பிரபல அரசியல்வாதி ஒருவரின் பெயரைக் கூறி, தான் அருடைய 'ஆள்' என்றார். பரவாயில்லை, அதை நீங்கள் நீதிமன்றத்தில் கூறுங்கள் எனச் சொல்லி அவரைக் கைது செய்தோம்," என்கிறார் சுஷாதரன்.

இலங்கை
இலங்கை

சிலவேளைகளில், போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை போதாது என்றும், அதனால் சில சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் சுஷாதரன் கூறுகின்றார்.

"ட்ரமடோல் எனும் மாத்திரைகள் வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்படுபவை. ஆனால், வைத்தியர் வழங்கும் மருந்துச் சீட்டின்றி, ட்ரமடோல் மாத்திரைகளை மருந்துக் கடைகளில் விற்க முடியாது.

கஞ்சா

பட மூலாதாரம், Getty Images

இந்த மாத்திரையை குறிப்பட்ட அளவுக்கு அதிகமாக ஒருவர் உட்கொள்ளும்போது, அது போதையை ஏற்படுத்தும்.

"இவ்வறான ஒரு லட்சம் மாத்திரைகளுடன் அண்மையில் ஒருவரை சாய்ந்தமருது பிரதேசத்தில் கைது செய்தோம். பாடசாலை மாணவர்களுக்கும் அந்த மாத்திரைகளை அவர் விற்றுக் கொண்டிருந்தார். ஒரு மாத்திரையின் விலை 200 ரூபாய்.

குறித்த நபரை நாங்கள் கைது செய்தபோதும், அவருக்கு எதிராக எங்களால் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. அதற்கான ஏற்பாடுகள் சட்டத்தில் இல்லை.

பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கே, அந்த விடயத்தைக் கையாள்வதற்குரிய அதிகாரம் சட்டத்தில் உள்ளது.

அதனால், அந்த விவகாரத்தை பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைத்தோம். இறுதியில், அந்த நபருக்கு 10 ஆயிரம் ரூபாய்தான் நீதிமன்றத்தில் அபராதமாக விதிக்கப்பட்டது.

சட்டத்தில் திருத்தம்

இந்தத் தண்டனை போதாது. அதனால்தான், சில சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்கிறேன்" என்றார் மது வரி அத்தியட்சகர் சுஷாதரன்.

கஞ்சா

"அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் மற்றும் அதனுள் அடங்கும் அறுகம்பே உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளில்தான் ஹெரோயின் போன்ற போதைப் பொருட்களின்விற்பனை அதிகமாக உள்ளது.

இங்கு வருகின்ற வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கு, தங்கு தடையின்றி போதைப் பொருட்கள் கிடைக்கின்றன.

ஆனாலும், வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை சாதாரணமாக சோதனை செய்ய முடியாது என்பதால், அந்தப் பகுதியில் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரிய சவால்களை எதிர்கொள்கிறோம்" என்று சுஷாதரன் விவரித்தார்.

இலங்கை
இலங்கை

"ஊர்களை நிர்வகிப்பதில் சமய நிறுவனங்களின் ஆதிக்கம் குறைந்துள்ளதுதான், போதைப்பொருள் விற்பனை அதிகரிப்புக்கு முக்கிய காரணம்" என்கிறார் சுஷாதரன்.

தமிழர் பகுதிகளில் அதிகரிக்கும் விற்பனை

"இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கில் போதைப்பொருள் விற்பனை அதிகரித்துள்ளது.

இந்தியாவிலிருந்து கடல் வழியாக வட மாகாணத்துக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் கஞ்சாவை விடவும், இந்தியாவிலிருந்து கடத்தப்படும் கஞ்சாவுக்கு விலை அதிகமாகும். இலங்கை கஞ்சாவை விடவும், இந்திய கஞ்சாவில் போதையும் அதிகம் உள்ளது.

அதனால், இலங்கை கஞ்சா ஒரு கிலோ 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்படுகிறது. அதேவேளை, ஒரு கிலோ இந்தியக் கஞ்சா, 01 லட்சத்து 10 ஆயிரம் ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையில் தற்போது கஞ்சா உற்பத்தி வெகுவாகக் குறைந்து விட்டது".

கிராமங்களிலும் கொடி கட்டி பறக்கும் போதைபொருள் விற்பனை

பட மூலாதாரம், Paula Bronstein/Getty Images

'கேரள கஞ்சா'

"இந்தியாவிருந்து இலங்கைக்கு கடத்தப்படும் கஞ்சாவை கே.ஜி. என்கிற பெயரால் அழைக்கிறார்கள். கே.ஜி. என்றால், 'கேரள கஞ்சா' என்றுதான் பெரும்பாலாக அறியப்படுகிறது.

ஆனால், இந்தியாவிலிருந்து கடத்தப்படும் கஞ்சா, உண்மையில் கேரளாவில்தான் உற்பத்தி செய்யப்படுகிறதா என்கிற கேள்வி எனக்குள்ளது.

இந்தியாவிருந்து கடத்தப்பட்டபோது கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளை பல தடவை பரிசோதித்திருக்கிறேன்.

அவை தெலுங்கு எழுத்துக்களைக் கொண்ட பத்திரிகையினால் சுற்றப்பட்டிருந்தன. அந்தக் கஞ்சா கேளராவில், பொதி செய்யப்பட்டிருந்தால், சாதாரணமாக அங்கு கிடைக்கும் மலையாளப் பத்திரிகைகளால்தான் சுற்றப்பட்டிருக்க வேண்டும்.

எனவே, வேறு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்டு பொதியிடப்பட்ட கஞ்சா, கேரளா ஊடாக இலங்கைக்கு கடத்தப்படுகிறது என்றுதான் நம்புகிறேன்". என்கிறார் சுஷாதரன்.

மதுவரி நிலையம்

"விற்பனைக்காக 500 கிராமுக்கு மேலதிகமான கஞ்சாவையும் வைத்திருக்கும் ஒருவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியும். அவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா வரையில் அபராதம் விதிக்கப்படும்.

இரண்டு கிராம் ஹெரோயினுக்கு அதிகமாக வைத்திருந்தாலே ஒருவருக்கு, இலங்கையில் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்த போதும், ஹெரோயின் விற்பனை இந்நாட்டின் கிராம மட்டங்களுக்கு வந்து விட்டது. அண்மையில் 48 மணி நேரத்தில் அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் போதைப்பொருள் குற்றம் தொடர்பாக 9 பேரை கைது செய்தோம். அவர்களில் ஹெரோயின் வைத்திருந்த 4 பேரும், ஹசீஸ் வைத்திருந்த 2 பேரும், கஞ்சா வைத்திருந்த 3 பேரும் இருந்தனர்.

குறியீட்டுச் சொற்கள்

இந்தப் பகுதியில், ஹெரோயின் போதைப் பொருளை 'முள்' என்கிற குறியீட்டுச் சொல்லால், அதனோடு தொடர்புடையவர்கள் அழைக்கின்றனர். 'ஒரு முள்' என்பது 'ஒரு ஹெரோயின் பொதி'யாகும்.

உள்ளுரில் 1000 ரூபாய் பெறுமதியான ஹெரோயின் பொதிகளே அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

கிராமங்களிலும் கொடி கட்டி பறக்கும் போதைபொருள் விற்பனை

பட மூலாதாரம், NOORULLAH SHIRZADA/AFP/Getty Images

இவை 48 அல்லது 50 மில்லி கிராம் எடையுடைய, மிகச் சிறிய பொதிகளாகும். இதனை வாய்க்குள்ளும், சிலவேளை பற்களுக்கிடையிலும் மறைத்து வைக்க முடியும் என்பதால், கஞ்சா கடத்தலை கண்டுபிடிப்பது பெரும் சவாலாகும்.

இவ்வாறான சிறிய அளவு ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகின்றவர்களை நீதவான் நீதிமன்றத்தில்தான் (மஜிஸ்ரேட் நீதிமன்றம்) ஆஜர் செய்ய வேண்டும். அப்போது இவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே அபராதமாக விதிக்கப்படுகிறது" என்றார் சுஷாதரன்.

ஒரு காலத்தில் மதுபானம் அருந்துகின்றவர்களை, "குடிகாரர்கள்" என்று கூறி, ஒதுக்கி வைத்துப் பார்த்த பல கிராமங்களில், ஹெரோயின் போன்ற போதைப் பொருட்கள், பாடசாலை மாணவர்களின் கைளில் கூட, மிகச் சாதாரணமாகக் கிடைக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: