ஓ.பி.எஸ் என்னை ரகசியமாக சந்திக்க திட்டமிட்டது ஏன்? - விவரிக்கும் தினகரன்

தினகரன்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: 'ஓ.பி.எஸ் என்னை மீண்டும் சந்திக்க இருந்ததை ஒப்புக் கொள்ள வைப்பேன்'

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்னை மீண்டும் சந்திக்க முயற்சித்ததை ஒப்புக் கொள்ள வைப்பேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், ராஜ விசுவாசம் குறித்து அவர் பேசுவது நியாயமா? ஓ.பன்னீர்செல்வம் என்னைச் சந்திக்கக் கேட்டிருந்தும், நான் முதலில் அதற்கு மறுத்தேன். ஆனால், நடந்ததைச் சொல்ல வேண்டிய நிலைக்கு அவர் என்னைத் தள்ளியிருக்கிறார்.

பன்னீர்செல்வம்

பட மூலாதாரம், Getty Images

அவர் எதற்காக என்னை ரகசியமாகச் சந்திக்க வேண்டும்? எங்கள் குடும்பத்தை ஒதுக்க நினைத்த ஓ.பன்னீர்செல்வம் என்னைச் சந்தித்தது ஏன்? கடந்தாண்டு என்னை சந்தித்ததை ஒப்புக்கொண்ட அவர், என்னைச் சந்திக்க இருந்ததை ஒப்புக்கொள்ள வைக்கிறேன். நடந்ததைச் சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

முன்னுக்குப் பின் முரணாகப் பேசி மக்களையும், கட்சித் தொண்டர்களையும் ஓ.பன்னீர்செல்வம் ஏமாற்ற முடியாது. கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக எங்களைக் குறை சொன்னவர், எதற்காக என்னைச் சந்திக்க வேண்டும்? துரோகச் சிந்தனை உள்ள அவர் ஏதாவது செய்து மீண்டும் முதல்வராக வேண்டுமென விரும்புகிறார்.

தி.மு.க.வையும் காங்கிரஸையும் எதிர்த்து அமைச்சர்கள் கண்டனக் கூட்டம் போட்டனர். அந்த கண்டனக் கூட்டத்திலும் அமைச்சர்கள் என்னைப் பற்றியே பேசினர்.

மீண்டும் என்னைச் சந்திக்க விரும்புவதாக நண்பர் ஒருவர் மூலம் ஓ.பன்னீர்செல்வம் அழைத்ததால்தான், ஏற்கெனவே நடந்த சந்திப்புக் குறித்து வெளியே கூற வேண்டிய நிலை வந்தது. என்னை மீண்டும் சந்திக்கத் தூதுவிட்டது உண்மைதான்.

வேலுமணியும், தங்கமணியும் என்னை துணை முதல்வராக்க விரும்பினர். தினகரன் ஒரு பொருட்டல்ல என கூறும் அமைச்சர்கள், அனைத்து மேடைகளிலும் என்னை எதிர்த்துப் பேசுவது ஏன்? தர்மயுத்தம் என்ற பெயரில் தவறு செய்துவிட்டேன் என பன்னீர்செல்வம் கூறினார். முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்னை மீண்டும் சந்திக்க வேண்டும் என அவர் முயற்சி செய்கிறார்" என்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் சசிகலாவை சனிக்கிழமை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Presentational grey line

இந்து தமிழ்: "கீழடி அகழ்வாராய்ச்சியை மாற்ற நினைக்கிறதா மத்திய அரசு?"

கீழடி அகழ்வாராய்ச்சி அறிக்கையை மாற்றி எழுதிட முயற்சிப் பதாக மத்திய அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

கீழடி

"கீழடி அகழ்வாராய்ச்சிப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் 2160 ஆண்டுகளுக்கும் மற்றொரு பொருள் 2220 ஆண்டுகளுக்கும் முற்பட் டவை. கரிம பகுப்பாய்வுச் சோதனையில் கீழடி நகர நாகரிகம் கி.மு. இரண்டாம் நூற்றாண் டுக்கு முற்பட்டது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது என மத்திய கலாச்சாரத் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.

கீழடி அகழ்வாராய்ச்சிப் பணி களைச் செவ்வனே செய்து வந்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாம் மாநிலத்துக்குப் பணி இட மாற் றம் செய்யப்பட்டது ஏன்? ஆரியர்களுக்கு முன்பே, அவர்களை விட சமூக அமைப்பிலும், கலாச்சாரத்திலும், கலை இலக்கியங்களிலும் முன்னேறிய சமூகமாக தமிழர் சமூகம் விளங்கியது.

மத்திய அரசு, கீழடி அகழ்வாராய்ச்சியை சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொண்டு வந்தது. தற்போது ஒரேயடியாக ஆய்வறிக்கையை மாற்றி, உண்மையை குழி தோண்டிப் புதைக்க மத்திய அரசு நினைப்பது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வு அறிக்கையை தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரிக்க மத்திய தொல்லியல் துறை அனுமதிக்க வேண்டும்." வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Presentational grey line
Presentational grey line

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "தென் மாவட்டங்களில் கனமழை இருக்கும்"

இந்திய வானிலை மையத்தின் ரெட் அலர்ட் விலக்கிக்கொள்ளப்பட்டாலும் தென் மாவட்டங்களில் கனமழை இருக்கும் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

மழை

பட மூலாதாரம், Getty Images

தென் மாவட்டங்களின் மலைப் பகுதியில் கனமழை இருக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர் என்று கூறும் அந்நாளிதழ் செய்தி, மீனவர்கள் தென் கேரளா, லட்சத் தீவு, தென் கிழக்கு மற்றும் மத்திய கடற்பகுதிக்கு மீன்பிடிக்க அக்டோபர் 8 வரை செல்ல வேண்டாம் என்று மேலும் அவர்கள் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

Presentational grey line

தினத்தந்தி: "ரன்வீர்ஷா நண்பர் வீட்டில் 23 சிலைகள் பறிமுதல்"

தொழில் அதிபர் ரன்வீர்ஷா நண்பர் வீட்டில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருந்த 23 சிலைகளை ஜே.சி.பி. எந்திரம் மூலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தோண்டி எடுத்தனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"சென்னை போயஸ்கார்டன் கஸ்தூரி எஸ்டேட் 3-வது தெருவில் உள்ள ரன்வீர்ஷாவின் தொழில் நண்பரான ஜெர்மனி நாட்டை சேர்ந்த கிரண் என்பவரின் விருந்தினர் மாளிகை இல்லத்தில் பூமிக்கடியில் சிலைகள், கல்தூண்கள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து பெண் தொழில் அதிபரான கிரண் இல்லத்தில் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினார்கள். அப்போது பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த கலைநயமிக்க 2 கல்தூண்கள் கண்டெடுக்கப்பட்டது. அங்கு மேலும் சிலைகள், கல்தூண்கள் பூமிக்கடியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமடைந்த போலீசார் ஜே.சி.பி. எந்திரம் மூலம் நேற்று தோண்டும் பணி நடைபெறும் என்று அறிவித்தனர்.

அதன்படி கிரணின் விருந்தினர் மாளிகை வளாகம் முழுவதும் ஜே.சி.பி. எந்திரம் மூலம் தோண்டும் பணி நேற்று நடந்தது. ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நேரடி கண்காணிப்பில் நடைப்பெற்ற சோதனையில் 10 அடி ஆழத்தில் புதையல் போன்று பழமையான கோவில் கற்சிலைகளும், கலைநயமிக்க கல்தூண்களும் அடுத்தடுத்து சிக்கியது. காலையில் ஆரம்பிக்கப்பட்ட சோதனை மாலை 6 மணியளவில் முடிவுக்கு வந்தது.

இந்தசோதனையில் கலைநயமிக்க தூண்கள் உள்பட 23 கற்சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவை 100 ஆண்டுகள் பழமையான புராதன சிலைகள் ஆகும்." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :