கேரள வெள்ளம்: பேரதிர்ச்சிக்கு பிந்தைய மன அழுத்த நோயும், தீர்வும்

மீட்பு பணி

பட மூலாதாரம், AFP/Getty Images

    • எழுதியவர், ரம்யா சம்பத்
    • பதவி, மனநல மருத்துவர்

(இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்)

மனிதனின் விஞ்ஞானமும் வளர்ச்சியும் எத்தனை வேகமாக இருந்தாலும், அவற்றை நிறுத்தவும், நிலை குலைக்கவும் ஓர் இயற்கை பேரிடர் போதும் என உரக்கச் சொல்கிறது கேரளத்தின் வெள்ளம்.

350க்கும் மேல் உயிரிழப்புகள், வெள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டு முகாம்களில் தஞ்சம் அடைந்தவர்கள் பல லட்சத்திற்கும் மேல். யோசித்துப் பாருங்கள்‚

ஒருவேளை உணவு இல்லை என்றால் நாம் எவ்வளவு எரிச்சலடைகிறோம்? மரண பீதியில் பல நாட்கள் போராடி, உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்தவர்களின் மனோநிலை எப்படி இருக்கும்?

இந்த இயற்கை பேரிடர் அவர்களின் வாழ்வை எப்படி மாற்றுகிறது? இந்த வினாக்களின் விடையே இந்த கட்டுரை.

நீரில் மூழ்கிய வெள்ளம்

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

அன்றாட வாழ்க்கையில் நாம் எல்லோரும் ஏதோ ஒரு சவாலையும், அது சார்ந்த சிக்கல்களையும் எதிர்த்துப் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

ஆனால், முற்றிலும் எதிர்பாராத நிலையில், இடி விழுந்தாற்போல் ஏற்படும் இயற்கையின் சீற்றங்கள் நம் மனதில் ஆழமான, அழிக்கமுடியாத காயங்களை ஏற்படுத்திவிடும்.

கேரளாவில் உள்ள என் மருத்துவ நண்பர்களிடம் பேசிய போது, அவர்கள் முகாம்களில் உள்ள மக்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

'என் கண்ணின் முன்னால் என் வீடு அடித்துச் செல்லப்பட்டது. உயிர் பிழைப்போமோ இல்லையோ என்று ஏற்பட்ட திகிலும், அதிர்ச்சியும், இன்னும் எங்களை விட்டுப்போகவில்லை" என்று பலர் கூறியுள்ளனர்.

12 வயதாகும் குழந்தை அனு உறக்கத்தில் இருந்து, பயந்து எழுந்துவிடுகிறாள். மறுபடியும் வெள்ளம் ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணம் அவளுள் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.

மருத்துவ சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images

இதுபோன்ற, இயற்கை பேரழிவுகளுக்குப் பின், அதை நேரடியாக பார்த்தவர்களுக்கும், அதில் நெருக்கமான உறவுகளை இழந்தவர்களுக்கும், மனதளவில் 'உளக்காய விளைவு நோய்" எனப்படும் 'Post Traumatic Stress Disorder' (அல்லது தீவிர பாதிப்புக்கு பிறகு ஏற்படும் மன அழுத்தம்) ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

வெள்ளத்தில் அவர்கள் சிக்கியிருக்கலாம்; நண்பர்களோ, உறவினர்களோ உயிருக்குப் போராடுவதை கண்கூடாக பார்த்திருக்கலாம்; போராடுபவர்களை மீட்கும் குழுவினருக்கும் இந்த மனநலம் சார்ந்த பாதிப்பு ஏற்படலாம்.

பாதுகாப்பான இடத்திற்கு சென்ற பிறகும் கூட, ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் தவிப்பார்கள். அந்த அச்சுறுத்தும் ஞாபகங்கள் மனதில் ஆழமாக பதிந்துவிடும்.

உறக்கத்தில் இருந்து பயந்து எழுவது, மீண்டும் அதே சூழ்நிலையில் சிக்கித் தவிப்பது போல் உணர்வது, சாதாரணமாக பேசும்போது கூட அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை எண்ணி திகிலடைவது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

கேரள வெள்ளம்

பட மூலாதாரம், Getty Images

இந்த “உளக்காய விளைவு நோய்“-க்கு உள்ளானவர்கள் அந்த பேரிடரின் போது பார்த்த, அல்லது பேசிய விஷயங்களை தவிர்க்க முயலுவார்கள்.

ஏனென்றால், உயிருக்குப் போராடியபோது அவர்கள் கூடவே இருந்த நபர்கள், அதே இடம், உபயோகித்தப் பொருட்கள் போன்ற எதுவாக இருந்தாலும் அவர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம்.

ஒரு குழந்தையின் இயல்பான அழுகை, அவர்களுக்கு வெள்ளத்தின்போது கேட்ட அழுகை குமுறல்களை நினைவூட்டும். மீண்டும் அவர்களுடைய வீட்டுக்கோ, சில இடத்திற்கோ செல்ல பலர் அஞ்சுவார்கள்.…

ஞாபகங்களை மறக்கமுடியாமல் தவிப்பவர்கள் போல், நிதர்சனத்தை மறந்துவிடுவதும் இந்த 'PTSD (Post Traumatic Stress Disorder)' மனநோயில் ஏற்படலாம்.

ஏற்பட்டுள்ள விளைவுகளை ஏற்க முடியாமல், எதார்த்தத்தை மறுகின்ற நிலையில் ('Denial' mode-ல்) பலர் இருப்பார்கள்.

நிவாரண பணி

பட மூலாதாரம், Reuters

வெள்ளத்தில் மனைவியை இழந்த ரமேஷ்„ அவள் இறக்கவே இல்லை; அவள் வீட்டில்தான் பத்திரமாக இருப்பாள்… என உண்மையை ஜீரணிக்க முடியாமல் பேசுகிறார்.

3-வயது குழந்தையை இழந்த விஜி, என் குழந்தை பிழைக்காமல், நான் ஏன் பிழைத்தேன்… என்று குற்ற உணர்வு மேலோங்கி குமுறுகிறார்.

இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் பயம், கோபம், குற்ற உணர்வு, அழுகை போன்ற எதிர்மறை உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

எண்ணங்களிலும், உணர்வுகளிலும் எதிர்மறை விஷயங்கள் மேலோங்கி இருப்பதும் உளக்காய விளைவு நோயின் அறிகுறிகள்தான்.

முகாம்களில் கேரள மக்கள்

பட மூலாதாரம், Getty Images

தூங்க முடியாமல் போவது, சிறிய சத்தம் கேட்டாலும், பயந்து பதற்றத்தோடு எழுவது, சிறிய விஷயங்களுக்குக் கூட அதிகமாக உணர்ச்சிவசப்படுவது, கோபப்படுவது, அவர்களை அவர்களே காயப்படுத்துக்கொள்ள முற்படுவது போன்ற சுபாவத்தில் வித்தியாசங்களையும் நம்மால் பார்க்க முடியும்.

குழந்தைகளுக்கும் 'PTSD' ஏற்படலாம். அச்சுறுத்தும் கனவுகள், எப்போதும் பயந்த நிலையிலே இருப்பது, மற்ற குழந்தைகளுடன் விளையாட முடியாமல் தனிமையாக விலகி இருப்பது, சுபாவத்தில் வித்தியாசம், வேறு ஒரு நபரை போல் பேசுவது போன்றவை எல்லாம் குழந்தைக்கு உளக்காய விளைவு நோய் ஏற்பட்டிருக்கலாம் என்பதன் அறிகுறிகளே.

முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு
முத்துக்கண்ணம்மாள் : 80 வயதிலும் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு

பொதுவாக, இதுபோன்ற அறிகுறிகள் உள்ளவர்களிடம் அதை மறந்துவிடு…, 'அதையே பேசிக்கொண்டு இருக்காதே" என்று பலர் கூறுவர்.

இது உளவியல் ரீதியாக ஆரோக்கியமானதல்ல. வெள்ளத்தில் சிக்கி, உயிருக்கு போராடி, உறவுகளையும் உடைமைகளையும் இழந்து நிற்பவர்களுக்குத் தேவை என்ன?

மீட்பு பணி

அவர்களை பேச வைத்து, அவர்களின் உணர்வுகள் வார்த்தைகளாக கொட்டும்போது அதை கனிவோடு கேட்க வேண்டும்.

அவர்களின் துயரத்தில் மனரீதியாக நாமும் பங்கெடுக்க வேண்டும். உணர்வுகளை அடக்குவது, பலூனை நீரில் மூழ்கவைப்பது போன்றது. அது என்றும் மேலே வந்து கொண்டே இருக்கும்.

பாதிப்பிற்கு உள்ளானவர்களை அரவணைத்து, அவர்கள் கூற விழைவதை ஆர்வத்துடனும் இரக்கத்துடனும் கேட்டு, அவர்களுக்கு உற்ற நண்பராக இருந்தால்,இந்த பேரிடர் அவர்களுக்கு ஏற்படுத்திய மனரீதியான தாக்கத்தை வெகுவாக குறைக்க முடியும்.

ரம்யா சம்பத், மனநல மருத்துவர்
படக்குறிப்பு, ரம்யா சம்பத், மனநல மருத்துவர்

ஒரு மாதத்திற்கு மேலாக, மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின், அவர்களுக்கு மனநல மருத்துவரின் வழிகாட்டுதலும் உதவியும் அவசியம்.

உடலின் காயம் தழும்பாக மாறும் என்றாலும், அதை குறைக்க சிகிச்சை எடுக்கிறோம். அதேபோல் உள்ளத்தில் ஏற்படும் காயங்களின் தாக்கத்தையும் மனநலம் சார்ந்த சிகிச்சை முறைகளாலும், மருந்துகளாலும் குறைக்க முடியும்.

எங்கோ படித்த சிறுகதை நினைவிற்கு வருகிறது. அவள் அலைகளிடம் சொன்னாள். 'எத்தனை முறை என் கால்களை தழுவினாலும், உன்னை மன்னிக்க முடியவில்லை. என் பெற்றோரை அழைத்துச் சென்றுவிட்டதனால்‚"

பிபிசி தமிழின் சிறப்பு தொகுப்பு

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :