எத்தியோப்பியாவில் சரி பாதி பெண் அமைச்சர்கள்: பிரதமர் சொல்லும் வினோத காரணம்

பட மூலாதாரம், AFP
சில மணி நேரங்களுக்கு முன்பு நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.
அமைச்சரவையில் சரிபாதி பெண்கள்
எத்தியோப்பிய பிரதமர் அபீ அகமது தமது அமைச்சரவையில் சரி பாதி இடங்களை பெண்களுக்கு வழங்கியுள்ளார்.
அதற்கான காரணமாக, "ஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதாலும், அவர்கள் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீண்டும் நிலைநிறுத்த உதவுவார்கள்" என்றும் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டுமானத் துறை அமைச்சராக இருந்த ஆயிஷா முகமது அந்நாட்டின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

போரைவிட வறட்சியால் அதிக பாதிப்பு

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் மற்றும் அரசுக்கு இடையே நடக்கும் சண்டைகளைவிடவும், அங்கு நிலவும் கடும் வறட்சியால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தங்கள் வாழ்விடங்களில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா தெரிவிக்கிறது.
அங்கு வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள 2.2 மில்லியன் (22 லட்சம்) மக்களுக்கு உதவ ஐ.நா 34.6 மில்லியன் அமெரிக்கா டாலர் நிதியை ஒதுக்கியுள்ளது.

அமெரிக்கா நோக்கி வரும் 1500 பேர்

பட மூலாதாரம், Getty Images
ஹோண்டுராஸ் நாட்டிலிருந்து அதிக அளவிலான குடியேறிகள் அமெரிக்க எல்லையை நோக்கி வருவதால் ஹோண்டுராஸுக்கு வழங்கும் நிதி உதவியை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அதிக வறுமை மற்றும் ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி சென்றுகொண்டுள்ளனர். கடுமையான காவல்துறை கட்டுப்பாடு இருந்தும் அவர்கள் குவாதமாலா நாட்டின் எல்லையை கடந்துள்ளனர்.

சோமாலியாவில் அமெரிக்கா தாக்குதல்

பட மூலாதாரம், AFP
சோமாலியாவின் மத்தியப் பகுதியில் தாங்கள் நடத்திய விமானத் தாக்குதலில் 60 அல்-ஷபாப் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
அங்கு நவம்பர் 2017இல் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கு பிறகு நடக்கும் மிகப்பெரிய தாக்குதல் இதுவே ஆகும்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












