கர்நாடகத்தில் காலா படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும் - ரஜினி

காவிரி பிரச்சனை தொடர்பாக தான் தெரிவித்த கருத்தை முன்வைத்து காலா படத்திற்கு கர்நாடகத்தில் தடை விதிக்கக்கூடாது என நடிகர் ரஜினிகாந்த் கோரியிருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ் உள்ளிட்டவர்கள் நடிக்க பா. ரஞ்சித் இயக்கியிருக்கும் காலா திரைப்படம் நாளை (ஜூன் 7) காலையில் உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தை கர்நாடக மாநிலத்தில் வெளியிடக்கூடாது என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடைவிதித்துள்ளது.

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு ஆதரவாக ரஜினிகாந்த் பேசியதால் காலா திரைப்படத்தை கர்நாடகா மாநிலத்தில் திரையிடக் கூடாது என கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீண் ஷெட்டி ஆகியோர் தலைமையில் பெங்களூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்தே காலா படத்தை வெளியிட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்தது.

இதையடுத்து இந்தப் படத்தைத் தயாரித்த நடிகர் தனுஷின் சார்பில் காலா திரைப்படத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கர்நாடகாவில் காலா திரைப்படத்தை திரையிடுவதற்கு தடையில்லை என்றும் திரையரங்குகளுக்கு உரிய பாதுகாப்பை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் இன்று காலையில் தனது வீட்டு வாயிலில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினி, தன்னுடைய காலா படத்தை வெளியிட தடை விதிக்கக்கூடாது என்று கோரினார். "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த வேண்டுமெனக் கோரியதற்காக காலா படத்தை வெளியிடவிடாமல் தடுப்பது சரியல்ல. படத்தை வெளியிட உதவவேண்டிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபை படத்தை வெளியிடாமல் தடுக்கக்கூடாது" என்றார்.

"அணைக்கட்டெல்லாம் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றேன் அது என்னுடைய கருத்து. இதுக்காக படத்தை வெளியிடக்கூடாது என்பது சரியல்ல. ஏதோ வீம்புக்காக படத்தை ரிலீஸ் செய்கிறோம் என்பதல்ல. படம் எப்படியும் உலகம் முழுவதும் வெளியாகப் போகிறது. கர்நாடகாவில் மட்டும் படம் வெளியாகவில்லையென்றால், அதுவும் இந்த காரணத்திற்காக வெளியாகவில்லையென்றால் அது கர்நாடகத்திற்கே நன்றாக இருக்காது. படம் வெளியாகும் திரையரங்கிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. குமாரசாமி அவ்கள் செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது." என்றார் ரஜினிகாந்த்.

இதற்குப் பிறகு, காலா படத்தை வெளியிட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், பிரச்சனை செய்யக்கூடாது என கன்னடத்திலும் ரஜினி வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையில், காலா திரைப்படத்தின் கதையும் பாடல்களும் தன்னுடையது என்றும் தன்னுடைய அனுமதியின்றி காலா திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டுமென்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜசேகரன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே கோயல் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது.

''இந்தப் படத்தின் கதை அவருடையது என்ற மனுதாரரின் கோரிக்கைக்கு அடிப்படை ஆதாரம் இல்லை. ஆகவே தக்க ஆதாரம் இல்லாமல் படத்திற்கு தடை விதிக்க முடியாது. எனவே படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்கிறோம்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :