தேர்தல் சமயத்தில் மட்டும் உயராத பெட்ரோல் விலை - பின்னணியில் அரசியலா?

    • எழுதியவர், பிரதீப் குமார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஏப்ரல் மாதம் 24ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரிக்கவில்லை. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு மூன்று டாலர் வரை அதிகரித்துள்ளது. எண்ணெய் என்பது 90% அரசியல் மற்றும் 10% பொருளாதாரம்.

பெட்ரோல்

பட மூலாதாரம், Getty Images

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலை மனதில்கொண்டு மத்திய அரசு, விலையை மாற்றம் செய்யவேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. கர்நாடக மாநில தேர்தல் முடிவடைந்ததும் வழக்கம்போல நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக எண்ணெய் விலைகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். ஏனெனில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த 55 மாதங்களின் உச்சபட்ச விலையாக இருக்கிறது.

2017 ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டபிறகு, தினசரி அடிப்படையில் விலைகள் நிர்ணயிக்கும் நடைமுறை தொடங்கியது.

எண்ணெய் விலைகள் மீது தனக்கு கட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு மீண்டும் மீண்டும் பல சந்தர்ப்பங்களில் கூறிவந்துள்ளது. இப்போது எழும் கேள்வி என்னவென்றால், தேர்தல் காலத்தில் மட்டும் எண்ணெய் விலையின் விலை தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கப்படாமல் நிலையாகவே இருப்பது எப்படி?

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

இந்த கேள்விக்கான பதிலை சொல்லும் பொருளாதார விவகாரங்களுக்கான மூத்த பத்திரிகையாளர் அஷுதோஷ் சின்ஹா, "'எண்ணெய் என்பது 90% அரசியல் மற்றும் 10% பொருளாதாரம்' (Oil is 90% Politics and 10% Economy) என்பது பெட்ரோலிய சந்தையில் பிரபலமான வாசகம். இதற்கு காரணம் அரசு விரும்பினால் பெட்ரோலின் விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியும் என்பதே…"

எண்ணெய் விலை நிர்ணயத்தில் மத்திய அரசின் பங்கு இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஊடகங்களிடம் கூறியதை வழிமொழியும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர், எரிபொருள் விலையில் அரசின் அழுத்தம் இல்லை என்று அழுத்திக் கூறுகிறார்.

"இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் தன்னாட்சி நிறுவனங்களே. ஆனால் பல மாதங்களாக தினசரி மாறிவந்த எண்ணெய் விலைகள் இப்போது தொடர்ந்து பல நாட்களாக நிலை பெற்றிருப்பது எப்படி? எந்தவித அழுத்தமும் இல்லாமல் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த்து என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?

பெட்ரோல்

பட மூலாதாரம், Getty Images

பெட்ரோல் மற்றும் எரிசக்தி விவகார நிபுணரும், பாரதிய ஜனதாக் கட்சியுடன் இணைந்துள்ளவருமான நரேந்திர தனேஜா கூறுகையில், "டைனமிக் டெய்லி பிராச்சிங் (Dynamic daily processing) என்பதன் பொருள், தினசரி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வது என்பது. ஆனால், தற்போது எண்ணெய் நிறுவனங்கள் விலை மாற்றம் செய்யாமல் இருப்பதற்கான காரணம் என்னவென்று அவர்களுக்குத்தான் தெரியும், இதில் அரசின் பங்கோ, அழுத்தமோ எதுவும் இல்லை, ஆனால் எதிர்கட்சியினர் இதை பெரிதுபடுத்துகிறார்கள்" என்று கூறுகிறார்."

நரேந்திர தனேஜாவின் கருத்துப்படி, "எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளுக்கு அரசியலுடன் எந்தவித தொடர்புமில்லை. ஆனால், தற்போதைய பெட்ரோல் விலையில் 30 காசுகளும், டீசல் விலையில் 25 காசுகளும் குறைவாக இருக்க வேண்டும், தற்போதுள்ள விலையை அதிகம்".

தேர்தல் காலங்களில் பெட்ரோலிய பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வது முதன்முறை என்று சொல்லமுடியாது. 2017 டிசம்பர் மாதத்தில் குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல்களின்போதும் பெட்ரோல்-டீசல் விலை தினசரி அடிப்படையில் மாறாமல் நிலையாக வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பெட்ரோல் விலையில் 45 காசுகள் அதிகரித்த்து, ஆனால் டீசலின் விலை மாறாமல் நிலையாக இருந்தது.

பெட்ரோல்

பட மூலாதாரம், AFP

டைனமிக் டெய்லி பிராச்சிங், அதாவது தினசரி அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வருவதற்கு முன்பு, உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், அசாம் போன்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றபோது 15 நாட்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்ட நடைமுறை இருந்தபோதிலும், எண்ணெய் விலை நிலையாக வைக்கப்பட்டிருந்தது.

"பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தபட்டால் மக்களின் சீற்றம் தேர்தலில் ஆளும்கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசாங்கம் கருதுகிறது" என்கிறார் ஆஷுதோஷ் சின்ஹா.

2014ஆம் ஆண்டு நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபிறகு, எண்ணெய் விலை தொடர்பான விமர்சனங்களை எதிர்கொண்டது. இதற்கு காரணம், சர்வதேச சந்தையில் 2016 ஜனவரி மாதத்தில் ஒரு பீப்பாய் எண்ணெயின் விலை 27 டாலர்கள் என்ற குறைவான விலையை எட்டியபோதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் குறைக்கப்படவில்லை.

2014ஆம் ஆண்டு, எண்ணெய் விலையில் உலக அளவில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் எல்லா இடங்களிலும் எண்ணெய் விலை குறைந்தது. அதைத் தொடந்து எண்ணெய் மீதான விலை கட்டுப்பாடுகளை நீக்கிய இந்தியா, எண்ணெய் மீது வரி விதித்தது. அரசுக்கு மிகப்பெரிய சுமையாக இருந்த எரிபொருள் மானியத்தை குறைப்பதே இதற்கு முக்கியமான காரணம்.

தற்போதைய அரசு அதிக லாபம் நவம்பர் 2014 ஜனவரி முதல் 2016ஆம் ஆண்டுவரை பெட்ரோலின் மீதான உற்பத்தி வரியை ஒன்பது முறை அதிகரித்திருக்கிறது. லாபம் ஈட்டுவது அல்லது நட்டத்தை குறைப்பதோ இதற்கு காரணமாக இருக்கலாம்.

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

"பெட்ரோல் போன்ற எண்ணெய் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்வதில் நுகர்வோர், எண்ணெய் நிறுவனம் மற்றும் அரசு என முத்தரப்பும் இணைந்து விலை அதிகரிப்பின் சுமையை பகிர்ந்துகொள்ளவேண்டும்" என்று 2004 ஜூலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியதை நினைவுகூரும் அஷுதோஷ் சின்ஹா. ஆனால் தற்போதோ, அரசும், எண்ணெய் நிறுவனங்களும் லாபம் ஈட்டுவதில் குறியாக உள்ளன, பொதுமக்களைப் பற்றி யாருக்கும் அக்கறையில்லை.

உண்மையில், பொருட்களின் தேவைகள் அதிகரிக்கும்போது, அதன் விலைகள் கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டிவிடுகிறது என்று சொல்கிறார் நரேந்திர தனேஜா. மேலும், இந்திய எண்ணெய் சந்தையில் பெட்ரோல் பங்கில் விற்கப்படும் எண்ணெய் சுத்தீகரிக்கப்பட்டது, சர்வதேச எண்ணெய் சந்தையில் விற்கப்படுவது கச்சா எண்ணெய் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்று அவர் கூறுகிறார்.

"கச்சா எண்ணெய் வாங்கிய பிறகு, இந்தியாவுக்கு கொண்டுவரப்ப்ட்டு, சுத்தீகரிக்கப்பட்டு பெட்ரோல் பங்குகளில் மக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யும்வரை 25 நாட்கள் ஆகிவிடுகிறது. எனவே இன்றைய சர்வதேச கச்சா எண்ணெயின் விலையையும், சில்லறை விற்பனை விலையையும் வைத்து ஒப்பீடு செய்யக்கூடாது" என்கிறார் தனேஜா.

பெட்ரோல்

பட மூலாதாரம், Press ASSOCIATION

ஒரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்றவாறு, இந்தியாவில் பெட்ரோல் பொருட்களின் விலையை மாற்றியமைக்கும் நடைமுறையைத் தொடங்கியது அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசுதான். 2002ஆம் ஆண்டு, ராம் நாயக் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்தபோது இந்த நடைமுறை தொடங்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த நடைமுறை மிக அதிகமாக கடைபிடிக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோதி கூறுகிறார்.

ஆனால் தேர்தல் சமயத்தில் எரிபொருள் விலைகளை கட்டுப்பாட்டில் வைப்பது புதிய நடைமுறை இல்லையென்பதும், உலகம் முழுவதும் இதற்கான உதாரணங்கள் பரவிக்கிடப்பதும் அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் சமயத்தில் பெட்ரோல் விலை குறைவதும் வழக்கமான நடைமுறையே.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: