You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
7 ரோஹிஞ்சா முஸ்லிம்களை நாடு கடத்திய இந்தியா மீது விமர்சனம்
7 ரோஹிஞ்சா முஸ்லிம்களை இன்று வியாழக்கிழமை மியான்மருக்கு நாடு கடத்தியுள்ளது இந்தியா. அப்படிச் செய்வது அவர்களை ஆபத்துக்குள்ளாக்கும் என்ற கடைசி நேர எச்சரிக்கையை இந்தியா செவிமடுக்கவில்லை. இதனால் இந்தியா விமர்சனங்களுக்கு ஆளாகிறது.
குடியேற்ற விதிமுறைகளை மீறியதாக 2012ம் ஆண்டு இவர்கள் கைது செய்யப்பட்டனர். இன்று காலை அவர்களை நாடு கடத்துவதற்கு எதிராக ஆணை பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த ஆண்டு மியான்மரில் நிகழ்ந்த வன்முறை தாக்குதலில் இருந்து தப்பித்து 7 லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அருகிலுள்ள வங்கதேசத்திற்கு அகதிகளாக சென்றனர்.
இந்த விவகாரத்தில் மியான்மர் ராணுவம் இன சுத்திகரிப்பு நடத்தியதாக ஐநா குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால், கிளர்ச்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக மியான்மர் ராணுவம் கூறுகிறது.
மியான்மரிலுள்ள சிறுபான்மை இனமான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் இருந்து சட்டப்பூர்வமற்ற முறையில் குடியேறியவர் என கருதும் மியான்மர் அரசு அவர்களுக்கு குடியுரிமை வழங்க மறுக்கிறது.
வியாழக்கிழமை நாடு கடத்தப்பட்ட இவர்கள், இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.
பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ரோஹிஞ்சா சிறுமிகள்
மணிப்பூர் மாநில மோரே எல்லை சந்திப்பில் இவர்கள் மியான்மரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
"இவர்கள் மியான்மரை சேர்ந்தவர்கள். இவர்களின் அடையாளம் அவர்களின் அரசால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பயண அனுமதியை அரசு அவர்களுக்கு வழங்கியுள்ளது என்று அஸ்ஸாம் மாநில உள்துறை முதன்மை செயலாளர் எல்எஸ் சாங்சான் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய இனவெறி பற்றிய ஐநாவின் சுயாதீன சிறப்பு நிபுணர் டென்டாயி அச்சியுமி, "இந்த மனிதர்களை நாடு கடத்தியுள்ளதன் மூலம், அவர்களுக்கு உயிர் ஆபத்து நிகழ சாத்தியமுள்ளதால் சர்வதேச சட்டக் கடமைகளை இந்தியா மீறியுள்ளது" என்று கூறியுள்ளார்.
"மனித இன அடையாளம் காரணமாக அவர்களின் பாதுகாப்பை மறுக்கின்ற தெளிவான நடவடிக்கை இதுவாகும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மியான்மரின் ரக்கைன் மாநிலத்தில் போலீஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக ராணுவம் தாக்குதலை தொடங்கிய பின்னர், இந்தியா தற்போது ரோஹிஞ்சாக்களை நாடுகடத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் ரோஹிஞ்சாக்கள் 2 பேரை அனுப்பிவிட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் மியான்மரால் இது உறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறு மியான்மர் அரசிடம் ஒப்படைக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்று கண்காணிக்கிறீர்களா என்று இந்த முதன்மை செயலாளரிடம் கேட்டபோது, அவர்கள் அந்நாட்டின் குடிமக்கள். அந்நாட்டு அரசிடம் ஒப்படைத்தபின்னர் நாங்கள் அவர்களை கண்காணிக்க முடியாது என்று பதில் கூறியுள்ளனர்.
சுமார் 40 ஆயிரம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இந்தியாவில் வாழ்வதாக நம்பப்படுகிறது. அனைவரையும் நாடு கடத்தப் போவதாக கடந்த ஆண்டு இந்தியா அறிவித்தது. இந்த எண்ணிக்கையில் ஐநாவில் அகதிகளாக பதிவு செய்யப்பட்ட 18 ஆயிரம் ரோஹிஞ்சாக்களும் அடங்குகின்றனர்.
மியான்மர் மீது சர்வதேச அழுத்தம் இருந்தாலும், அந்நாட்டின் ராணுவ அதிகாரிகளோடு இந்தியா நல்லுறவை பேணிவருகிறது.
இந்தியாவின் வட கிழக்கில் மியான்மர் காடுகளில் இருந்து செயல்படும் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த அதிகாரிகள் உதவுவர் என்று இந்தியா நம்புவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தென்கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வருகின்ற சீனாவின் செல்வாக்கை தடுத்து, தனது செல்வாக்க்கை அதிகரிக்கும் நோக்கத்தோடு இந்தியா செயல்பட்டு வருகிறது.
ரோஹிஞ்சா அகதிகளுடன் 4 நாட்கள் செலவிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்