பெண்ணிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய அரசியல்வாதி மகன்

பட மூலாதாரம், youtube
சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான தலையங்கம் மற்றும் செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - துப்பாக்கியை காட்டி மிரட்டல்
டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் நிகழ்ந்த வாக்குவாதத்தின்போது பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மகன் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
மிரட்டலில் ஈடுபட்ட, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகேஷ் பாண்டேவின் மகன் ஆஷிஷ் பாண்டே மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பெண்கள் கழிவறைக்குள் அவர் நுழைய முயன்றபோது வாக்குவாதம் உண்டானதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி - மோதியின் வேண்டுகோள் பயனில்லை

பட மூலாதாரம், Getty Images
வெளிநாட்டு கச்சா எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோதி விடுத்திருக்கும் வேண்டுகோளை பிற நாடுகள் ஏற்றுக்கொள்ளுமா என்பது ஐயம்தான் என்று தினமணி தலையங்கம் எழுதியுள்ளது.
டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் சரிவை பயன்படுத்தி ஏற்றுமதி மற்றும் அந்நியச் செலவாணியை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர நமது பலவீனத்தை வெளிப்படுத்தும் வகையில் சர்வதேச தளத்தில் வேண்டுகோள் வைப்பதால் பயனில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தி இந்து - அதளபாதாளத்தில் காஷ்மீர் வாக்குப்பதிவு சதவீதம்

பட மூலாதாரம், Getty Images
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவில் வெறும் 4.2% வாக்குகளே பதிவாகியுள்ளன.
இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலின் ஒட்டுமொத்த வாக்குப்பதிவு விகிதம் 35.1% ஆகக் குறைந்துள்ளது.

தினத்தந்தி - தப்பியோடிய தொழில் அதிபர் நாடுகடத்தல்

பட மூலாதாரம், Getty Images
கார்ப்பரேசன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றில் மொத்தம் ரூ.40 கோடி கடன் வாங்கி மோசடி செய்த தொழில் அதிபர் வினய் மிட்டலை இந்தியாவுக்கு நாடு கடத்த இந்தோனேசியா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.
அவர் மீது 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில், சி.பி.ஐ. 7 வழக்குகளை பதிவு செய்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












