சர்ச்சை கருத்து: மன்னிப்புக் கோரினார் எஸ்.வி. சேகர்

எஸ்.வி. சேகர்

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்துப் பதிவுசெய்திருந்த ஆபாசமான கருத்துகளுக்கு தொலைக்காட்சி நடிகரும் பாரதீய ஜனதாக் கட்சி உறுப்பினருமான எஸ்.வி. சேகர் மன்னிப்புக் கோரியுள்ளார். தனது ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்கிறவர்களுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார்.

எஸ்.வி. சேகர் வியாழக்கிழமையன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் தமிழக பல்கலைக்கழகங்கள் குறித்தும் 'திருமலை சடகோபன்' என்பவர் பதிவுசெய்திருந்த ஆபாசமான கருத்தை தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவரது இந்தச் செயல் மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்தது. பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்திருந்தன. மீன்வளத் துறை அமைச்சர் எஸ்.வி. சேகரை 'சைபர் சைக்கோ' என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்துக்கு எஸ்வி சேகர் மன்னிப்புக் கோரியுள்ளார். இது தொடர்பாக ஆங்கிலத்திலும் தமிழிலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருமலை சா என்ற நண்பர் எழுதிய ஒரு கருத்தை படிக்காமல் தவறுதலாக என் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுவிட்டேன். சற்றுநேரத்தில் என் நண்பன் அதை படித்துவிட்டு அதில் உள்ள வாசகங்கள் தரக்குறைவாக இருப்பதாக சொன்னான். உடனடியாக அது நீக்கப்பட்டும்விட்டது. அதில் உள்ள கருத்துகள் குறிப்பாக பெண்களைத் தரக்குறைவாக சொல்லக்கூடிய எதையும் நான் ஆதரிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

எஸ்.வி.சேகர் பகிர்ந்த சர்ச்சைக்குரிய ஃபேஸ்புக் பதிவு: வலுக்கும் எதிர்ப்பு

பட மூலாதாரம், Twitter

மேலும், "அனைத்து பெண்களையும் சகோதரிகளாக பார்க்கும், நடத்தும் குடும்பத்திலிருந்து வருபவன் நான். தனி மனித ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவன். தரம் தாழ்ந்த அரசியலிலோ, பொது வாழ்க்கையில் தரம் குறைந்த தனி மனித விமர்சனங்களிலோ எனக்கு என்றும் விருப்பம் கிடையாது. இந்த சம்பவத்தால் மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிகை சகோதரிகளுக்கும் என் மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன்." என்றும் கூறியுள்ளார்.

அதேநேரம், நான் நீக்கிவிட்ட பதிவை பத்திரிகை சகோதரிகளுக்கு மனவருத்தம் ஏற்படுத்திய பதிவை இப்போதும் தொடர்ந்து போட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு என் கண்டனத்தை பதிவுசெய்கிறேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நிலையில், சில பத்திரிகையாளர் அமைப்புகள் எஸ்வி சேகரைக் கைதுசெய்ய வேண்டுமென காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: