உதகை விபத்து: 5 சடலங்களுடன் இருவரின் 48 மணி நேர போராட்டம்

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: '48 மணி நேரம் 5 உடல்களோடு போராட்டம்'

நீலகிரி மாவட்டம், உதகை அருகே கல்லட்டி -மசனக்குடி மலைப் பாதையில் திங்கள்கிழமை காலை கட்டுப்பாட்டை இழந்த கார், பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த கப்பல் கேப்டன் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இதில் சுமார் 48 மணி நேரத்துக்குப் பின்னர் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்கிறது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி.

திங்கட்கிழமை நடந்த இந்த விபத்து புதன்கிழமை தான் காவல்துறையின் கவனத்திற்கு வந்திருக்கிறது. தங்கள் விடுதியில் தங்கிய 7 பேரை காணவில்லை என விடுதி ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பின், காவல்துறை மற்றும் முதுமலை புலிகள் சரணாலயததை சேர்ந்த அலுவலகர்களை கொண்ட சிறப்புப் படை அமைக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் செல்போன் சிக்னல் கடைசியாக உல்லத்தி பகுதியில் காட்டியதை அடுத்து மசினகுடி பகுதியில்தான் கார் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தனர்.

இந்நிலையில், 35-ஆவது கொண்டை ஊசி வளைவில் கார் பள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து புதுமந்து காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, 5 பேர் தலையில் பலத்த காயத்துடன் உடல் நசுங்கிய நிலையில் இறந்தும், இருவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதையும் கண்டனர்.

உடனடியாக அவர்களை மீட்டதில் காயமடைந்தவர்கள் ராமராஜேஷ், அருண் ஆகியோர் என்பதும், உயிரிழந்தவர்கள் ஜூட் ஆன்டோ கெவின், ரவிவர்மா, இப்ராஹிம், ஜெயக்குமார், அமர்நாத் என்பதும் தெரியவந்நது.

உயிருடன் மீட்கப்பட்ட அருண், ராமராஜேஷ் ஆகிய இருவரும் உதகை அரசு மருத்துவனைக்கு கொண்டு வரப்பட்டனர்.

- இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

இந்து தமிழ்: 'அமைச்சர் மீது வழக்கு பதிவு?'

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஊழல் புகார் மீது வழக்கு பதிவு செய்ய ஒப்புதல் கோரி தலைமைச் செயலாளருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மாநகராட்சி கள், நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்படும் ஒப்பந்தப் பணிகள் அனைத்தும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கைகாட்டும் நபர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம் கடந்த 2011 முதல் அமைச்சரின் சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளின் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப் புள்ள ஒப்பந்தப் பணிகள் சட்ட விரோதமாக வழங்கப்பட்டுள்ளன. இதில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது." என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: 'தமிழக சிறைகளில் 157 கைதிகள் மரணம்'

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை, தமிழக சிறைகளில் 157 கைதிகள் மரணமடைந்துள்ளனர் என அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் வாழ்வாதாரம், கண்ணியம் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்க, அனைத்து உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து பொதுநல வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 2017 -ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தாமாக முன்வந்து பொதுநல வழக்குப் பதிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

மேலும் அச்செய்தி, "இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக உள்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "கடந்த 2012 -ஆம் ஆண்டு முதல் 2016 -ஆம் ஆண்டு வரை 157 சிறை கைதிகள் இறந்துள்ளனர். இவர்களில் 134 பேரின் மரணம் தொடர்பான அறிக்கை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

எஞ்சிய 23 பேர் மரணம் குறித்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும். அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள 134 கைதிகளில் 109 பேர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு, கீழே விழுந்து படுகாயமடைதல் உள்ளிட்ட காரணங்களால் மரணமடைந்துள்ளனர். 22 கைதிகள் தற்கொலை செய்து கொண்டனர். பரோலில் வெளியே சென்ற ஒருவர் கொலை செய்யப்பட்டார்' என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்குரைஞர் நியமனம்: இந்த அறிக்கையைப் படித்து பார்த்த நீதிபதிகள், அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் இறந்ததாக கூறப்படும் 109 பேர் சிறைச் சாலைக்குள் இறந்தனரா அல்லது வெளியே இறந்தனரா, அவர்களுக்கு எந்த மாதிரியான மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. மேலும் சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு எந்த மாதிரியான மருத்துவ சேவை வழங்கப்படுகிறது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

இந்தப் பணிகளை மேற்கொள்ளவும், நீதிமன்றத்துக்கு உதவவும் மூத்த வழக்குரைஞர் ஆர்.வைகையை நியமிக்கிறோம். அதேவேளையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறைக் கைதிகளுக்கு எந்த வகையான மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இரண்டு மாநில அரசுகளும் வரும் 8-ஆம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்." என்கிறது.

தினத்தந்தி: 'ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட நோய் தொற்று காரணம் இல்லை'

நோய் தொற்று காரணமாக ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்று அப்பல்லோ டாக்டர் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் நோய் தடுப்பு சிறப்பு டாக்டர் ராமசுப்பிரமணியம், சிறுநீரக சிறப்பு டாக்டர் ராஜீவ் அன்னிகிரி ஆகியோரிடம் ஆணையம் நேற்று விசாரணை மேற்கொண்டது.

நீதிபதி ஆறுமுகசாமி, ஆணையத்தின் வக்கீல்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர் கேட்ட கேள்விகளுக்கு டாக்டர்கள் பதில் அளித்தனர். சுமார் 2½ மணி நேரம் அவர்களிடம் விசாரணை நடந்தது.

ஜெயலலிதாவுக்கு சிறுநீரக பிரச்சினை எதுவும் இல்லை என்றும், சிறுநீரகம் நல்ல நிலையில் செயல்பட்டு வந்ததாகவும் சிறுநீரக சிறப்பு டாக்டர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நோய் தொற்று குறித்து டாக்டர் ராமசுப்பிரமணியத்திடம், நீதிபதி ஆறுமுகசாமி கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு டாக்டர், 'ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று சிறுநீரக நோய் தொற்று ஏதேனும் இருக்கிறதா என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, சிறுநீரகத்தில் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அந்த கிருமி ரத்தத்தில் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு நோய் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதன்பின்பு, மருத்துவ மனையில் இருக்கும் வரை ஜெயலலிதாவுக்கு சிறுநீரக நோய் தொற்று ஏற்படவில்லை. இதன்பின்னர், வேறு நோய் தொற்று ஏற்பட்ட போதும் அந்த கிருமிகள் ரத்தத்தில் கலக்கவில்லை. வேறு நோய் தொற்றுக்கு அவ்வப்போது சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. நோய் தொற்று காரணமாக மாரடைப்பு ஏற்படவில்லை' என்று வாக்குமூலம் அளித்துள்ளார்." என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :