You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அக்டோபர் 7-ம் தேதி தமிழகத்தில் கனமழை: 'சிவப்பு' எச்சரிக்கை
அக்டோபர் 7ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கன மழையோ, மிக கனமழையோ பெய்யக்கூடுமென இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழக பேரிடர் மேலாண்மை மையம் இதனை எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக அவ்வப்போது மழை பெய்துவருகிறது. சென்னையில் புதன்கிழமை இரவிலிருந்து விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது. தொடர்ச்சியாக மழை பெய்துவரும் திருவாரூர், சேலம், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வியாழக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அனுப்பிய எச்சரிக்கைக் குறிப்பில் அக்டோபர் 7ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழகத்தில் கன மழை பெய்யுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்றைய தினம் தமிழகத்தின் பல இடங்களில் 25 செ.மீ.க்கும் அதிகமான அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை வந்ததையடுத்து ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில அரசு அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இயக்குனர் சத்ய கோபால், இது பொதுமக்களுக்கான எச்சரிக்கையில்லையென்றும் அரசு தயார் நிலையில் இருப்பதற்காக விடப்பட்ட எச்சரிக்கையென்றும் தெரிவித்திருக்கிறார். தமிழகத்தில் ஏற்படக்கூடிய எந்த ஒரு பேரிடரையும் எதிர்கொள்ள பேரிடர் மேலாண்மை ஆணையம் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
எளிதில் பாதிப்புக்குள்ளாகும் இடங்கள் எத்தனை?
"தமிழ்நாட்டில் உள்ள எளிதில் பாதிப்படையக்கூடிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. புயல், நிலச்சரிவு, வெள்ளம் ஏற்படக்கூடிய இடங்கள் என 4,399 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இடங்கள் அவை எதிர்கொள்ளக்கூடிய பாதிப்பின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், எந்த இடத்தில் எம்மாதிரி பாதிப்பு ஏற்படும் என்பதை முன்கூட்டியே யூகிக்க முடியும்" என சத்யகோபால் பிபிசியிடம் கூறினார்.
மீட்புப் பணிக்கு தன்னார்வலர்கள்
பேரிடர் மீட்புப் படையின் வீரர்கள் தவிர, எல்லா ஊர்களிலும் நீச்சல் அறிந்தவர்கள், மலையேறத் தெரிந்தவர்கள் என சுமார் 30,500 தன்னார்வலர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் பேரிடர் தருணங்களில் இவர்கள் உடனடியாக களத்தில் இறங்குவார்கள் என்றும் சத்யகோபால் கூறினார்.
பேரிடர் ஏற்படும் பட்சத்தில் உயிர்களைக் காப்பாற்றிய பிறகு, போக்குவரத்தை சீர்செய்ய முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் மேலடுக்குச் சுழற்சி தொடர்ந்து நிலவுவதாகவும் இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்துள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலிலும் திருச்சி மாவட்டம் குள்ளம்பாடியிலும் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தில் மிதமானது முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு உருவாகும்
இதுதவிர, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் அக்டோபர் 5ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என்றும் அடுத்த 36 மணி நேரத்தில் அந்தத் தாழ்வுப் பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.
"இது புயலாக மாறி ஓமன் நாட்டு கடற்கரையை நோக்கி நகரக்கூடும். எனவே மீனவர்கள் குமரிக் கடல் பகுதி, தெற்கு கேரளப் பகுதி, லட்சத் தீவுகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு அக்டோபர் ஐந்து முதல் எட்டாம் தேதிவரை செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்." என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :