நாளிதழ்களில் இன்று: தமிழ்நாட்டில் 20 சதவீதம் பேருக்கு புகைப்பழக்கம் - ஆய்வில் தகவல்
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினமணி

பட மூலாதாரம், Getty Images
உலக சுகாதார நிறுவனம், மத்திய சுகாதாரத்துறை மற்றும் மும்பை டாடா சமூக அறிவியல் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் தமிழகத்திலுள்ள 20 சதவீதம் பேர் புகையிலை பழக்கமுடையவர்கள் என்று தெரியவந்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை திரிபுரா மாநிலத்தில் அதிகபட்சமாக 64.5 சதவீதம் பேர் புகையிலை பழக்கத்துக்கு ஆளாகி உள்ளதாகவும், குறைந்தபட்சமாக கோவாவில் 9.7 சதவீதம் பேர் ஆளாகியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவின் கிராமப்புறங்களில் மூன்று பேருக்கு ஒருவர் புகையிலையை பயன்படுத்துவதாகவும், நகர்ப்புறங்களில் ஐந்து பேரில் ஒருவருக்கு இப்பழக்கம் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்து (ஆங்கிலம்)

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் தொழில்கள் சிறப்பாக வளர்ச்சியடைந்து வருவதாக அரசால் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை சார்பில் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கடந்த ஓராண்டில் மட்டும் கிட்டத்தட்ட 50,000 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, கடந்த நிதியாண்டில் மட்டும் 18.45 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18,97,619 ஆக இருந்தது, ஆனால் 2017-18ல் இது 13,78,544 ஆக குறைந்துள்ளது.

தி இந்து (தமிழ்)

பட மூலாதாரம், Getty Images
கர்நாடகாவில் அமைச்சர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்துள்ள 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் கடந்த இரு தினங்களாக மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தி இந்து (தமிழ்) செய்தி வெளியிட்டுள்ளது.
34 இடங்கள் கொண்ட மாநில அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 22 இடங்களும், மஜதவுக்கு 12 இடங்களும் என பங்கீடு செய்யப்பட்ட நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மேலும், தாங்கள் ராஜினாமா செய்யப்போவதாக அவர்கள் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, அவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளில் முதல்வர் குமாரசாமியும், துணை முதல்வர் பரமேஷ்வரும் ஈடுபட்டு வருவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












