பொறுப்பான இன்றைய தந்தையின் மனோபாவம் #HisChoice

'அப்பா, ப்ளீஸ்… நோ' நானும் என் மகனும் விளையாடும்போது, நான் அவனை பிடித்துவிட்டால் அவன் இப்படித்தான் சிணுங்குகிறான்.
'அப்பா, ப்ளீஸ்… நோ' என்ற வார்த்தை நன்றாக வேலை செய்கிறது என்பதை அவன் நன்றாக புரிந்து கொண்டதால் அதை தொடர்கிறான்.
நானும், என் மனைவியும் இதற்காக ஒரு 'ஒப்பந்தம்' செய்துகொண்டோம். அதன்படி என் மகன் இந்த மந்திரத்தை சொன்னால் நான் உடனடியாக அவனை விட்டு விடவேண்டும்.
பல மணி நேரங்கள் கழித்து பார்த்தாலும், அவனை நெஞ்சோடு அணைத்துக் கொள்ள மனம் துடிக்கும். அல்லது அவனை சீண்டி சிணுங்க வைக்கத் தோன்றும். ஆனால் அவனுடைய அனுமதியில்லாமல் மகனை நான் தொடக்கூடாது என்பதும் எங்கள் ஒப்பந்தத்தில் ஒரு நிபந்தனை.
நாங்கள் இந்த ஒப்பந்தம் போட்டு 15-20 நாட்களில் இது அவனுடைய குணத்தில் எவ்வளவு மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை பார்த்து வியப்படைந்தேன்.
தனது பேச்சுக்கு வீட்டில் மதிப்பு அதிகம் என்று அவன் உணர்ந்துக் கொண்டான். இது அவனுடைய தன்னம்பிக்கை வலுவடைவதற்கு அவசியம்.

பிபிசியின் #HisChoice இந்திய கணவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைக் கதைகள்.
இவை 'நவீன இந்திய ஆண்கள்' பற்றியும், அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சவால்கள், அவர்களின் விருப்பங்கள், தெரிவுகள், மற்றவர்கள் அவர்களை எப்படி கையாள்கிறார்கள் என்பதைப் பற்றிய ஒரு புதிய பார்வையைக் கொடுக்கும்.

ஆனால், எல்லாவற்றிலும் முக்கியமானது, இப்போதிருந்தே 'நோ' சொல்லும் பழக்கத்தின் முக்கியத்துவத்தை அவன் உணர்ந்துக் கொள்கிறான்.
இந்த சொல்லின் வீரியத்தை புரிந்து கொள்வதற்குள் பலருக்கு வாழ்க்கையே முடிவடைந்துவிடுகிறது.
தற்போது இரண்டரை வயதாகும் என் மகன் இதை இப்போதே உணர்ந்துவிட்டால், பெரியவனாகும்போது, பிறரின் 'நோ' என்ற வார்த்தைக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு தோன்றும்.
நான் சிறுவனாக இருந்தபோது, 'ஏன் பெண்ணைப்போல் அழுகிறாய்?' என்று சொல்லி திட்டுவார்கள். இந்த வார்த்தை, எனக்கு 'ஆண்' என்ற உணர்வை குழந்தை பருவத்திலிருந்தே மனதில் விதைத்தது. ஆண் என்பவன் அழக்கூடாது, அழுவது பெண்ணின் சுபாவம் என்று தோன்றியது.
இந்த வார்த்தைகளை சொன்னது பெற்றோரும், உறவினர்களும் தான் என்றாலும், இதுபோன்ற சொற்கள் என் மனதில் எதுபோன்ற 'மன அழுத்தத்தை' ஏற்படுத்தியது என்பதை சொல்லி புரியவைக்க முடியாது.
இந்த உணர்வுகளை இன்றும்கூட என் பெற்றோரிடம் மனம் திறந்து பேச முடியாது. ஏனெனில் அவர்களின் மனோபாவம் வேறு, ஒரு குழந்தையை 'சமாதானப்படுத்தும்' வழிமுறை இது என்று அவர்கள் நினைத்தார்கள்.
ஆனால் மாறி வரும் காலச்சூழலில் அதே மனோபாவத்தோடு எங்கள் குழந்தையை வளர்க்க முடியாது. ஆனால், இன்னும் சில காலத்திற்கு பிறகு வீட்டில் இருந்து வெளியேறி பிற குழந்தைகளுடன் விளையாடும்போது இந்த வார்த்தைகளை அவன் கேட்க நேரிடும்.
சைக்கிள் ஓட்டப் பழகினால் கீழே விழுவான். அப்போது இயல்பாக அவனுக்கு அழுகை வந்தால், ஆண் குழந்தை அழக்கூடாது என்ற இலவச உபதேசங்கள் கூறி அவனுடைய அழுகையை நிறுத்துவார்கள்.
ஆனால் அவன் மனதில் 'இந்த' அழுத்தம் ஏற்படாமல் சுதந்திரமாக இயல்பாக இருக்கவேண்டும் என்று நான் முயற்சி செய்கிறேன். ஒரு ஆண் ஏன் அழக்கூடாது? அழுது அவனுடைய வேதனைகளை வெளிப்படுத்தக்கூடாது என்று சொல்வது ஏன்?
தனது வேதனையை பதிவு செய்வது தவறு என்ற எண்ணம் எவ்வளவு பெரிய அழுத்தம் தெரியுமா? தனது வலியை பதிவு செய்வதற்கு ஒருவர் ஆண் அல்லது பெண் என்று வித்தியாசம் இருக்கவேண்டுமா? மனிதப் பிறவியாக இருந்தால் போதாதா?

வலியின் அளவும், தாக்கமும், பாதிப்பும் மாறுபடும் என்றாலும் வலித்தால் அழுவது என்பது இயல்பானதே.
தங்கள் மனதில் உள்ள எண்ணங்களை உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை அனைவருக்கும் உண்டு. ஆண் அழக்கூடாது, பெண் தான் அழுவாள் என்று சொல்வதன் பின்புலத்தில் இருப்பது பெண் பலவீனமானவள் என்று பதிய வைக்கும் முயற்சி.
இதை சொல்பவர்களின் உள்நோக்கம் அதுவாக இல்லாவிட்டலும், அதன் தாத்பர்யம் புரியாமல் சொல்லி அடிப்படையிலேயே பெண்களை ஒரு படி தாழ்வாக நினைக்கும் நச்சு விதையை விதைக்கின்றனர்.
இந்த விதை ஆலமரமாக வேர்விட்டு, பல இடங்களில் கிளை பரவி, பெண் என்பவள் பலவீனமானவள், அழுபவள் என்ற எண்ணத்தையும், ஆண் என்பவன் வலுவானவன், அழக்கூடாது என்ற எண்ணத்தையும் ஆழமாக பதிய வைக்கிறது.
பள்ளிகளில் விளையாட்டு குழுவிலும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதை பார்த்திருக்கிறேன். ஏனெனில் பெண்கள் பலவீனமானவர்கள். அவர்களால் குழுவில் இடம்பெறுவதும், வெற்றி பெறுவதும் கடினம் என்று நினைப்பார்கள்.
ஏன் ஒரு ஆண் பலவீனமானவனாக இருக்கக்கூடாதா? ஒரு பெண்ணிடம் ஏன் தோற்றுப்போனாய் என்ற கேள்வியை நான் ஒருபோதும் என் மகனிடம் கேட்க மாட்டேன்.
விளையாட்டை விளையாட்டாய்த் தான் பார்க்க வேண்டுமே தவிர, வெற்றி பெறுவது மரியாதை, தோல்வியடைவது பலவீனம், கேவலம் என்று நினைக்கக்கூடாது. விளையாட்டில் வெற்றி அல்லது தோல்வி என்பது ஒருவரின் திறமை என்ற நேர்மறையான எண்ணத்தையே என் மகனிடம் விதைக்க விரும்புகிறேன்.
இந்த மாற்றம் காலப்போக்கில் பல்வேறு பரிணாமங்களைப் பெறும். நான் எட்டாவது படிக்கும்போது, என்னுடைய அறிவியல் ஆசிரியர் இனப்பெருக்கம் பற்றிய பாடத்தை கற்றுக் கொடுத்தபோது, வகுப்பில் இருந்த பல மாணவர்கள் நமட்டுச் சிரிப்புடன் பாடத்தை கவனித்ததையும், மாணவிகள் சங்கடத்துடன் நெளிந்ததையும் கவனித்தேன்.
எனவே இந்த பாடம் தொடர்பாக எந்த கேள்வியையும் கேட்க ஆசிரியை தவிர்த்ததையும் தற்போது நினைத்துப் பார்க்கிறேன். மாணவர்களின் முன் இந்த பாடத்தை கேட்க மாணவிகள் சங்கடமாக உணர்வார்கள். எனவே ஆசிரியை வழக்கம் போல கேள்விகள் கேட்பதை தவிர்த்தார்.
ஆனால் இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்கள் சிறார்களுக்கு எங்கிருந்து கிடைக்கும்? பள்ளியில் இதுபோன்ற பாடங்களை நடத்துவதற்கு முன்பே வீட்டில் பெற்றோர் இதுபற்றி சொல்லிக் கொடுத்தால் மாணவர்கள் ஆசிரியைகளை நமட்டு சிரிப்புடன் பார்க்க வேண்டியிருக்காது; மாணவிகளை பள்ளித் தாழ்வாரங்களில் மாணவர்கள் கிண்டல் கேலி செய்யவும் அவசியம் ஏற்பட்டிருக்காது. இனப்பெருக்கம் என்பது இயல்பான நிகழ்வு, ஒரு அறிவியல் என்றே மாணவர்களும், மாணவிகளும் நினைத்திருப்பார்கள்.
இன்றைய காலகட்டத்தில் எல்லா விஷயங்களையும் நாம் வெளிப்படையாக பேச முன்வரவேண்டும். 'Right to bleed', 'Metoo' என பல விழிப்புணர்வு இயக்கங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றி பேசுவதை தவிர்க்காமல், பொறுப்புள்ள அடுத்த தலைமுறையை உருவாக்க, ஒரு தந்தையாக நாம் அடிப்படையான சில விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன்.
பெண்களின் சிரமங்களை புரிந்து கொள்ள வேண்டும். மாதவிடாய் நாட்களில் அவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளவேண்டும். இதுபோன்ற சிறிய முன்னெடுப்புகளின் மூலம் அவர்கள் ஆரோக்கியமான மனோநிலையுடன் நேர்மறையான சிந்தனைகளுடன், மனிதாபிமானத்துடன் வளர்வார்கள். முக்கியமாக தங்கள் சகோதரிகளையும் தாயையும் சரியாக புரிந்து கொள்ள உதவும். இது ஒரு நேர்மறையான சமுதாயமாக மாற உதவுமல்லவா?
இன்றும்கூட என்னுடைய அலுவலக சகாக்களின் குழுவின் பெண்கள் பற்றிய தரம் குறைந்த வார்த்தைகளை கேட்க நேரிடும்போது, இது நிச்சயமாக 'இனப்பெருக்க' பாடத்துடன் தொடர்புடையது என்று எனக்கு தோன்றுகிறது.
இதுபோன்ற விஷயங்கள் பரவுவதற்கு காரணம் இலக்கில்லாமல் உட்கார்ந்து, வீணாய் பொழுதை போக்குவதுதான் என்று தோன்றுகிறது. அரட்டை அடிப்பதில் நேரத்தை கழிக்கும்போது அதிலேயே மூழ்கிவிடுபவர்களுக்கு அதன் தாக்கம் புரிவதில்லை. ஆனால் உண்மையில், வீணாய் இருக்கும் நேரத்தை நேர்மறையான வேலைகளை செய்ய பயன்படுத்தினால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

குழந்தைகள் தாங்களாகவே நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு இயல்பாக எழும் ஆர்வங்களையும், அதன் தொடர்பாக எழும் கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். சரியான நேரத்தில், அவர்களின் கேள்விகளுக்கு பதில் கிடைத்தால், குழந்தைகள் மன ஆரோக்கியத்துடன் வளர்வார்கள்.
என் மகனுடைய நண்பராக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒரு குழந்தை தனது நண்பர்களிடம் சொல்லும் எல்லா விஷயங்களையும் தன் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்றும் எனக்கு தெரியும். ஆனால் என்னுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ளும் நம்பிக்கையை வளர்ப்பது என்னுடைய பொறுப்பு என்றே நான் நினைக்கிறேன்.
ஒவ்வொரு குழந்தைக்கும் சகாக்களால் ஏற்படும் அழுத்தமும் என் குழந்தைக்கும் ஏற்படும் என்பதும் எனக்குத் தெரியும். அதிலும், புதிய விஷயங்களை பரிசோதனை செய்ய சிறார்கள் ஆர்வமாக இருப்பார்கள்.
தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத "மெல்லிய கோடு" ஒன்றுக்கு எந்த சேதாரமும் ஏற்படாமல் அவனுக்கு சரி-தவறு பற்றி புரிய வைக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன்.
என் அப்பாவுடன் எனக்கு மிகவும் நல்ல உறவு இருந்தாலும், அவருடன் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகப் பேசும் தைரியம் என்னிடம் இருந்ததில்லை. ஆனால், ஒரு குழந்தைக்கு தன் பெற்றோரிடம் எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேசுவதும், கேள்விகளை கேட்பதும் முக்கியமானது என்று நான் நம்புகிறேன்.
இது குழந்தைகளின் மனதில் எதுபோன்ற மாறுதல்கள் ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள உதவியாக இருக்கும். அவர்களுக்கு எதாவது பிரச்சனையோ, சிக்கலோ ஏற்பட்டால் அதிலிருந்து அவர்களை காப்பாற்ற முடியும்.
பத்தாவது, பணிரெண்டாவது வகுப்பு, கல்லூரி பிறகு வேலை. இப்படி அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் வேறு கட்டத்திற்கு நகரும்போது ஏற்படும் மாற்றங்களின்போதும் பெற்றோர்களின் வழிகாட்டுதல்களும், அறிவுறுத்தல்களும் இருப்பது நல்லது.
படிப்பு என்பது மிகவும் முக்கியமானது என்று என் மகனுக்கு உணர்த்த விரும்பும் நான், ஆனால் தேர்வில் மதிப்பெண்கள் குறைந்தால் அதற்காக அவனை குறைவாக மதிப்பிடமாட்டேன் என்பதையும் புரிய வைப்பேன்.
உலகம் என்ன சொல்லும்? உன் எதிர்காலம் என்ன ஆகும்? பெரிய பதவிக்கு செல்ல முடியுமா? என்பது போன்ற அழுத்தங்களில் இருந்து என் மகனை நான் விலக்கி வைக்க விரும்புகிறேன். என் மகன் நேர்மறை எண்ணங்களுடன் நேர்மையாக வாழ்க்கையை வாழட்டும்.
எல்லா குழந்தைகளுமே தவறுகள் செய்வார்கள். ஆனால் அந்த நிலையில், சரி என்பதற்கும் தவறு என்பதற்கும் இடையிலான வித்தியாசத்தை கற்றுக் கொடுப்பதுதான் என் வேலை.
தவறு செய்வதில் இருந்து தான் படிப்பினைகள் கற்றுக் கொள்ளமுடியும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவன் செய்யும் தவறுகள் பிறரை பாதிக்கக்கூடாது என்றே விரும்புகிறேன்.
நாம் எதிர்கொண்ட இதுபோன்ற அழுத்தங்களிலும், தளைகளில் இருந்தும் நம் குழந்தைகளை நாம் ஏன் விடுவிக்க முயலக்கூடாது?
( பிபிசி செய்தியாளர் பிரசாந்த் சாகல் உடன் பெயர் வெளியிட விரும்பாத தந்தை பகிர்ந்துகொண்ட கதை இது. #HisChoice தொடர் பிபிசியின் சுசிலா சிங்கால் தயாரிக்கப்பட்டது. )
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












