பாரீஸ் கத்திக்குத்து: 'தாக்குதல்தாரி செச்சன்யாவில் பிறந்தவர்'
பிரான்ஸ் தலைநகரான பாரீஸின் மத்திய பகுதியில் சனிக்கிழமை மாலை நடந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல்தாரி 1997-ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும், ரஷ்ய குடியரசான செச்சன்யா அவர் பிறந்தார் என்றும் நீதிமன்ற தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், AFP
பிரான்ஸ் தலைநகரான பாரீஸின் மத்திய பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் கத்திக்குத்து சம்பவத்தில், ஒரு ஆயுததாரி தனது கத்தியால் 29 வயதான ஒரு நபரை கொன்றுள்ளார் என முன்னதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
பின்னர், பாரீஸின் ஒபேரா பகுதியில் இந்த தாக்குதல்காரி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 'அல்லாஹ் அக்பர்' என்று தாக்குதல்தாரி கோஷமிட்டதாக சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலை, தங்கள் படைவீரர் ஒருவர்தான் நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் குழு தெரிவித்துள்ளது.
பாரீஸில் கேளிக்கை மற்றும் இரவு வாழ்க்கைக்கு பெயர் போன ஒரு பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

பட மூலாதாரம், AFP
இந்த சம்பவத்தால் அங்கிருந்த மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த கஃபே மற்றும் உணவு விடுதிகளுக்குள் நுழைந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் பற்றி ட்விட்டர் பதிவு வெளியிட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், '' இன்று மீண்டும் பிரான்ஸ் தனது மண்ணில் ரத்தம் சிந்தியுள்ளது. ஆனால், நமது எதிரிகளிடம் ஒரு இஞ்ச்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












