You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மாணிக்கவாசகர் புத்தகம்: சைவ சித்தாந்த பேராசிரியரை இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பது ஏன்?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
மாணிக்கவாசகர் குறித்து எழுதப்பட்ட ஒரு புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துகள் ஏற்புடையவை அல்ல என்பதால் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றன.
புத்தகத்தை வெளியிட்ட பேராசிரியர் சரவணன் மீது நடவடிக்கையெடுக்க வேண்டுமென அவை கோரிவருகின்றன.
தமிழக அரசின் தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராக இருந்து ஓய்வுபெற்ற ஆ. பத்மாவதி என்பவர் 'மாணிக்கவாசகர்: காலமும் கருத்தும்' என்ற புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகத்தை சென்னையிலிருந்து செயல்படும் சைவ சித்தாந்தப் பெருமன்றம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
இந்த சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் தலைவராக நல்லூர் சா. சரவணன் என்பவர் செயல்பட்டுவருகிறார்.
சரவணன் சென்னைப் பல்கலைக்கழகத்தின் சைவ சித்தாந்தத் துறையின் தலைவராகவும் இருந்துவருகிறார்.
கடந்த மே மாதம் 27ஆம் தேதியன்று இந்தப் புத்தகம் வெளியான நிலையில், அடுத்த சில நாட்களிலேயே சிலர் இந்தப் புத்தகத்தை எதிர்த்து துண்டுப் பிரசுரங்களை வெளியிட ஆரம்பித்தனர்.
இதற்குப் பிறகு ஜூலை 13ஆம் தேதியன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள சைவ சித்தாந்தப் பெருமன்றத்திற்குள் சிலர் புகுந்து, புத்தகத்தைத் திரும்பப் பெறும்படி தகராறு செய்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் இந்து மக்கள் கட்சி நேரடியாக தலையிட ஆரம்பித்தது. புத்தகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னையில் அக்கட்சியைச் சேர்ந்த அர்ஜுன் சம்பத் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடைபெற்றது.
இதற்குப் பிறகு திருநெல்வேலியிலும், சென்னையிலும் சில கோவில்களில் சரவணன் சைவ சித்தாந்தம் உரையாற்றுவது தடுக்கப்பட்டது.
பிறகு புத்தகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையும், இந்து மக்கள் கட்சி நடத்தியது. இதன் பின் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலரான எச் ராஜா, தன்னுடைய 'இந்து ஆலய மீட்புக் குழு'வின் சார்பில் போராட்டம் நடத்தியபோது இந்த விவகாரத்தைத் தொட்டுப் பேசிய ராஜா, சரவணனை ’பொறுக்கி’ என்றும் ’தற்குறி’ என்றும் குறிப்பிட்டார்.
அதன் பிறகு, செப்டம்பர் 18ஆம் தேதியன்று சென்னைப் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த ஒரு பிரிவினர், சரவணனை பேராசிரியர் பணியிலிருந்து நீக்க வேண்டுமெனக் கோரி மனு கொடுக்க வந்திருப்பதாகக் கூறினர்.
இதையடுத்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் - பெரியார் வட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் சரவணனுக்கு ஆதரவாகத் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆ. பத்மாவதி எழுதியிருக்கும் 'மாணிக்கவாசகர்: காலமும் கருத்தும்' புத்தகம் முக்கியமாக அறந்தாங்கிக்கு அருகில் உள்ள ஆவுடையார் கோவில் குறித்தும் மாணிக்கவாசகரின் காலம் குறித்தும் சில கருத்துகளை முன்வைக்கிறது.
இந்த ஆவுடையார் கோவில், பாண்டிய மன்னன் குதிரைகளை வாங்கக் கொடுத்த பணத்தில் மாணிக்கவாசகரால் கட்டப்பட்டதாக நம்பப்பட்டுவருகிறது.
ஆனால், பத்மாவதி கல்வெட்டுகளை ஆராய்ந்ததன் மூலம் அந்தக் கோவில் மாணிக்கவாசகரது காலத்தில் கட்டப்பட்டதில்லை என்றும் 13-14ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டதென்றும் கூறியிருக்கிறார்.
தவிர, அந்த ஆவுடையார் கோவிலில் லிங்கம் பொருந்தியிருக்க வேண்டிய ஆவுடையில் அதற்கான துளை ஏதும் இல்லாததால், அந்த கோவில் சிவன் கோவில் இல்லை என்றும், அங்கே மாணிக்கவாசகருக்கென சிறப்பான வழிபாடு இருப்பதால் அது மாணிக்கவாசகருக்கான கோவிலாக இருக்கலாம் என்றும் பத்மாவதியின் புத்தகம் கூறுகிறது.
திருவிளையாடல் புராணத்தில் மாணிக்கவாசகர் தொடர்பாக ஒரு கதை உண்டு.
நரியைப் பரியாக்கிய கதை என்று கூறப்படும் அந்தக் கதையில் பாண்டிய மன்னன் குதிரைகளை வாங்க மாணிக்கவாசகரிடம் பணத்தைக் கொடுத்து அனுப்பியதாகவும் அவர் அந்தப் பணத்தை வைத்து கோவில் கட்டிவிட்டதால், மன்னன் அவரைத் தண்டித்தான் என்றும் அப்போது சிவபெருமான், தன்வசம் இருந்த நரிகளை குதிரைகளாக மாற்றி மதுரைக்கு அனுப்பி, மாணிக்கவாசகரை மீட்டார் எனவும் அந்தக் கதை கூறுகிறது.
ஆனால், இந்தக் கதை வெறும் புராணம் என்றும் வரகுண பாண்டியனுக்கு நாட்டை மீட்டுக் கொடுத்தவரே மாணிக்கவாசகர் என்பதால், கதையில் வருவதைப் போல மன்னன் அவரை தண்டித்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் பத்மாவதி.
"அந்தப் புத்தகம் முழுக்க முழுக்க தவறான தகவல்களை முன்வைக்கிறது. அந்தப் புத்தகத்தில் மாணிக்கவாசகரின் காலம் 9ஆம் நூற்றாண்டு என்கிறார்கள். ஆனால், அவரது காலம் 4-5ஆம் நூற்றாண்டு.
அதையெல்லாம் விட்டுவிட்டால்கூட, மாணிக்கவாசகரை சூழ்ச்சிக்காரர் என்று பொருள்படும்படி பேசியிருக்கிறார்கள்.
தவிர, அந்தக் கோவிலில் லிங்கம் இல்லை என்பதால், அதனை சிவன் கோவில் இல்லை என்றும் சொல்கிறார்கள். ஆகவேதான் இந்தப் புத்தகத்தை எதிர்க்கிறோம்." என பிபிசியிடம் கூறினார் இந்து மக்கள் கட்சியின் அர்ஜுன் சம்பத்.
ஆனால், பத்மாவதி தான் ஆய்வுநோக்கிலேயே மாணிக்கவாசகரின் காலத்தை வரையறை செய்திருப்பதாகவும் அதை ஏற்காதவர்கள், அவர்கள் விருப்பத்திற்கு மாணிக்கவாசகரின் காலத்தைச் சொல்லிக்கொள்ளலாம் என்கிறார்.
மேலும், "மாணிக்கவாசகரின் காலத்தில் ஸ்ரீமாறன் ஸ்ரீ வல்லபன் என்ற மன்னன் இருந்தான். அவன் இறந்த பிறகு, இளவரசனின் மாற்றான் தாய் மக்கள் அரியணையை பறித்துக்கொண்டனர்.
அவர்களிடமிருந்து தந்திரமாக நாட்டை மீட்டு, இரண்டாம் வரகுணன் ஆட்சியைப் பிடிக்க மாணிக்கவாசகர் உதவிசெய்தார். இதில் தந்திரமாக என்பதை சூழ்ச்சி மூலம் என்று சொல்லியிருக்கிறேன்.
மாணிக்கவாசகர் நல்லதுக்குத்தானே சூழ்ச்சி செய்தார் என்று சொல்லியிருக்கிறேன். இதில் என்ன தவறு" என்கிறார் பத்மாவதி.
தவிர, அந்தக் கோவில் குறித்து தனக்கு முன்பாகவே பல ஆய்வாளர்கள் ஆராய்ந்து அது மாணிக்கவாசகர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் இல்லையென சொல்லியிருப்பதைச் சுட்டிக்காட்டும் பத்மாவதி, "அதைத்தான் நானும் சொல்கிறேன். ஆனால், அதை சர்ச்சையாக்குகிறார்கள்" என்கிறார்.
புத்தகத்தில் கூறும் கருத்துகள் ஏற்புடையதாக இல்லை என்றால் புத்தகத்தை எழுதியவரை எதிர்க்காமல், வெளியிட்ட பதிப்பாளரைக் குறிவைப்பது ஏன் எனக் கேட்டபோது, "புத்தகத்தை எழுதிய பத்மாவதி ஒரு மாவோயிஸ்ட் - லெனினிஸ்ட். அவர் அப்படித்தான் எழுதுவார். ஆனால், சைவ சித்தாந்தப் பெருமன்றமே இந்த நூலை எப்படி வெளியிடலாம்? அப்படியானால், அதற்கு ஓர் அங்கீகாரம் வந்துவிடாதா?" என்றார் அர்ஜுன் சம்பத்.
புத்தகத்தை எழுதிய டாக்டர் ஆ. பத்மாவதி தமிழக அரசின் தொல்லியல் துறையில் 30 ஆண்டுகளாக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர்.
அவரை மாவோயிஸ்ட் - லெனினிஸ்ட் என்று சொல்வது சரியா எனக் கேட்டபோது, "அவர் மாவோயிஸ்டுதான். ஆனால், அவர் புத்தகம் எழுதியதோடு நிறுத்திக்கொண்டுவிட்டதால் அவரை நாங்கள் எதுவும் கேட்கவில்லை.
இந்த சரவணன் எல்லா இடங்களிலும் போய் பேசுகிறார். அதனால்தான் அவரைக் குறிவைக்கிறோம்" என்கிறார் அர்ஜுன் சம்பத்.
இந்த விவகாரத்தில் இந்து அமைப்புகளின் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கும் பேராசிரியர் சரவணனிடம் இது குறித்துக் கேட்டபோது, "நான் அந்தப் புத்தகத்திற்குப் பதிப்பாசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மட்டும்தான். என்னைக் குறிவைக்கக் காரணம், நான் பல இடங்களில் சைவ சமயம் குறித்து ஆற்றிவரும் உரைகள்தான்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சைவத் திருக்கோவில்கள் ஸ்மார்த்தர்களின் வழிபாட்டு முறைக்கு மாறிவருகின்றன. அவற்றை நான் தொடர்ந்து கேள்வியெழுப்புகிறேன். அது இவர்களுக்கு சிக்கலாக இருக்கிறது. ஆகவேதான் என்னைக் குறிவைக்கிறார்கள்" என்கிறார்.
இந்தப் புத்தகத்தில் சொன்ன கருத்துகள் எதுவும் புதிதில்லை. ஏற்கனவே மறைமலையடிகளின் மகன் மறை. திருநாவுக்கரசு, வெள்ளைவாரணர் ஆகியோர் கூறிய கருத்துகள்தான்.
நான் சைவம் குறித்துப் பேசுவது பொறுக்காமல்தான் என்னை பல்கலைக்கழகத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் சைவ சித்தாந்தப் பெருமன்றத்திலிருந்து நீக்க வேண்டுமென்றும் இந்துத்துவ சக்திகள் கோரிவருகிறார்கள் என்கிறார் சரவணன்.
சரவணனை பணியிலிருந்து நீக்க வேண்டுமெனக் கோரி ஆளுநர், பல்கலைக்கழக துணைவேந்தர் ஆகியோருக்கு இந்து அமைப்புகள் மனுக்களை அனுப்பியுள்ளன.
தன் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சரவணனும் வழக்குகளைப் பதிவுசெய்திருக்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :