பிரிட்டனில் அடைக்கலம் கோரும் தொழிலதிபர் நீரவ் மோதி
பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கும் இந்திய வைர வியாபாரி நீரவ் மோதி பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோரியிருப்பதாக அந்நாட்டின் பிரபல பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
நீராவ் மோதி பிரிட்டனில் இருப்பதை இந்திய மற்றும் பிரிட்டன் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக 'பைனான்சியல் டைம்ஸ்' பத்திரிக்கை தெரிவித்திருக்கிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மோசடி செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் நீரவ் மோதி.
பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றிய தகவல்களை வழங்குவதில்லை என்று கூறிவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடியில் சம்பந்தப்பட்ட நீரவ் மோதி, பிப்ரவரி மாதம் முதல் தலைமறைவாக இருக்கிறார். இந்திய புலனாய்வு அமைப்புகள் அவரை வலைவீசி தேடிவருகின்றன.
இந்நிலையில், பிரிட்டனின் தீவிரவாத எதிர்ப்பு மற்றும் சமநிலைக்கான அமைச்சர் பாரோன்ஸ் வில்லியம்ஸ் ஆப் ட்ராஃப்போர்டு மற்றும் இந்தியாவின் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இடையே இன்று சந்திப்பு நடந்தது. அப்போது, மற்ற நாடுகளில் பல்வேறு குற்றங்களுக்காகத் தேடப்படும் நபர்களின் பாதுகாப்பு புகலிடமாக பிரிட்டன் இருக்கக்கூடாது என உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பிரிட்டன் அமைச்சரிடம் வலியுறுத்தினார். இந்தியா சட்டத்தை மதிப்பதாகவும், தேடப்படும் நபர்களை இந்தியா கொண்டுவர சட்ட நடைமுறைகளை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும், இதற்கு பிரிட்டனின் ஒத்துழைப்பை இந்தியா எதிர்பார்ப்பதாகவும் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார் என இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Facebook/NiravModi
அரசியல்ரீதியாக தான் குறிவைக்கப்படுவதாக கூறி, நீரவ் மோதி பிரிட்டனில் அரசியல் தஞ்சம் கோருவதாக பிரிட்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நீரவ் மோதியிடம் பேசுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
இந்திய வங்கிகள் பலவற்றில் சுமார் 9,000 கோடி ரூபாய் கடனை பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, இந்தியாவில் இருந்து வெளியேறி பிரிட்டனில் அடைக்கலம் புகுந்தவர் தொழிலதிபர் விஜய் மல்லையா. மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது, அவரை தாயகம் அழைத்துவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள இந்திய அரசு, அதற்காக பிரிட்டன் அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டிருக்கிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வெளியாகி, நீரவ் மோதி இந்தியாவை விட்டு தப்பிச் சென்றதும், பாஸ்போர்ட் ரத்து செய்வதற்கான நடவடிக்கை, 1,300 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்வது மற்றும் மத்திய புலனாய்வு முகமைகளின் 'தேடுகை அறிவிக்கை' என பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நீரவ் மோதியின் நவீன வைர நகை கடைகள் (Designer jewelry boutique) லண்டன், நியூயார்க், லாஸ் வேகாஸ், ஹவாய், சிங்கப்பூர், பெய்ஜிங் ஆகிய இடங்களிலும், இந்தியாவில், மும்பை மற்றும் டெல்லியிலும் உள்ளன.
'குளோபல் டைமண்ட் ஜூவல்லரி ஹவுஸ்' என்ற நிறுவனத்தை 2010 ஆம் ஆண்டில் உருவாக்கிய நீரவ் மோதி அதற்கு பின் ராக்கெட் வேகத்தில் முன்னேறினார். அவரது நிறுவனத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது.
நீரவ் மோதியின் குடும்பம் பரம்பரியமாக வைர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டில் வளர்ந்தவர் நீரவ்.
இந்தியாவில் குடியேறிய நீரவ், வைர வர்த்தகத்தின் அனைத்து அம்சங்களிலும் நுணுக்கமான பயிற்சியை எடுத்துக் கொண்டு 1999ஆம் ஆண்டில் ஃபயர்ஸ்டர் டைமண்ட் என்ற நகை வடிவமைக்கும் நிறுவனத்தை தொடங்கினார். வைரம் தொடர்பான அனைத்து தொழில்களிலும் ஃபயர்ஸ்டர் நிறுவனம் ஈடுபட்டது.
கிறிஸ்டி மற்றும் சோத்பே ஆகியவற்றின் தர வரிசை அட்டவணையில் இடம் பெறும் முதல் இந்திய நகை வடிவமைப்பாளர் என்ற பெருமையை பெற்ற நீரவ் மோதி, 2013 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸின் இந்திய பில்லியனர் பட்டியலில் இடம்பிடித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












