உலகப் பார்வை: கேன்ஸ் - பாலின பாகுபாடுக்கு எதிராக நடிகைகள் போராட்டம்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
'கேன்ஸ்' திரைப்பட விழாவில் போராட்டம்

பட மூலாதாரம், AFP
திரைத்துறையில் நிலவும் பாலின பாகுபாடுக்கு எதிராக 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் பல பெண் இயக்குனர்கள் மற்றும் நடிகைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண் இயக்குநர்களின் திரைப்படங்கள் அதிகளவில் திரையிடப்படுவதில்லை என்று கேன்ஸ் விழா குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன.
திரைத்துறையில், ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில், தற்போது இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும்அரசியல் பதற்றம்

பட மூலாதாரம், Reuters
சிக்னலில் நிக்காமல் காரை ஓட்டிச் சென்று இருசக்கர வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழக்க காரணமாக இருந்ததாக கூறப்படும் அமெரிக்க ராஜிய அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
அமெரிக்க ராணுவ இணைப்பு அதிகாரியான கோல் ஜோசஃப் இமானுவேல் ஹாலை அழைக்க அமெரிக்கா, விமானம் ஒன்றினை பாகிஸ்தானுக்கு அனுப்பியது. ஆனால், அவர் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
முன்னதாக, கோல் ஜோசஃப் ராஜதந்திர விவகாரங்களில் இருப்பதினால் அவரை கைது செய்ய முடியாது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால், இந்த இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.

பாரீஸ்: பயங்கரவாத தாக்குதலில் ஒருவர் பலி

பட மூலாதாரம், AFP
பிரான்ஸ் தலைநகரான பாரீஸின் மத்திய பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் கத்திக்குத்து சம்பவத்தில், ஒரு ஆயுததாரி தனது கத்தியால் ஒருவரை கொன்றுள்ளார்.. மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
ஒபேரா பகுதியில் இந்த தாக்குதல்காரி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 'அல்லாஹ் அக்பர்' என்று தாக்குதல்தாரி கோஷமிட்டதாக சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலை, தங்கள் படைவீரர் ஒருவர்தான் நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் குழு தெரிவித்துள்ளது.

மலேசியா முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆடம்பர வீட்டில் சோதனை

பட மூலாதாரம், AFP
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குக்கு தொடர்புடைய ஆடம்பர வீடு ஒன்றில் காவல்துறை சோதனை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.
நாட்டை விட்டு வெளியே எடுத்துச்செல்லப்படும் என்று அஞ்சிய சில முக்கிய ஆவணங்களை கண்டுபிடிக்க இச்சோதனை நடத்தப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
அரசு முதலீட்டு நிதியில் ஊழல் மற்றும் முறைகேடு செய்ததாக நஜிப் குற்றம்சாட்டப்பட்டிருந்தார். முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், நாட்டில் இருந்து வெளியேற ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












