நாளிதழ்களில் இன்று- நீட் தேர்வு: பழங்குடி மாணவர் ஒருவருக்குகூட எம்.பி.பி.எஸ் சீட் இல்லை
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "பழங்குடி மாணவரும், மருத்துவ சேர்க்கையும்'

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் அரசு அல்லது அரசு உதவி பெற்ற பள்ளியில் படித்த பழங்குடி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதுபோல, அரசு அல்லது அரசு உதவி பெற்ற பள்ளியில் படித்த ஒன்பது பட்டியல் சாதி மாணவர்கள் மட்டுமே மருத்துவபடிப்பில் சேர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது அந்நாளிதழ் செய்தி. மேலும் அந்த செய்தி நீட் தேர்வுக்கும் இதற்கும் உள்ள தொடர்பை விவரிக்கிறது.

தி இந்து (தமிழ்): 'நிலத்தடி நீரை உறிஞ்சுவதில் தமிழகம் முதலிடம்'
நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பது, மத்திய நிலத்தடி நீர் வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது என்கிறது தி இந்து (தமிழ்) நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
"நாடு முழுவதும் மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் கண்காணிப்பு கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறித்து கடந்த ஆண்டு பருவமழைக்கு முன்பாக ஆய்வு நடத்தப்பட்டது. அதுதொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்திலும், பஞ்சாப் 2-ம் இடத்திலும், ஆந்திரா 3-ம் இடத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.தமிழகத்தில் உள்ள 526 கண்காணிப்பு கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்பட்டது. அந்த விவரங்களை, கடந்த 2007 முதல் 2016-ம் ஆண்டு வரை பருவமழைக்கு முன்னதாக எடுக்கப்பட்ட நிலத்தடி நீர்மட்ட அளவுகளின் சராசரியுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் 87 சதவீத கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. அதில், 35 சதவீத கிணறுகளில் 2 மீட்டர் ஆழம் வரையும், 24 சதவீத கிணறுகளில் 4 மீட்டர் ஆழம் வரையும், 28 சதவீத கிணறுகளில் 4 மீட்டர் ஆழத்துக்கு கீழும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. 13 சதவீத கிணறுகளில் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.தமிழகத்தில் மொத்தம் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ள நிலையில், 142 ஒன்றியங்களில், கிடைக்கும் மழைநீரின் அளவைவிட, நிலத்தடி நீரை உறிஞ்சும் அளவு அதிகமாக உள்ளது. 33 ஒன்றியங்கள் அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சுபவையாக மாறிவருகின்றன. 57 ஒன்றியங்கள் அதிக நிலத்தடி நீரை உறிஞ்சுபவையாக மாறும் அறிகுறிகள் தென்படுகின்றன என்று மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி இந்து - 'பா.ஜ.கவில் சேர காங்.,மஜத எம்.ஏல்.ஏக்கள் ஆர்வம்!'

பட மூலாதாரம், தி இந்து

தினத்தந்தி: 'அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி இனி கிடையாது'

அ.தி.மு.க.வின் புதிய சட்டவிதிகளை தேர்தல் கமிஷன் ஏற்றுள்ளது. இதன்படி அக்கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி கிடையாது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
"அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ந்தேதி கூட்டப்பட்டது. அதில் அ.தி.மு.க.வில் சட்டவிதிகள் திருத்தம் செய்யப்பட்டன. புதிய சட்டவிதிகளின்படி கட்சியில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன.அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர். கட்சி நிர்வாகிகளை நியமித்தல், முக்கிய அரசியல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது, அவசர நேரத்தில் கட்சியின் சார்பில் கொள்கை ரீதியான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் படைத்தவர்களாக அவர்கள் 2 பேருமே விளங்குகின்றனர்.இதற்கிடையே அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளும், புதிய சட்ட விதிகளும் தேர்தல் கமிஷனின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பரிசீலனை செய்து வந்தனர். புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து அ.தி.மு.க. பொதுக்குழுவில் எடுத்த முடிவுகளுக்கும், புதிய விதிகளுக்கும் தேர்தல் கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவை தேர்தல் கமிஷன் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: 'பொருளாதார வழித்தட திட்டத்துக்கு ஆதரவில்லை'
சீனாவின் பொருளாதார வழித்தட திட்டத்துக்கு இந்தியாவின் ஆதரவு இல்லை என்று பிரதமர் நரேந்திர மோதி மறைமுகமாகக் கூறினார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
"ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் மாநாடு, சீனாவின் குயிங்டோ நகரில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், பாகிஸ்தான் அதிபர் மம்னூன் ஹுசைன் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அண்டை நாடுகளுடன் போக்குவரத்து தொடர்பை அதிகரிக்கச் செய்வதற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த போக்குவரத்து திட்டங்கள், பிற நாடுகளின் இறையாண்மை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு மதிப்பளிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதுபோன்ற போக்குவரத்து திட்டங்களை இந்தியா முழுமையாக வரவேற்கிறது. அனைவருக்கும் ஏற்புடைய திட்டங்களுக்கு இந்தியா முழு ஆதரவு அளிக்கும்.போக்குவரத்து தொடர்புகள் என்றால் சாலைகள் அமைப்பது மட்டுமன்றி மக்களுக்கு இடையே தொடர்புகளை உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும். மக்களுக்கு இடையேயான தொடர்புகள், அவர்களின் கருத்து பரிமாற்றம் ஆகியவற்றுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கும்" என்று பிரதமர் நரேந்திரமோதி பேசியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தி இந்து (ஆங்கிலம்) - இங்கிலாந்தை வீழ்த்திய ஸ்காட்லாந்து
எடின்பரோவில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து அந்த அணிக்கு எதிராக தனது முதல் வெற்றியை ஸ்காட்லாந்து அணி பதிவு செய்துள்ளது குறித்து தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஞாயிற்றுக்கிழமை எடின்பரோவில் நடைபெற்ற பரபரப்பான போட்டியில் முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 371 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மெக்லாட் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 365 ரன்களை மட்டுமே எடுத்து அதிர்ச்சி தோல்வியடைந்தது என அந்த செய்தி மேலும் விவரித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












