முற்றுப்பெற்ற மரணத்திற்கு எதிரான 9 வயது சிறுமியின் போராட்டம் - நெகிழ வைக்கும் சம்பவம்

பட மூலாதாரம், TIFFANY HOFSTETTER
கடந்தசில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
மரணத்தை எதிர்த்து
அமெரிக்கா டெக்சாஸில் இயந்திரங்களை உதவியுடன் உயிர்வாழ்ந்து வந்த ஒன்பது வயது சிறுமி இயற்கை மரணம் அடைந்தார் என அவளது பெற்றோர் தெரிவித்துள்ளனர். மருத்துவர்களால் மூளை சாவடைந்தவர் என்று கூறுப்பட்ட பேடன் சம்மன்ஸ் எனும் அந்த சிறுமிக்கு, செப்டம்பர் மாதம் மாரடைப்பு ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து இயந்திரங்களின் உதவியுடன் உயிர்வாழ்ந்து வந்தார். இயந்திரங்களின் உதவியை நிறுத்த மருத்துவர்கள் முடிவெடுத்தபோது, அவளது பெற்றோர் நீதிமன்றம் வரை சென்று இயந்திரங்களை அப்புறப்படுத்தக் கூடாது, மூளை சாவடைந்தாலும் அவளை உயிருடன்தான் வைத்திருக்க வேண்டுமென ஆணை பெற்று வந்தனர்.
டெக்சாஸ் சட்டப்படி, ஒருவரின் மூளை செய்லபாடு நின்றுவிட்டால், அவர் மரணமடைந்தவராகதான் கருதப்படுவார். இப்படியான சூழ்நிலையில் அந்த சிறுமி இயற்கையான மரணமடைந்ததாக அவளது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

செளதி விளக்கத்தில் திருப்தி இல்லை

பட மூலாதாரம், Getty Images
பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரண விவகாரத்தில் செளதியின் கூற்றில் தமக்கு திருப்தி இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார். காணாமல் போன பத்திரிகையாளர் ஜமால் காசோஜி துருக்கியில் உள்ள சௌதி துணைத் தூதரகத்தில் நிகழ்ந்த ஒரு சண்டைக்கு பிறகு மரணமடைந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிப்பதாக சௌதி அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
ஜமால் மரணத்திற்கு செளதி கூறி உள்ள விளக்கமானது சந்தேகத்திற்கு உள்ளாகி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப், "எனக்கு உண்மை தெரியும்வரை நான் திருப்தி அடைய போவதில்லை" என கூறி உள்ளார்.

குண்டு வெடிப்புகளை கடந்து

பட மூலாதாரம், Getty Images
குண்டு வெடிப்புகளுக்கு மத்தியில் ஆபத்துகளை எதிர்கொண்டு ஆஃப்கன் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்தலில் வாக்களித்துள்ளனர். நாடெங்கும் வாக்குச்சாவடிகளை குறிவைத்து நடந்த குண்டு வெடிப்பில் டஜன் கணக்கானோர் உயிரிழந்தனர், பலர் படுகாயமடைந்தனர்.
பல இடங்களில் வாக்கு பதிவு நேரம் நீடிக்கப்பட்டது, பல தொகுதிகளில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. முதல் முறையாக ஆஃப்கன் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையானது தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்தது.

விலகிய அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images
ரஷ்யா உடனான வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து விலக அமெரிக்கா முடிவு செய்துள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதிசெய்துள்ளார்.
1987இல் அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா இடையே கையெழுத்தான நடுத்தர தூர அணு ஆயுதங்கள் உடன்படிக்கையின் (Intermediate-Range Nuclear Forces treaty) சரத்துகளை ரஷ்யா மீறியுள்ளது என அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கடத்தப்பட்ட பெரும் கோடீஸ்வரர் வீடு திரும்பினார்

பட மூலாதாரம், AFP
கடத்தப்பட்ட தான்சான்யா பெரும் கோடீஸ்வரரான முகமது டெவ்ஜி பத்து நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் டார் எஸ் சலாம் நகரத்திலிருந்து கடத்தப்பட்டார். அவர் பகிர்ந்துள்ள ட்விட்டர் பதிவில் தாம் பத்திரமாக வீடு திரும்பியதாக கூறி உள்ளார்.
எம்.ஈ.டெ.எல் குழுமத்தின் தலைவரான அவருக்கு 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்து உள்ளதாக ஃபோர்ப்ஸ் பத்திரிகை தெரிவிக்கிறது. முகமது போலீஸுக்கும், தமக்காக பிரார்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இவர் பணம் கொடுத்து மீட்கப்பட்டாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












