பாஜக அமைச்சர் மீது #MeToo பாலியல் புகார்: பெண்ணுக்கு எதிராக வாதிட 97 வழக்கறிஞர்கள்

- எழுதியவர், சர்வப்ரியா சங்வான்
- பதவி, பிபிசி செய்தியாளர்
மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் தன் மீது பாலியள் குற்றச்சாட்டு சுமத்திய பெண் பத்திரிகையாளர் ப்ரியா ரமணி மீது கிரிமினல் அவதூறு வழக்கு பதிவு செய்திருக்கிறார்.
இது போல சட்ட நடவடிக்கை தன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மற்றொரு பெண் மீதும் பாயுமென எச்சரிக்கை விடுத்துள்ளார் 67 வயதான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த அமைச்சர் எம்.ஜே.அக்பர்.
எம்.ஜே. அக்பர் வழக்கு தொடுத்த சில மணி நேரங்களில், ப்ரியா ரமணியும் ஓர் அறிக்கை வெளியிட்டார்.
"உண்மையே என் ஆயுதம்"
அந்த அறிக்கையில் அவர், "என் மீதான சட்டநடவடிக்கையை எதிர்க்கொள்ள நான் தயாராக உள்ளேன். உண்மை. உண்மை மட்டுமே என் பாதுகாப்பு கவசம்," என்று அவர் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், iStock
அதே நேரம், நடிகர் அலோக்நாத் மீது எழுத்தாளர் வின்டா நந்தா பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார். அலோக்நாத்தும் ஒரு ரூபாய் மற்றும் எழுத்துப் பூர்வமான மன்னிப்பு கோரி சிவில் அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

பட மூலாதாரம், PriyaRamani
இதுமாதிரியான சூழலில் ரமணி மற்றும் வின்டா நந்தாவுக்கான சட்ட வாய்ப்புகள் என்ன?
இந்த பெண்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன என்கிறார் மூத்த வழக்கறிஞர் ரமாகாந்த் கெளர்.
முதலில் பெண் மெஜிஸ்டிரேட் முன்போ அல்லது போலீஸிடமோ தமக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து வழக்கு பதிய வேண்டும்.
அந்த வழக்கு விசாரணையில் உள்ள வரை அவதூறு வழக்கு குறித்த எந்த விசாரணையையும் மேற்கொள்ள முடியாது.
பாலியல் தொல்லை நிரூப்பிக்கப்படும் பட்சத்தில், அந்த அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்படும்.
இது மட்டுமல்லாமல் மற்றொரு வாய்ப்பும் உள்ளது. ஆனால், அது அவ்வளவு வலுவான வாய்ப்பில்லை என்கிறார் ராம்காந் கெளர்.

பட மூலாதாரம், Getty Images
நீதிமன்றத்திலிருந்து சம்மன் வரும் வரை அந்த பெண்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு பின், குறுக்கு விசாரணை தொடங்கும்.
ஆனால், இது அவ்வளவு வலுவான வாய்ப்பில்லை. ஏனெனில், நம் நாட்டில் திறன்பட குறுக்கு விசாரணை செய்யும் வழக்கறிஞர்கள் குறைவு.
பல வழிகள் உள்ளன
அதே சமயம், பிரபல வழக்கறிஞர் விரிண்டா க்ரோவர் இந்த பெண்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. முதலில் வழக்கு தொடுத்தவர்கள், இந்த பெண்கள், தங்களை அவதூறு செய்துவிட்டார்கள் என நிரூபிக்க வேண்டும்.
அவர்கள் நிரூப்பிக்கும்பட்சத்தில்தான், மற்ற வாய்ப்புகள் தேவைப்படும்.
சிவில் மற்றும் கிரிமினல் அவதூறு வழக்கு
இந்தியாவில் இரண்டு விதமான அவதூறு வழக்குகள் உள்ளன. ஒன்று சிவில் அவதூறு வழக்கு மற்றொன்று கிரிமினல் அவதூறு வழக்கு.

பட மூலாதாரம், iStock
இந்த இரண்டு வழக்குகளையும் ஒருசேரக் கூட பதியலாம்.
கிரிமினல் அவதூறு வழக்கென்றால், இந்திய தண்டனைச் சட்டம் 499, 500 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்படும்.
ப்ரியா ரமணிக்கு எதிராக 97 வழக்கறிஞர்கள்
எம்.ஜே, அக்பர் வழக்கு தொடுத்த ஆவணம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. ஒரு பெண்ணுக்கு எதிராக 97 வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர் என்ற தொனியில் பலர் எழுதி இருந்தனர்.

பட மூலாதாரம், M/S KARANJAWALA & CO.
அந்த வழக்கு ஆவணம் ஒரு சட்ட நிறுவனத்தின் மூலம் தொடுக்கப்பட்டது. பொதுவாக இதுபோன்ற ஆவணங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கையெழுத்திடுவார்கள். அதாவது, ஒருவர் ஆஜராக முடியாத சூழலில் மற்றொருவர் ஆஜர் ஆவார் என்பதுதான் அதற்கான காரணம்.
இது போன்று 97 பேர் கையெழுத்திடுவது ஒரு பெண்ணுக்கு அழுத்தம் தருவதற்குதான் என்கிறார் ராம்காந் கெளர்.
இந்தியாவில் அவதூறு வழக்கு
மற்ற நாடுகளில், அவதூறு வழக்கு கிரிமினல் சட்ட வரையறையில் வருவதில்லை. இந்தியாவிலிலும் கிரிமினல் சட்ட வரம்பிலிருந்து நீக்கும் முயற்சிகள் நடந்தன.
பா.ஜ.க தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூட இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார்.
ஆனால், 2016 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் அதனை கிரிமினல் சட்டவரம்பிலிருந்து நீக்க மறுத்துவிட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












